

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு. ஞானியைப் பொருத்தமட்டில் உறவுகளை மறந்து அமைதியை நாடி தங்கள் வழியில் செல்வர். குழந்தைகள் தங்களுக்கான மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொண்டிருப்பர்.
மனநலன் பாதித்தோர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, யாரும் அறியாத மனிதராய் வெயில், குளிர், மழையை தாங்கிக்கொண்டு, கிடைத்த இடத்தில் ஒதுங்கி, குப்பைத் தொட்டிகளில் கிடைப்பதை உண்டு, இறக்கும் காலம் தெரியாமலும், வாழும் காலத்தில் ஏதுமறியாமல் நரகத்தை அனுபவித்து வருவர். குடும்பம், மனைவி, மக்கள் என்று எவ்வித சுமையுமின்றி, போட்டி, பொறாமை, ஆணவம், குற்றம் காணல் போன்ற தீயகுணங்களின்றி மனித மனநிலைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பர்.
ஒவ்வொருவரும் ஒருவிதம் என்பதுபோல, மனநலன் பாதிப்புக்குள்ளான இவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். வீட்டில் இருந்தால் தொந்தரவு என்று உறவுகளால் விரட்டி அடிக்கப்படும் இவ்வாறானோர் கண்போன போக்கில், நகரங்களில் கால்கடுக்க அலைந்து திரிகின்றனர். கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.
மதம், இனம், மொழி பாரபட்சமின்றி காணப்படும் இத்தகையோரைக் கண்டால் அச்சம் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அவர்களை ஆதரித்து, மறுவாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புகளை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.
இந்தியாவில் உள்ள 146 கோடி மக்கள்தொகையில், லட்சத்தில் ஒருவர் (கூடுதலாகவும் இருக்கலாம்) மனநலன் பாதிப்புக்குள்ளாகி சாலைகளில் திரிவதைக் காணமுடிகிறது. பாசம் காட்டுவது, பரிதாபப்படுவது என மக்களிடையே உணர்வுகள் மேலோங்கினாலும், அவர்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்ல யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆங்காங்கே மனநலன் பாதித்தோருக்கான தனியார் மையங்கள் இருப்பினும், அங்குள்ளோர் சரியான முறையில் கவனித்துக் கொள்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. மன நலன் பாதிப்பு என்பது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக்கூடும். விபத்தில் சிக்கி மூளையில் பாதிப்பு ஏற்பட்டாலும், பெற்ற தாய், தந்தை கவனிக்காததாலும், கட்டிய மனைவி, கணவர் விட்டுச் சென்றதாலும், அதிகம் படித்து, இரவு, பகல் பாராமல் உழைத்து, அதனால் மனம்பிறழ்ந்து, பிறந்தது முதல் மனிதராகப் பார்க்கப்பட்டவர், அதன் பிறகு மனநலன் குன்றியோராகக் கவனிக்கப்படுகிறார்.
மனதில் குப்பைகளைச் சேகரித்து வைக்கும் மனிதர்களைப்போல அல்லாமல், ஊரைச் சுத்தம் செய்யும் வகையில், அழுக்கு மூட்டைகளை தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு அவர்கள் அலைவதை பல இடங்களில் காணலாம். இவ்வாறானவர்களைப் பேருந்துகளிலோ, இதர வாகனங்களிலோ யாரும் அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. இதனால், நடடா ராஜா, நடடா என்று தங்களுக்குள்ளாகவே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர்.
கவலைப்பட்டு கண்ணீர்விடும் மனநலன் குன்றியோரைவிட, எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருப்போர்தான் இங்கு ஏராளம். தேனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நாமக்கல்லுக்கு வந்து, மக்கள் குடித்துவிட்டு சாலையில் வீசும் தண்ணீர் பாட்டில்களை தேடிச் சென்று எடுப்பதும், பேருந்து நிலையத்தில் உள்ள தொட்டியிலிருந்து நீரை நிரப்பி பாட்டில்களால் வளையம் ஏற்படுத்தி தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டிருப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி அழித்தாலும், தண்ணீர் பாட்டில் சேகரிப்பை அவர் கைவிடுவதில்லை.
சேலத்தில் மன நலன் பாதித்த இளம்பெண் ஒருவர், சாலையில் நடுவே படுத்தவாறு, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பகுதியில் தன்னை மறந்து தவிக்கும் கொடுமைக்கு உள்ளாகி வருகிறார். வெட்கம், அச்சம், தன்மானம் போன்ற எதையும் இதுபோன்றோர் கண்டுகொள்வதில்லை. பசி மட்டும்தான் அவர்களை வாட்டுகிறது. இதற்காக உணவகங்கள் முன் கையேந்தி காத்திருக்கின்றனர்.
தங்களது நிலை என்னவென்று தெரியாது திரியும் இவர்களை, அந்த வழியாகச் செல்லும் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ மீட்டு காப்பகத்தில் சேர்க்க முயற்சிப்பதில்லை. ஓரிருவர் கதை இவ்வாறு என்றால், இவர்களைப்போல மன நலன் பாதித்து, சாலைகளில் உலவும் ஆயிரக்கணக்கானோர் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மன நலன் பாதித்தோரைத் தேடிப்பிடித்து அவர்களைத் தூய்மைப்படுத்தி, உறவுகளின் விவரங்களைக் கேட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களை ஒப்படைத்த நிகழ்வுகள் அரங்கேறின.
ஆனால், சில ஆண்டுகளாக அவ்வாறான செயல்பாடுகள் ஏதுமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மன நலன் பாதித்தோருக்கான சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, சாலையில் திரியும் மனநலன் குன்றியோரை மீட்டு அவர்களைப் புதிய மனிதர்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மனிதநேயம் மேலோங்கும்.
இறக்கும் காலம் தெரிந்தால், வாழும் காலம் நரகமாகிவிடும். அவர்கள் தங்களுக்கே தெரியாமல் வாழும் காலத்திலேயே மரணத்தை எதிர்நோக்கியும், நரக வேதனையை தினமும் அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றனர். வெளிநாடுகளில் இவ்வாறான மன நலன் குன்றியோரைப் பார்ப்பது அரிது; இந்தியாவில் மூலைக்குமூலை ஒருவர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
நகரங்களைத் தூய்மையாக வைத்திருக்க ஆர்வம் காட்டும் அரசு, மனிதர்களின் மனதில் எங்கோ ஓரிடத்தில் பிறழ்ந்த பகுதியையும் சரிசெய்து, அவர்களையும் சமூக நீரோட்டத்தில் இணைத்து இந்த உலகம் அனைவருக்குமானது என்பதை நிலைநாட்ட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.