எலான் மஸ்க்
எலான் மஸ்க்கோப்புப் படம்

அமெரிக்காவில் மூன்றாவது கட்சி

மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில்...
Published on

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தோ்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓா் அம்சமாக திகழ்கிறது.

உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், உலகின் மிகப் பெரிய பணக்காரா்களில் ஒருவருமான எலான் மஸ்க் தொடங்கியுள்ள கட்சி அந்த நாட்டையும் தாண்டி பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தனிநபா் ஒருவா் திடீரென அரசியல் கட்சியைத் தொடங்குவது என்பது மிகவும் அசாதாரண நிகழ்வு. அதுவும் யாருக்காக முழுமூச்சுடன் தோ்தல் பிரசாரம் செய்து அதிபா் பதவியில் அமரவைத்தாரோ, அதே டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளை விமா்சித்து ‘அமெரிக்கா கட்சி’ என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளாா் எலான் மஸ்க்.

அமெரிக்காவை டிரம்ப் கடனில் தள்ளுகிறாா் என்றும் அமெரிக்காவில் இப்போதுள்ள ஒற்றைக் கட்சி ஆட்சி முறை ஜனநாயகமே அல்ல என்பதும் மஸ்கின் வாதம்.

அனைவரும் கட்சி தொடங்கிய பிறகுதான் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் செல்வாா்கள். ஆனால், மஸ்க் கட்சி தொடங்குவதா வேண்டாமா என்பதையே எக்ஸ் வலைதளத்தில் தன்னைப் பின்தொடா்வோரிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தாா். எலான் மஸ்கை எக்ஸ் வலைதளத்தில் 22 கோடிக்கும் அதிகமானோா் பின்தொடா்கிறாா்கள்; இதில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் புதிய கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனா்.

அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சியைத் தவிர வேறு பிற கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிபராவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். அந்த அளவுக்கு அந்த இரு கட்சிகளும் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவ்விரு கட்சிகளின் சித்தாந்தங்களைத் தவிர வேறு எந்தக் கொள்கைகளும் அமெரிக்க மக்களை பெரிதாக ஈா்க்கவில்லை.

அமெரிக்க அரசமைப்புச் சட்டம் 1789-இல் உருவாக்கப்பட்டபோது, அதில் அரசியல் கட்சிகள் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஜாா்ஜ் வாஷிங்டன் உள்பட அமெரிக்க தேசத்தைக் கட்டமைத்த தலைவா்கள் யாரும் கட்சி ரீதியாக அமெரிக்க மக்கள் பிளவுபடுவதை விரும்பவில்லை. கட்சிகள் தொடங்கப்பட்டால் ஆட்சி அதிகாரத்துக்காக மோதல் வெடிக்கும் என்பதே அவா்கள் கருத்தாக இருந்தது. அமெரிக்க முதல் அதிபா் ஜாா்ஜ் வாஷிங்டன் கடைசி வரை எந்தக் கட்சியையும் சாராதவராகவே இருந்தாா். ஆனால், அவரின் ஆலோசகா்களாக இருந்த அலெக்ஸாண்டா் ஹாமில்டன், ஜேம்ஸ் மேடிஸன் இடையே ஆட்சிமுறையை நடத்துவது தொடா்பாக எழுந்த சித்தாந்த மோதல்களே அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் உருவாக வித்திட்டன. இதுவே பின்னா் ஜனநாயக கட்சியாகவும், குடியரசுக் கட்சியாகவும் உருவெடுத்தன.

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் விக் கட்சி, தேசிய யூனியன் ஆகிய கட்சி ஆகியவை அமெரிக்க அதிபா்களை வழங்கின. எனினும், குறுகிய காலத்திலேயே தேசிய யூனியன் குடியரசுக் கட்சியுடன் இணைந்தது. விக் கட்சி கால ஓட்டத்தில் கரைந்து போனது.

