
சிலப்பதிகாரத்தை 'ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று தொடங்கினார் இளங்கோவடிகளார். அவரைப் பின்பற்றும் முறையில் இன்று 'அன்னையைப் போற்றுவோம், தந்தையைப் போற்றுவோம்' என்று தமிழர்கள் சொல்லில் நாட்ட வேண்டும், செயலிலும் காட்ட வேண்டும். ஏனெனில், இவர்கள்தான் அடுத்துவரும் இளம் தலைமுறையினரைக் காப்பாற்றுகின்றனர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தொடர் ஒலி, காற்றுப்போல் எங்கும் பரவியிருந்தது. செந்தமிழ் இலக்கியங்கள் இந்தச் சிறந்த கருத்தை நெஞ்சில் தங்கச் செய்தன. புலவர் உலகநாதன் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் என்று ஓதினார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவையார்.
ஆசாரக்கோவை என்பது சங்கநூல். அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு முன் பிறந்தவன் ஆகிய இவர்களைத் தெய்வம் என்று எண்ணி வணங்கு என்று அது மனத்தில் பதிவு செய்தது.
தாயைவிடச் சிறந்த உறவினர் இல்லை என்று விளம்பிநாகனார் அறிவித்தார். அவர் மேலும் ஒரு மேன்மைக் கருத்தை உரைத்தார். எல்லாக் கடவுளையும்விட, தாயே உயர்ந்தவள்; தாயோடு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய கடவுளே இல்லை என்றார் அந்தப் பல்கலைச் செல்வர்.
ஈன்றாளொடு எண்ணக்
கடவுளும் இல் (நான்மணிக்கடிகை - 57)
குமர குருபரர் பற்றற்ற நற்றவப் புலவர், தந்தையும் தாயும் இறைவனாவர் என்றார் அவர் (நீதிநெறி விளக்கம் 27) தாயும் நீயே தந்தை நீயே என்றார் சம்பந்தர்; தாயுமாய் எனக்கே என்றார் அப்பர். தந்தை, தாய் ஆகியோரை வழிபட வேண்டும் என்றார் சொல் வல்ல நல்லாதனார் (திரி கடுகம்). அம்மா மண்ணுள் மறைந்துவிட்டால், பிறகு சுவையான உணவு கிட்டாது என்று நீதிவெண்பா எண்ணச் செய்தது.
கருவை அன்னை பத்து மாதம் சிப்பிக்குள் முத்துப்போல் சுமக்கிறாள். அவள் பிரசவ நேரத்தில் வலி தாங்க முடியாமல் மிகப் பெரும் வேதனை பெறுகிறாள்.
சிலசமயம் மகப்பேறின்போது சில பெண்களின் உயிர்கள் விடை பெற்றுக்கொண்டு சென்றதுண்டு; பெற்ற குழந்தையை, இமை கண்ணைக் காப்பதுபோல் அவள் காப்பாற்றுகிறாள். குழந்தைக்கு நோய் வந்தால் அவள் மருந்து சாப்பிடுகிறாள்.
மருந்தே தாய்க்கு நீண்டகால விருந்தாக அமைந்து விடுவதும் உண்டு. வருங்கால வாரிசுக்காக நிகழ்கால இன்பத்தை இழக்கிறாள். அவள் தன் நலத்தைத் துறக்கிறாள். மானிடம் வளர்வதற்கு மோனத் தவம் புரிகிறாள். ஆகவேதான், நீதிபதி வேதநாயகர் பெண்மைக்கு உயர்வு தந்தார். தமிழில் முதல் புதினம் படைத்த அவர், பெண்மைக்கு முதன்மை இடம் கொடுத்தார்; பெண்மதி மாலை பாடினார்.
ஆடவர் போற்றும்படி மேன்மைப் பூமாலையைச் சூட்டினார். திரு.வி. கலியாண சுந்தரனாரும் மென்மைப் பெண்மையை எண்ணும்படி செய்தார். பெண்மை, தாய்மை - இறைமை என்ற படிநிலை உயர்வைத் தொடுத்துரைத்தார் புதுவை பாரதியார். புதுமைப் பெண்ணைப் படைத்தார். பெண்ணின் கையில் செங்கோல் கொடுத்தார். பாவேந்தர் மாதரின் புகழ்ச்சுடரை ஏந்தினார். இடும்பைக்கே உரிய குடும்ப விளக்கைக் காப்பியத் தலைவி ஆக்கினார்.
முற்றும் துறந்த மேன்மக்களாலும், தாய்மேல் கொண்ட பாசத்தைத் துறக்க முடியவில்லை. பற்று அற்ற பெரியாரான பட்டினத்தாராலும், தாய் மேல் கொண்ட பாசத்தை அறுத்தெறிய முடியவில்லை. தாய் இறந்தபோது அவர் கண்ணீர் விட்டார்; மனம் கலங்கினார், கதறி அழுதார். மனமுருகிப் பத்துப் பாடல்கள் பாடினார். முதல் பாட்டு இதுதான்.
