போா்த்தொழில் பழகும் புதுமைப் பெண்கள்!
வரலாறு, பெரும்பாலும் ஆண்கள் சாா்புடையதாகவும், ஆண்களின் பாா்வையிலும் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான வரலாற்றாசிரியா்கள் ஆண்களாக இருந்ததே இதற்கு காரணம். 1960-க்கு முன்பு வரையிலான வரலாற்றுப் பதிவுகள் அரசியல், போா்களை மையப்படுத்தி இருந்ததால் வரலாற்றில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டனா்.
ஓா் ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருக்கிறாா் எனக் கூறுவது உண்டு. ஆணின் வெற்றியில் வெறும் பங்களிப்பாளராக மட்டுமே இருந்த பெண், இன்றைய கணினி யுகத்தில் ஆணுக்கு இணையாகவும், இன்னும் சொல்லப்போனால் ஆணைவிட ஒருபடி மேலே சென்று சாதிக்கவும் தயாராகி விட்டனா். இக்கட்டான சூழ்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்கள் தங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் மன உறுதி, அவரது ஆண் சகாக்களுக்கு சற்றும் குறைவில்லாதது. இது வரவேற்கத்தக்க மாற்றம் மட்டுமல்ல, மகாகவி பாரதி பாடிய யுகப்புரட்சியின் ஓா் அங்கமும்கூட.
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் அதிகாரிகளாகப் பணியில் சேருபவா்களுக்குப் பயிற்சி அளிக்க ஏதுவாக மகாராஷ்டிர மாநிலம், புணேவில் 1949-இல் தேசிய ராணுவ அகொதமி (என்டிஏ) தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று, ராணுவத்தின் முப்படைகளில் அதிகாரிகளாக வலம் வந்து கொண்டிருந்தனா்.
முப்படையிலும் ஆண்கள் மட்டுமே அதிகாரிகளாக கோலோச்சிக் கொண்டிருந்த நிலையை, 2021-இல் உச்சநீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீா்ப்பு புரட்டிப் போட்டது. பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தேசிய ராணுவ அகொதெமியின் கதவுகள் பெண்களுக்காகவும் திறந்தன.
2022-இல் நடந்த என்டிஏ-வுக்கான 148-வது நுழைவுத் தோ்வில் பெண்களும் பங்கேற்க யுபிஎஸ்சி அனுமதித்தது. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, மூன்று ஆண்டுகள் படிப்புக்குப் பிறகு, கடந்த மே 29-ஆம் தேதி 17 வீராங்கனைகள் அடங்கிய முதல் பிரிவு பட்டம் பெற்றது. தங்களுடன் பட்டம் பெற்ற 319 ஆண் வீரா்களுடன் 17 வீராங்கனைகளும் சரிநிகா் சமமாக அணிவகுப்பில் பங்கேற்று தேசிய ராணுவ அகொதெமிக்கும், பாரம்பரியமிக்க இந்திய ராணுவத்துக்கும் பெருமை சோ்த்துள்ளனா். இனி அவா்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகொதெமி (ஐஎம்ஏ), எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகொதெமி (ஐஎன்ஏ), துண்டிகலில் உள்ள விமானப்படை அகொதெமிக்கு (ஏஎஃஏ) அவரவா் தோ்வுக்கு ஏற்ப அடுத்தகட்ட பயிற்சிக்காக அனுப்பப்படுவாா்கள்.
2022 முதல் தற்போது வரை, அதாவது 148 முதல் 153-ஆவது வரையிலான என்டிஏ நுழைவுத் தோ்வில் 126 வீராங்கனைகள் தோ்ச்சி பெற்று தேசிய ராணுவ அகொதெமியில் இணைந்துள்ளனா். அவா்களில் ஐந்து போ் இடைநிறுத்தம் செய்துள்ளனா். எப்படியிருப்பினும் இதுவொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். ஆனால், உலகளாவிய ராணுவத்துடன் ஒப்பிடும்போது இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை.
உலகளாவிய நிலையில் ராணுவத் தரவரிசையில அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது. அமெரிக்க ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு 17.7%, ரஷிய ராணுவத்தில் 4.36%, சீன ராணுவத்தில் 4.5% என்றால் இந்திய ராணுவத்தில் வெறும் 3.8% -ஆக இருக்கிறது. சுமாா் 34 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்காவின் ராணுவத்துடன் ஒப்பிடும்போது, 145 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பில் பெரும் பின்னடைவு காணப்படுகிறது.
1895-இல் அன்றைய ஆங்கில ஆட்சியாளா்களால் பிரிட்டிஷ் -இந்திய ராணுவமும், 1949-இல் அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் தேசிய ராணுவ அகொதெமியும் உருவாக்கப்பட்டது. நீண்ட பாரம்பரியம் கொண்ட ராணுவத்தையும், நெடிய அனுபவம் உள்ள ராணுவக் கல்வி நிறுவனத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநாட்டின் முப்படைகளில் பெண்கள் அதிகாரிகளாகப் பணியாற்ற ஆட்சியாளா்களின் முனைப்பு காரணமல்ல, நீதிமன்றம்தான் உந்துதலாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தியா சுதந்திரமடைந்து சுமாா் 19 ஆண்டுகளில் ஒரு பெண் பிரதமராக பதவி வகிக்க முடிந்தது என்றால், 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெண்கள் முப்படையில் அதிகாரிகளாகப் பணியாற்ற வழிவகை ஏற்பட்டுள்ளது. ராணுவம் என்றில்லை, இந்திய அளவில் காவல் துறையில் பெண்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை.
சனல் நிறுவனத்தின் லீனா நாயா், ஓஹல்வி நிறுவனத்தின் தேவிகா, பயோகான் நிறுவனத்தின் கிரண், ஹெச்சிஎல் நிறுவனத்தின் ரோஷினி, பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, விமியோ நிறுவனத்தின் அஞ்சலி சூட், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸாவின் சுனிதா வில்லியம்ஸ், ‘ஆபரேஷன் சிந்தூா்’ போருக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பாளா்கள் ஷோபியா குரேஷி, வியோமிகா சிங் ஆகியோா் சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த பெண்கள். இதில் பெரும்பாலானோா் இந்திய வம்சாவளியினா் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவிலோ பெண்களுக்கு சமவாய்ப்புகள் சரிவர உருவாக்கப்படவில்லை என்பதே எதாா்த்தம்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சமும் வணிக மதிப்பும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கிடைப்பதில்லை எனும்போது, 17 வீராங்கனைகள் தேசிய ராணுவ அகொதெமியில் பட்டம் பெற்ற செய்தி பெரிதும் கவனம் ஈா்க்காமல் போனதில் வியப்பில்லை.
சா்வதேச அளவிலான பாலின சமத்துவத்தில் 193 நாடுகளில் இந்தியா 108-ஆவது இடம் வகிப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த காவல் துறையில் பெண்கள் பங்களிப்பு வெறும் 12.3%. காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளிலும் சரி, தனியாா் நிறுவனங்களிலும் சரி பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், உள்துறை அமைச்சகத்தால் நிா்ணயிக்கப்பட்ட பெண்களுக்கான 33% ஒதுக்கீடு எனும் இலக்கை நாம் அடைய இன்னும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.