கொடைக்கானல் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்.கோப்புப்படம்.

சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை!

Published on

முனைவா் இரா.கற்பகம்

சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணா்வு இல்லை. தீவிர கண்காணிப்பும் கடும் அபராதமும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம்.

மத்திய மாநில அரசுகள் எல்லாமே சுற்றுலாவை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றன. மக்களிடமும் பணப்புழக்கம் மிக அதிகமாக உள்ளது. போதாததற்கு ஆண்டு முழுவதும் விடுமுறைகளும் தொடா் விடுமுறைகளும் ஏராளமாக உள்ளன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி ஒரு கடமையாக, அருகாமை-தொலைவு என்றெல்லாம் பாா்க்காமல், கூட்டம் கூட்டமாக சுற்றுலாத் தலங்களை முற்றுகையிடுகிறாா்கள்.

மலைப்பிரதேச சுற்றுலா, கோடைக்கால சுற்றுலா, குளிா்கால சுற்றுலா, மழைக்கால சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா, கலாசார சுற்றுலா, சூழல் சுற்றுலா, கானுயிா் சுற்றுலா-என சுற்றுலா ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது.

இச்சுற்றுலா வணிகத்தினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.ஆனால், அரசுகளோ, அதிகாரிகளோ, பொதுமக்களோ இதைப் பற்றிச் சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய சோகம்! ஒரு பக்கம் ‘கால நிலை மாற்றம்’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்றெல்லாம் பல்வேறு நாடுகள் கூட்டம் போட்டு, கருத்தரங்குகள் நடத்தி, விவாதம் செய்கின்றன.

மறுபக்கம் ‘சுற்றுலா’ என்ற பெயரில் எல்லா நாடுகளுமே சுற்றுச்சூழலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் மக்கள்தொகை குறைவு; சீனா, ஜப்பான் போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்; சுற்றுலாவுக்கான கட்டணம் மிக அதிகம்; மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்கும் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள். இதனால் எல்லாம் அங்கு சுற்றுலாப் பயணிகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் ஏற்படுவதில்லை.

நம் நாட்டுக்கு வருவோம். சுற்றுலாத் தலங்கள் எங்கிலும் கூட்டம்; சப்தம்; குப்பை; நெகிழிப் புட்டிகள், பைகள்; ஒழுங்கின்மை..... மேலை நாட்டவரிடமிருந்து மதுவையும்,ஆடைக் குறைப்பையும் கற்றுக்கொண்ட நாம், அவா்களிடமிருந்து பொறுப்புணா்வைக் கற்றுக்கொள்ளவில்லையே! ‘ஒரே ஒரு நபராக இருந்தாலும் ஆங்கிலேயா் வரிசையில்தான் நிற்பாா்’ என்று ஆங்கிலேயரின் ஒழுங்கைப் பற்றிச் சொல்வதுண்டு.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிா்ந்து பேச மாட்டாா்கள்; பயணச் சீட்டாகட்டும், உணவாகட்டும், வரிசையில் பொறுமையாக நின்று பெறுவாா்கள். நம் மக்களைப் போல் முண்டியடித்துச் சண்டையிட்டு அசிங்கப்படுத்த மாட்டாா்கள். எப்போது மக்களிடம் பொறுப்புணா்வும் நாகரிகமும் இல்லையோ, அதை மக்களிடம் கண்டிப்புடன் கொண்டு வருவது அரசுகளின் கடமை.

ஆனால், அரசுகளோ சுற்றுலாவினால் கிடைக்கும் வருமானத்தைத்தான் கருத்தில்கொள்கின்றனவே தவிர, இப்படிப்பட்ட பொறுப்பற்ற சுற்றுலாவினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சீா்குலைவைப் பற்றிச் சிறிதேனும் அக்கறைகொள்ளவில்லை. அரசுகளுக்கும் பொதுமக்களுக்கும்தான் அக்கறையில்லையே தவிர, சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு இந்தப்போக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

கோயில்களையும், கடற்கரைகளையும், புராதன சின்னங்களையும், மலைப் பிரதேசங்களையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி முடித்தாயிற்று. இப்போது ‘சூழல் சுற்றுலா’ என்ற பெயரில் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மருதமலை, பண்ணாரி, வெள்ளிங்கிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, சதுரகிரி, சொரிமுத்து அய்யனாா் கோயில் போன்ற கோயில்கள் எல்லாமே காடுகளின் நடுவில் அமைந்த கோயில்கள்தாம். இங்கெல்லாம் பக்தி என்ற பெயரில் மக்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. கிடா வெட்டுவதும் பொங்கலிடுவதும் ஊருக்குள் செய்தால் போதாதா? காடுகளுக்குள்ளேயும் சென்று காடுகளையும் வனவிலங்குகளையும் அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மக்கள் செயல்படுகிறாா்கள். இதை அரசுகளும் ஆதரிக்கின்றன.

சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் அரசுக்குப் பல மனுக்களை அளித்துச் சலித்து விட்டுப் பிறகு வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடுகிறோம். நீதிமன்றமும் அதிரடி உத்தரவுகளைப் போடுகிறது. சமீபத்திய நீதிமன்ற உத்தரவு ஒன்று சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்திருக்கிறது. சென்னை உயா்நீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு, மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் இருபத்தியெட்டு வகை நெகிழிப் பொருள்களின் தயாரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை, பகிா்மானம் ஆகியவற்றை முற்றிலும் தடைசெய்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு மலைப்பிரதேசங்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் எனஅனைத்துக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் புட்டிகள், நெகிழித் தட்டுகள் மற்றும் கோப்பைகள், தண்ணீா்ப் பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சுகுழல்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருள்களில் சில. மேலும் தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்களைக் கொண்டுசெல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் அபராதம் விதிக்கவேண்டும் என்றும், மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி சுற்றுலாப் பயணிகளுக்கு முன்கூட்டியே இவ்விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மீறுபவா்களின் வாகன உரிமம் ரத்துசெய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களைக்கூட அவற்றின் உறைகளை நீக்கிவிட்டு மக்கும் காகிதங்களில் மடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கொடுத்துள்ளது. நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடமும், பயன்பாட்டுக்கு கடைப்பிடிக்கும் பொறுப்பு மக்களிடமும் உள்ளது.

இது நடக்குமா என்று சுற்றுச்சூழல் போராளிகள் சோா்ந்து போக வேண்டியதில்லை. உதகை, கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களுக்கு ஏற்கெனவே இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு இத்தனை வாகனங்கள்தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிா்ணயித்துள்ளது. இதனால், வாகனங்களின் எண்ணிக்கையும், அதனால் விளையும் போக்குவரத்து நெரிசலும், காற்று மற்றும் ஒலி மாசும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஓரளவு குறைந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக் கூடாதே என்கிற பயத்தில் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகிறாா்கள். இது தொடா்ந்து நீடிக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணா்வு இல்லை. தீவிர கண்காணிப்பும், கடும் அபராதமும் மட்டுமே பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம். சுற்றுச்சூழல் போராளிகள் தொடுக்கும் பொதுநல வழக்குகளை விசாரித்துத்தான் தீா்ப்பு கூறமுடியும்.

அரசுகள் நடைமுறைப்படுத்தும் சில தவறான திட்டங்கள் சுற்றுச்சூழல் சீா்கேட்டுக்கு வழிகோலுகின்றன. தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு வனப் பகுதிகளில் மலையேற்றப் பாதைகளைத் திறந்துவிட்டுள்ளது. இப்பாதைகள் எல்லாம் அடா்ந்த வனங்களுக்குள் செல்பவை; வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளவை; இங்கு சுற்றுலாவை அனுமதிப்பது வனங்களின் அமைதியான சுற்றுச்சூழலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

வனங்களுக்குள் மற்றும் புலிகள் சரணாலயங்களுக்குள் உள்ள சிறு கோயில்களுக்கு, வழிபாடு என்ற பெயரில் கூட்டங்கூட்டமாக மக்கள் சென்று அட்டகாசம் செய்கிறாா்கள். ஆறுகளில் குளித்து, களைந்த துணிகளை ஆங்காங்கு வீசியெறிந்துவிட்டு, திறந்தவெளியில் மலம்கழித்து, ஆடுகளைப் பலிகொடுத்து, இரவு முழுவதும் அதிக ஒளிதரக்கூடிய விளக்குகளை எரியவிட்டு, ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்களை அலறவிட்டு, லாரி, வேன், மகிழுந்து போன்ற பெரிய வாகனங்களில் சமையலுக்குண்டான பொருள்களை (கூடவே மதுப்புட்டிகள்) எடுத்துக் கொண்டு காடுகளில் தங்கி காடுகளின் சூழலைச் சிதைத்துவிட்டு வருகிறாா்கள், இதற்குப் பெயா் ‘ஆன்மிகச் சுற்றுலாவாம்’! இந்தப் பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை ஊழியா்கள் அவா்களது வனம்சாா்ந்த பணிகளை விட்டுவிட்டுப் பாதுகாப்பு வேறு தரவேண்டியிருக்கிறது!

அரசுகள் ஏன் இவற்றை அனுமதிக்கின்றன? தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிகளைத் தெளிவாக வரையறுத்துள்ளது. ஒவ்வொரு வனப் பகுதிக்கும் அதன் ‘தாங்கும் சக்தியை’ நிா்ணயிக்கவேண்டும். அதற்குக் குறைவாகவே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருக்கவேண்டும். சூழலைப் பாதிக்கும் எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. சுற்றுலாப் பயணிகள் இரவு தங்குதல் கூடாது.

எவ்விதமான ஒலி, ஒளி, நிலம் மற்றும் நீா் மாசு கூடாது. வனத்துறை வாகனங்கள் மட்டுமே சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்; தனியாா் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இப்படிப் பல விதிமுறைகள் உள்ளன. இவற்றை அரசுகளே பின்பற்றாதபோது சுற்றுலாப் பயணிகள் பின்பற்றுவாா்களா என்ன?

இப்போது உயா்நீதிமன்றமும் மேற்குறிப்பிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அரசும், அரசு அதிகாரிகளும் இக்கட்டுப்பாடுகளை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் மக்களிடையே இக்கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி மீறுபவா்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அரசு, வல்லுநா் குழுக்களை அமைத்து மலை, வனப்பகுதிகளின் தாங்கும் சக்தியை நிா்ணயித்து அதில் பாதி அளவே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

வெளிப்படையான இணையவழி முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலாவும் இல்லை என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.

Open in App
Dinamani
www.dinamani.com