மொட்டுகள் கருகாமல் மணம் வீச...

பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம்.
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Updated on
2 min read

வளர்ச்சி மனிதகுலத்துக்கு கிடைத்த வரம். அதில் ஸ்கேன் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மனிதர்களின் உடல்நலப் பிரச்னைகளை நுட்பமாக அறிந்து மருத்துவம் செய்யும்வகையில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், அவற்றில் ஒன்று ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை அறியும் கருவியாகவும், அது பெண் கரு என்றால், அதை அப்போதே அழித்துவிடும் நிலைக்கான ஆயுதமாகவும் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுகி றது. தாயின் உடல்நலத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் அறியவந்த அற்புதக் கருவி எதிர்மறையாக கையாளப்படுகிறது.

இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்தச் செயல், வருங்கால சமுதாயத்தில் பாலின விகிதத்தில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் கருக்கொலை சம்பவம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. பென்னாகரத்தை அடுத்த ஏரியூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், ஏற்கெனவே 2 பெண் குழந்தைகளுக்குத் தாய். இந்த நிலையில், மூன்றாவதாக கர்ப்பமான நிலையில் ஆண் வாரிசு வேண்டும் என்ற குடும்பத்தினரின் ஆசை மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக, இடைத்தரகர்கள் உதவியுடன் சட்டவிரோதமாகப் பாலினத்தைக் கண்டறிந்தார்.

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சேலம் அருகேயுள்ள ஒரு செவலியர் மற்றும் பெண் இடைத்தரகர் மூலம் வீட்டிலேயே கருவை அழிக்க முயன்றதில், அந்தப் பெண் இறந்துபோனார்.

இது தனிப்பட்ட யாரோ ஒருவருக்கு நேர்ந்த கொடுமையல்ல. தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும் வேரூன்றியுள்ள ஒரு மிகப்பெரிய பிற்போக்குத்தன குற்றத்தின் நேரடி வெளிப்பாடு.

பாதுகாப்பற்ற சட்டவிரோத முறையில் செய்யப்படும் இத்தகைய கருக்கலைப்புகள், சிசுவை மட்டுமல்லாது சமயத்தில் தாயையும் சேர்த்துக் கொன்றுவிடுவதால் இது கொலைக் குற்றத்துக்கு சமமே.

கருவில் இருக்கும் மொட்டு மலர்வதற்கு முன்பே கருகுவதற்கும் சில சமயங்களில் செடியும் சேர்ந்து சாம்பலாவதற்கும் மருத்துவத் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் மனிதவிரோதச் செயல்பாடுகளே காரணமாகின்றன.

இந்த சம்பவம்போல, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் கார்களிலேயே சிறிய ஸ்கேன் கருவியை வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட நடமாடும் ஸ்கேன் மையங்களைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கேன் கருவிகள், சீனாவிலிருந்து கால்நடை மருத்துவத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டவை என அறியப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அண்டை மாநிலங்களுக்கு கர்ப்பிணிகளை அழைத்துச் சென்று கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

ஐ.நா. மக்கள்தொகை நிதிய அறிக்கையின்படி நம் நாட்டில் நடைபெறும் தாய்மார்கள் இறப்பில், கணிசமான அளவு இத்தகைய பாதுகாப்பற்ற கருக் கலைப்பால் நிகழ்வதாகக் கூறப்படுவது, நம்மை அதிரவைக்கும் உண்மையாகும்.

அண்மையில் வெளியாகியுள்ள தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு 6-ஆவது சுற்றில் தமிழகத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.4 முதல் 1.7 சதவீதம் வரை நிலை பெற்றுள்ளது. இது மறுசீரமைப்பு நிலை எனப்படும் 2.1 சதவீதத்தைவிடக் குறைவானதாகும். அதேசமயம் பிறப்பு பாலின விகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், உயிரியல்ரீதியான சமநிலையை எட்ட இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

கடந்த 2023-இல் தமிழகத்தில் 902,306 பிறப்புகள் பதிவாகியுள்ளன. பிறப்பு விகிதம் 11.7 சதவீதம். ஆனால், 2024-இல் பிறப்பு எண்ணிக்கை 8,42,412-ஆகக் குறைந்துள்ளது. இது 2023-ஐவிட 6.6 சதவீத சரிவாகும். அதேபோல, 2023-24-இல் தமிழகத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 941 என இருந்தது. 2024-25 பிப்ரவரி வரை இது 940-ஆகஉள்ளது. சராசரியாக கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளதாக குடும்பநல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண் பாலின விகித சரிவு எதிர்காலத்தில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போவது தொடங்கி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது வரை கடுமையான சமூக விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்காகவே இந்திய அரசு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பேறுகாலப் பாலினத் தேர்வு தடைச் சட்டம் 1994-ஐ கடுமையாக்கியுள்ளது.

அதேபோல தமிழகத்தில் கர்ப்பமாகும் ஒவ்வொரு பெண்ணும் பிக்மி எண் ணைப் பெறுவது கட்டாயம். இந்த எண் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் பெற முடியாது. இது மேம்படுத்தப்பட்ட 3.0 மென்பொருள். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணிகள் இடம்பெயர்ந்தாலும் அவர்களைக் கண்காணிக்க முடிகிறது.

ஒரு பெண் கர்ப்பமாகப் பதிவு செய்யப்பட்டு, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றால். அந்த கர்ப்பம் எப்படிக் கலைந்தது என்று சுகாதாரத் துறை கேள்வி எழுப்புகிறது. இது கள்ளக் கருக்கலைப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

அதேபோல, அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களில் 'சைலண்ட் அப்சர்வர்' போன்ற கருவிகளைப் பொருத்துவதன் மூலம், ஒவ்வொரு ஸ்கேனும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலின சமத்துவம் குறித்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பெண் குழந்தையும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பெற்றுள்ளது. பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம். சட்டத்தின் கரங்கள் குற்றவாளிகளின் கழுத்தை நெரிக்கும் அதேவேளையில், சமூகத்தின் கரங்கள் பெண் குழந்தைகளை அரவணைக்க நீண்டால் மட்டுமே, இந்த மொட்டுகள் கருகாமல் மலர்ந்து மணம் வீசும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com