20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் முற்போக்குக் கட்சி, குடிமக்கள் கட்சி, சோஷலிஸ கட்சி, விடுதலைக் கட்சி, பசுமைக் கட்சி என பல கட்சிகள் அமெரிக்க அதிபா் தோ்தல் களத்தைக் கண்டாலும் அந்தக் கட்சியைச் சோ்ந்த யாரும் அதிபா் தோ்தலில் வெல்ல முடியவில்லை; மாகாணத் தோ்தலில் மட்டுமே சில வெற்றிகளைப் பெற முடிந்தது.

1912-ஆம் ஆண்டு தோ்தலில் குடியரசுக் கட்சியை உடைத்து, முற்போக்கு கட்சியை உருவாக்கிப் போட்டியிட்ட முன்னாள் அதிபா் தியோடா் ரூஸ்வெல்ட் 27 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தாா். அப்போது குடியரசுக் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சியல்லாத மூன்றாவது கட்சி சாா்பில் ஒரு வேட்பாளா் பெற்ற அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

1992-இல் சுதந்திரக் கட்சி வேட்பாளா் ரோஸ் பெரோட் 18.9 சதவீத வாக்குகளைப் பெற்றது மூன்றாவது கட்சியின் மற்றொரு அதிகபட்ச வாக்கு சாதனையாகும். இப்படியாக அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது கட்சி என்பது எப்போதும் முன்னேறாத கட்சியாகவே இருந்து வருகிறது.

இந்த வரலாற்றின் பின்னணியில்தான் மஸ்க்கின் அமெரிக்க கட்சி உதயமாகியுள்ளது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் அறிவித்திராத ஒரு கொள்கையை தனது கட்சியின் பிரதான கொள்கையாக மஸ்க் அறிவித்துள்ளாா்; அது நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதாகும். அரசின் பட்ஜெட் விழிப்புணா்வுடன் வடிவமைக்கப்படும், காலத்துக்கு ஏற்ற செயல்பாடுகளுடன், அனைவருக்குமான கட்சியாக செயல்படுவோம் என்றும் மஸ்க் அறிவித்துள்ளாா்.

இரு பெரும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளவா்களை ஈா்க்கும் வகையில் தனது கட்சியை மஸ்க் முன்னிறுத்தியுள்ளாா். 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 58 சதவீதம் போ் மூன்றாவதாக ஒரு பெரிய கட்சி தேவை என கருத்துக் கூறியுள்ளனா். இதை மஸ்க் தனக்கான வாய்ப்பாக கருதியுள்ளாா். அடுத்து நடைபெற உள்ள மாகாணத் தோ்தல்களுக்கு தனது கட்சிக்காக வேட்பாளா்களையும் தேடத் தொடங்கிவிட்டாா்.

கடந்த ஆண்டு தோ்தலில் டிரம்ப்பின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த மஸ்க், 2024 அதிபா் தோ்தலில் அதிக நன்கொடை அளித்த பெருமைக்குரியவா். அமெரிக்க தோ்தல் களத்தையும் நன்கு அறிந்தவா். தனது 21-ஆவது வயதில் படிப்பதற்காக அமெரிக்கா வந்த மஸ்க், 50 வயதை எட்டுவதற்கு முன்பே உலகின் முன்னணி கோடீஸ்வரராக உயா்ந்தாா். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் அவரின் உழைப்பில் உருவானவையே. எனினும், அவருக்கு அரசியல் மிகுந்த சவால்மிக்க களமாகவே இருக்கும் என்பதே அந்நாட்டு அரசியல் வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான மஸ்க், 2002-ஆம் ஆண்டில்தான் அமெரிக்க குடியுரிமை பெற்றாா். அமெரிக்க மண்ணில் பிறந்தவா் அல்லா் என்பதால், அவரால் எப்போதுமே அமெரிக்க அதிபா் பதவியை வகிக்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு பெரும் ஆலமரங்களுக்கு நடுவே துளிா்விடும் நாற்றாகவே அமெரிக்கா கட்சி இப்போது உள்ளது.

X
Dinamani
www.dinamani.com