

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய மூன்று கேள்விகளை படித்தவுடன் எனக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன.
சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்கள் அமளி செய்த எதிர்க்கட்சிகளின் தலைவரான ராகுல் காந்தி அவருடைய குழந்தையான வாக்குத் திருட்டு குறித்தோ அல்லது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடு பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதற்காகத்தானே விவாதம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். இதுபோன்ற நடைமுறைகள் ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதவை. கேள்வி என்னவென்றால், இந்தக் கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதுதான் பிரச்னை.
அகில இந்திய வானொலியை இந்திரா காந்தி அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது; அதை தன்னாட்சி நிறுவனமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வலுத்த போது, பாபு ஜெகஜீவன் ராம் சொன்ன கருத்து நினைவுகூரத்தக்கது.
"ஓர் அரசு நிறுவனம் தன்னாட்சி அமைப்பாக இருந்தால் அதை அரசால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்பவர்களுக்கு அரசு எப்படி செயல்படுகிறது என்று தெரியாது!. ஒரு காலத்தில் சரியான செய்திகளுக்கு புகழ்பெற்றிருந்த பிபிசியில்கூட உலக யுத்தத்தின் போது, பிரிட்டனுக்குச் சாதகமான செய்திகள் ஒலிபரப்பப்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது'' என்றார் பாபு ஜெக ஜீவன் ராம். இப்போது, பிபிசி-யில் இந்தியாவுக்கு எதிராகவரும் செய்திகள் அனைத்துமே அப்பட்டமான இன வெறியின் அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
ராகுலின் முதல் கேள்வி: தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன்?
சந்தேகம்: இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் சில பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. அவை குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், ஆட்சிப் பணி தேர்வர்கள் மற்றும் இந்திய தணிக்கை அதிகாரி போன்றோர் ஆவர். இவர்களின் தேர்வு மற்றும் பதவிநீக்கம் குறித்து அரசியல் நிர்ணய சட்டத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 324-இன்படி 1950-இல் இருந்து தேர்தல் ஆணையர் என்று ஒருவர்தான் இருந்தார். அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக வந்து இந்திய அரசியல்வாதிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வரை ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்தல் ஆணையர்கள் குறித்து யாரும் நினைக்கவில்லை.
அன்றைய காங்கிரஸ் அரசு 1989-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி ஒரு புதிய சட்டத்தின் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு மூன்று உறுப்பினர்கள் என நிர்ணயித்தது.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையர் சேஷன் உச்சநீதிமன்ற கதவுகளைத் தட்டினார். அது மட்டுமல்ல, புதிய உறுப்பினர்கள் அறைக் கதவை பூட்டி விட்டார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப்பிறகு, 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிமுதல் தேர்தல் ஆணையம் 3 உறுப்பினர்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. கூடுதல் தேர்தல் ஆணையர்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சேஷனே நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று புதிய ஆணையர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்.
தேர்தல் ஆணையர் நியமனம், சேவை, பதவிக் காலம் தொடர்பாக 1991-இல் இயற்றப்பட்ட சட்டம் 1993-இல் மாற்றம் செய்யப்பட்டது. இது 2023-இல் முற்றிலும் மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கியமான சீர்திருத்தம் என்ன தெரியுமா? அதுவரை, தேர்தல் ஆணையரை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் நியமித்தார். 2023-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு புதிய சட்டம் ஏற்படுத்தும் வரை' தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி அடங்கிய குழு நியமிக்கும் என்று கூறியது.
நடைமுறையில் தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம், குறிப்பாக அதன் தலைமை நீதிபதி, விசாரிக்க வேண்டிவரும் என்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு இருக்க வேண்டும். நீதித் துறை அதில் தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்தது தவறு.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10.8.2023 அன்றும், அந்த சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 21.12.2023 அன்றும், அந்தச் சட்டம் அமலுக்கு வந்த 02.01.2024 அன்றும் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகதான் இருந்தார். இந்தத் தீர்ப்பு மாற்ற சட்டத்தை ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளும் எதிர்த்தது மட்டுமல்ல, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது இந்தப் பிரச்னையை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பியது ஏன் என்பது எனது முதல் சந்தேகம். அதுமட்டுமல்ல, சமீபத்திய செய்திகளின்படி இந்திய தகவல் உரிமைச் சட்ட ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதே சட்டம்தான் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவுக்கும் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
கேள்வி 2: குறிப்பிட்ட நபர்தான்தேர்தல் ஆணையராக வரவேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன்?
