நவீன இந்தியாவின் வளர்ச்சி நாயகன்

இளம் வயதிலேயே அரசியல் களத்துக்கு வந்துவிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் கண்ட கனவுதான், இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.
வாஜ்பாய்
வாஜ்பாய்படம் - DNS
Updated on
2 min read

இளம் வயதிலேயே அரசியல் களத்துக்கு வந்துவிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் கண்ட கனவுதான், இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

1977-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய்க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் நெடுஞ்சாலைகள் மிகச் சிறப்பாக போடப்பட்டிருப்பதையும், பராமரிக்கப்படுவதையும் கண்டார். இந்தியாவில் 10 மணி நேரத்தில் கடக்கும் தொலைவை ஒரு மணி நேரத்தில் கடக்க முடிவதைக் கண்டு வியந்தார்.

இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமானால், போக்குவரத்து மிக எளிதாக வேண்டும். அதற்கு சாலைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால், அதைச் செயல்படுத்தும் வாய்ப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998-இல் அவர் பிரதமரான போதுதான் கிடைத்தது. 1977-இல் அவர் கண்ட கனவுதான், 1998-இல் "தங்க நாற்கர சாலை'யாக உருவெடுத்தது.

வாஜ்பாயை நினைக்கும்போதெல்லாம், "தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனி நபர் நலன்' என்று அவர் சொன்னதுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தேசத்தை நேசித்தவர். அதை பாஜக தொண்டர்களின் மனதிலும் ஆழப் பதிய வைத்தவர்.

விடுதலைக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சுற்றியே நடந்து வந்த இந்திய அரசியலை, பாஜகவை சுற்றி சுழல வைத்தவர். அரை நூற்றாண்டு காலம், "காங்கிரஸ் - காங்கிரஸ் எதிர்' என்றிருந்த இந்திய அரசியல், கடந்த 30 ஆண்டுகளாக, "பாஜக - பாஜக எதிர்' என்று மாறியிருக்கிறது. இந்த அசாத்திய சாதனையை செய்து காட்டியவர் வாஜ்பாய்.

1999 மக்களவைத் தேர்தல் வரை தங்களால் மட்டுமே நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து வந்தது. அதை மக்களிடம் நம்ப வைப்பதற்காக, மொரார்ஜி தேசாய், சரண் சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோரின் அரசை சூழ்ச்சி செய்து கவிழ்த்தது . நாட்டில் நிலையான அரசு அமைவதை தடுத்து, இந்தியாவின் வளர்ச்சியை முடக்கிப் போட்டது.

1998-இல் எதிரும் புதிருமான 23 கட்சிகளுடன் வாஜ்பாய் அமைத்த கூட்டணி ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது. ஆனாலும், 1999 மக்களவைத் தேர்தலில் வென்று, 23 கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை முழு 5 ஆண்டுகளும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இந்தியாவில் ஒரு கூட்டணி ஆட்சியை முழு பதவிக் காலமும் நடத்த முடியும் என்பதை நிரூபித்தார்.

அதன் பிறகுதான் அரசுகளைக் கவிழ்ப்பதைக் கைவிட்டு, கூட்டணி ஆட்சியை நடத்தும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. இந்த மாற்றத்திற்கும் வாஜ்பாய்தான் காரணம்.

அவர் பிரதமராக இருந்தபோது பாஜக கட்சியிலும் ஆட்சியிலும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என விரும்பினார். அதைச் செயல்படுத்த துணிந்தார். அதன் விளைவாகத்தான் பாஜகவின் தேசிய தலைவராக, பட்டியலினத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன், தமிழக பாஜக தலைவராக பட்டியலினத்தவரான கிருபாநிதி போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலரை மத்திய அமைச்சராக்கினார். அவர்களை அடையாளம் கண்டு தலைவர்களாக உருவாக்கினார். அதன் தாக்கம்தான் இன்று பாஜகவை உலகின் மிகப் பெரிய கட்சியாக வளர்த்தெடுத்திருக்கிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவால்தான் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு இன்று வளர்ந்த மாநிலம். அதற்கு மிக முக்கியமான காரணம் வாஜ்பாய் ஆட்சி. வாகன உற்பத்தி ஆலைகளும், மென்பொருள் நிறுவனங்களும் இல்லையெனில் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சி சாத்தியமில்லை. வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் சென்னையில் "டைடல் பார்க்' எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்பட்டது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமான வாகன உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டதும் அவருடைய ஆட்சி காலத்தில்தான்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் நாடாளுமன்றத்தில் பேசினாலும், ஐநா சபை போன்ற உலக அரங்குகளில் பேசினாலும், திருக்குறள் மற்றும் மகாகவி பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி பேசுவார். உலக அரங்குகளில், "உலகின் மூத்த மொழி தமிழ்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வருவதற்கு முன்னோடி வாஜ்பாய்தான்.

பிரதமர் நரேந்திர மோடியை மக்களுக்கு அடையாளம் காட்டியதும் வாஜ்பாய்தான். கட்சிப் பதவிகளைத் தவிர, எந்த அரசுப் பதவியும் வகித்திராத நரேந்திர மோடியை 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்ந்தெடுத்தது வாஜ்பாய்தான். குஜராத் முதல்வர் பதவியில் சுமார் 13 ஆண்டுகள் முத்திரை பதித்த மோடி, நாட்டின் பிரதமராக வரலாறு படைத்துக் கொண்டிருப்பதற்கும், உலகத் தலைவராக உயர்ந்திருப்பதற்கும் வாஜ்பாய் தான் காரணம்.

ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே மாற்றுக் கட்சிகள் தயங்கின. வாஜ்பாய் பெரும் தலைவராக உருவெடுத்த பிறகு அந்தத் தயக்கம் உடைந்தது. அவரின் தொலைநோக்குப் பார்வையும், உழைப்பும், அறிவாற்றலும், சமரசமில்லாத தேசப்பற்றும் பாஜகவின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக அமைந்தன.

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் வாஜ்பாய்க்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நவீன இந்தியாவை கட்டமைத்த வளர்ச்சி நாயகன் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளில் இவற்றை நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். இந்த தேசம் இருக்கும் வரை வாஜ்பாயின் புகழும்

நிலைத்திருக்கும்.

கட்டுரையாளர்:

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com