

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசுபொருளானது. கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் மெஸ்ஸி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய கால்பந்து ரசிகர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். அந்த நிகழ்வுகளுள் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அரங்கேறிய குளறுபடிகள் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.
கால்பந்து வரலாற்றின் தனிப் பெரும் ஆளுமையாகிய மெஸ்ஸிக்கு எழுபது அடி உயரச் சிலை திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரைச் சரியாகப் பார்க்க முடியாத கால்பந்து ரசிகர்கள் மைதானத்தின் உள்ளே அதிரடியாக நுழைந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை அலங்காரங்களைப் பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு அவ்விடமே போர்க்களம் போல் சிறிது நேரம் காட்சியளித்தது.
ரசிகர்களில் பலரும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கிய நிலையில், தங்களின் கால்பந்துக் கதாநாயகனை ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் பார்க்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியால் மேற்கண்டவாறு ரகளையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் கொல்கத்தா நிகழ்வுக்குச் சென்றிருந்த இந்திய கால்பந்து ரசிகர்கள், தங்கள் சக்திக்கு மீறிச் செலவழித்துச் சென்றபோதிலும் மெஸ்ஸியைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் பதவி விலகினார். நல்வாய்ப்பாக, பிற நகரங்களில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வுகள் அசம்பாவிதம் ஏதுமின்றி நடந்து முடிந்திருப்பது நிம்மதி அளிக்கிறது.
இதேபோன்றுதான், கடந்த ஜூன் மாதம் விராட் கோலியை உள்ளடக்கிய பெங்களூரு ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். போட்டிகளில் வென்று கோப்பையைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு நகரத்தில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடியதில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழக்க, முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மெஸ்ஸி பங்கேற்ற கொல்கத்தா நிகழ்வில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும், அப்பாவி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது ஏற்கத்தக்கதல்ல. விளையாட்டு வீரர்கள்தாம் என்றில்லை, திரைத் துறையினர் தொடர்பான நிகழ்வுகள் யாவற்றிலும் ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடுவது நம் நாட்டில் இயல்பான விஷயமாகிவிட்டது.
வெளிப்புற படப்பிடிப்பு, நடிகர், நடிகைகளால் வணிக நிறுவனங்கள் திறந்து வைக்கப்படுதல் போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் ஒருசில நிமிஷங்களில் அந்த இடங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி விடுகின்றன. அவசர ஊர்திகள்கூட செல்ல இயலாத அளவுக்கு அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாவது இயல்பாகி விட்டது. இத்தகைய தருணங்களில் ரசிகர்களின் நேரம்தான் செலவாகிறதே தவிர அவர்களுக்கு செலவு ஏற்பட வாய்ப்பில்லை.
அதேசமயம் மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் பிரபல இசையமைப்பாளர்களின் திரை இசை நிகழ்ச்சிகள் பெரும் செலவு செய்து நுழைவுச் சீட்டு வாங்கும் ரசிகர்களில் பலருக்கும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்துவிடுவதைக் காண்கிறோம்.
அண்மையில் ஒசூரில் நடைபெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சிக்காக இணையவழியில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெற்ற பலரும் நிகழ்விடத்துக்குள் அனுமதிக்கப்படாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின் அமைப்பாளர்கள் வணிக நோக்கத்தில், பெரும் லாபம் ஈட்டவே இவற்றை ஏற்பாடு செய்கின்றனர் என்பது வெளிப்படை. அந்த நோக்கத்தில் தவறு ஒன்றும் இல்லை எனலாம். ஆனால், ஆர்வக் கோளாறு காரணமாக இத்தகைய நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்களைப் பெருமளவில் செய்யும் இத்தகைய ஏற்பாட்டாளர்கள், நேரடியாக வாங்கப்படும் நுழைவுச் சீட்டுகள், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் நுழைவுச் சீட்டுகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடாமல் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்கள் ஒரு பகுதியினர் திடலின் உள்ளே அனுமதிக்கப்படாத நிகழ்வுகள் தொடர்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் சென்னை நகரில் ஏற்பாடு செய்யப்ப்பட்ட இது போன்ற திரையிசை நிகழ்வுகள் சிலவற்றிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது, குடிநீர் வசதி இல்லாதது, போதிய வாகன நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்படாதது ஆகியவை குறித்த புகார்கள் எழுந்தன. நிகழ்விடங்களுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல்களுக்கும் குறைவில்லை.
இவைமட்டுமா? நாடெங்கிலும் ஆண்டுதோறும் கேளிக்கை விடுதிகளிலும், மைதானங்களிலும், கடற்கரைகளிலும் களைகட்டும் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்பவர்கள் பலரும் ஏற்பாட்டுக் குறைபாடுகள் குறித்து புகார் எழுப்புவது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. விளையாட்டு-திரைத் துறை தொடர்பான நிகழ்வுகளையும், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் போன்றவற்றையும் பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யும் அமைப்புகள் அல்லது அமைப்பாளர்களின் செயல்பாடுகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், பெரும் பணம் செலவழித்து அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மனநிறைவு அடையும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்வதை உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.