சந்தேகம்: எந்த ஆளும் கட்சியும், தான் விரும்பும் நபரைத்தான் முக்கியமான பதவிகளில் நியமிக்கும். காங்கிரஸôக இருந்தாலும் அப்படித்தான் செய்யும்; செய்தது (நவீன் சாவ்லா). கேள்வி என்னவென்றால், நியமிக்கப்பட்டவர்கள் நேர்மையாக நடக்கிறார்களா, இல்லையா என்பதுதான்.
குடியரசுத் தலைவர் முதல் தூதர்கள் வரை நியமனங்களை ஆளும் கட்சி தங்களுக்கு வேண்டியவர்களாய் நிரப்புவது உலகளாவிய நடைமுறை. அவசர நிலையின் போது மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது நபரை தலைமை நீதிபதியாக காங்கிரஸ் நியமிக்கவில்லையா? இப்படி முன் நிகழ்வுகள் இருக்க ராகுல் இதை நாடாளுமன்றத்தில் எழுப்பியது ஏன் என்பது என் சந்தேகம்.
கேள்வி 3: தேர்தல் ஆணையராகப் பதவியில் இருக்கும் போது மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணையர்கள் தண்டிக்கப்பட முடியாத வகையில் சட்டத்தில் மாற்றம் செய்து இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத வரலாற்றை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு செய்தது, தேர்தல் ஆணையர்களுக்கு இந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அளித்தது ஏன்?
சந்தேகம்: அரசு ஊழியர்கள் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டால் நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது லஞ்ச வழக்கு தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆளுநர் சென்னாரெட்டி அனுமதி வழங்கிய போது ஜெயலலிதா அதை நீதிமன்றத்தில் கேள்வி கேட்டார். நீதிமன்ற சட்டப் பாதுகாப்பு என்பது சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். லஞ்சம் போன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு நீதிமன்றத்தின் மூலம்தான் பரிகாரம் காண முடியும் என்றது.
போலீஸாருக்கு துப்பாக்கியும், லத்தியும் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைத்தபடி அதைச் செயல்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் பதவி ரீதியாக எடுக்கும் முடிவுகளுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. ஆகவே, சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு என்பது முழுமையான பாதுகாப்பு அல்ல. அது சட்டத்துக்கு உள்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவின் இதற்கு முந்தைய தேர்தல் முடிவும், காரைக்குடியில் சிதம்பரத்தின் தேர்தல் முடிவும் இன்றுவரை பிரச்னையாகப் பேசப்படுவதை மறுக்க முடியுமா? அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுவது மிகவும் தவறானது; வேதனையானது; வருந்தத்தக்கது. இந்தத் தவறுகளை சரியான ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்து வாதிட்டால் அவற்றை விசாரிக்கும் துணிவும், மாண்பும் இந்திய நீதிமன்றங்களுக்கு இன்றும் இருக்கின்றன என நான் நம்புகிறேன்.
ராகுலிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் குறித்துப் பேச வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் ஏன் அதைப் பேசாமல், தேர்தல் ஆணையர் குறித்து மட்டும் பேசுகிறார்? தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் அவர் சிறுபான்மை உறுப்பினராக இருந்தாலும், தேர்வுக்கு வரு பவர்களின் மீது அவர் முறையான ஆட்சேபணைகளை அப்போதே எழுப்பினாரா என்பதுதான் கேள்வி. அவை நிராகரிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால், விரும்பிய வரை நியமிப்பது ஆளுங்கட்சியின் உரிமை இல்லையா? இதற்கு காங்கிரஸோ ஏனைய எதிர்க்கட்சிகளோ விதிவிலக்கல்லவே!
கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.