ஐயிரண்டுதிங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல் என்றபோதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப் புறத்தில் ஏந்திக்கனக முலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி,
என்று பாடினார் அவர். ஆதிசங்கரர் மாபெரும் துறவி. எதன் மீதும் பற்றுக்கொள்ளாத அவரால் தாய்ப் பாசத்தைத் தள்ளிவிட முடியவில்லை. அன்புத் தாயின் உயிர் துன்ப உலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர் உடன் இருந்தார். உடலுக்குத் தீ மூட்டும் கடமையைச் செய்தார். அப்போது புகழ்பெற்ற மாத்ரு பஞ்சகம் பாடினார். விவேகானந்தரும் ஒப்பற்ற துறவி. முற்றும் துறந்த அவராலும் தாய்மேல் கொண்ட பற்றை - பாசத்தை - மறக்க முடியவில்லை - மறைக்கவும் முடியவில்லை. தைத்திரிய உபநிஷதமும் பெற்றவரைப் போற்று என்று கூறியது. அன்னை, தந்தை, ஆசிரியர் ஆகியோரைத் தெய்வமாக எண்ணுக என்றது அது.
தாயாகப் போகிறவள், கருவைப் பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். தந்தையாகப் போகிறவன், பிறக்கப்போகும் குழந்தை பற்றிய எண்ணத்தை தன் மனத்தில் சுமந்து கொண்டே இருக்கிறான். பிறந்த மகவைச் சில ஆண்டுகள் தன் தோளில் அவன் சுமந்து மகிழ்கிறான் 'ஈன்று புறந்தருதல் (காப்பாற்றுதல்) என்தலைக்கடனே' என்று புறநானூற்று அன்னை சொன்னாள்,' சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே'' என்றும் அவளே கூறினாள்.
மகனுடைய / மகளுடைய உடல் வளர்ச்சிக்குத் தாயின் கடமை அடிப்படை ஆகிறது. அவர்களின் உள்ள வளர்ச்சிக்குத் தந்தையின் உழைப்பு அடித்தளம் ஆகிறது. உயிரினப் பெருக்கத்திற்குப் பெண் இனத்தையே இயற்கை பொறுப்பாக்கி உள்ளது. அஃறிணை உயிரினங்களிலும் பெண்மையே குட்டி போட்டோ, முட்டை இட்டோ இனத்தை வளர்க்கிறது. இந்த இயற்கை விதிக்கு விலக்கும் இருக்கிறது. சில ஆண் இனங்கள் தாயுமானவராகச் செயல்படுகின்றன. ஆண் கடல் குதிரைமீன் தன் வயிற்றுப் பையில் தங்கியிருக்கும் குஞ்சுகளை அக்கறையோடு வளர்க்கிறது.
முன்பு இங்குக் கூட்டுக் குடும்ப நிலை நலமாக இருந்தது. அது பெற்றோர்மேல் பாசத்தை ஊட்டியது. ஆனால், வாழ்க்கைப் போராட்டம் அதைச் சிதறடித்தது. சருகு, பறந்து சென்று வேறிடத்தில் விழுவதைப்போன்று, மகன் அல்லது மகள் வெளிநாடு செல்லும் நிலை அமைகிறது. உடல் நலம் குறையும் பெற்றோரை உடனிருந்து கவனிக்க அவர்களால் முடிவதில்லை.
அறிவியல் தந்த அற்புதக் கருவிகள்மூலம் உரையாடுகிறார்கள்; பணமும் அனுப்புகிறார்கள். ஆனால், பெற்றோரின் தனிமையை அவர்களால் தடுக்க முடிவதில்லை. பாதுகாப்பற்ற தனிமை, சில பெற்றோரின் வாழ்க்கைக்கே முடிவு கட்டும் நிலைக்குப் பாதை போடுகிறது. பெற்றோருடன் வாழும் மகனுக்கு அவர்கள் வேண்டாத சுமையாகி விடுகிறார்கள்; தள்ளாடித் தடுமாறி தரையில் விழும் தாய்-தந்தையைக் கவனிப்பதற்கு நேரம் இல்லை.
மருத்துவக் கடமை செய்வதற்குப் பணமும் இல்லை. மனமும் இல்லை. அதன் காரணமாகப் பெற்றோரின் மனம் நிலைகுலைந்து போகும். அவர்களின் சோகம் மன அழுத்தம் ஆகும். துயர மேகம் கண்ணீர் மழை பொழியும். மரணத்துக்கு அழைப்பு வரும் நிலையும் உருவாகக்கூடும்.
சமுதாயத்தின் அடித்தட்டுப் பெற்றோரின் அல்லல் எடுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை மிகுந்தது. அது எல்லை மீறி நடக்கிறது. பணிப்பெண்கூட அவர்களை மதிப்பதில்லை. உயர்திணைச் சொல்லான பெரியவர் என்பது அஃறிணைச் சொல்லான 'ஏய் பெரிசு' என ஈன மொழி ஆக்கப்படுகிறது. அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
படிப்பு குறைவாகவும், கடன் அதிகமாகவும் உள்ள மகன் தாய்க்குக் குடும்ப ஓய்வூதியம் வரும் நாள் அன்று மட்டும் அவளுக்குச் சோறு போடுவான்; பணத்தைப் பறித்துக் கொள்வான். மறுநாள் வெளியே ஓடு என்று விரட்டுவான். கை ஏந்திப் பிச்சை எடுக்கும்படி செய்வான். மதுவுக்கு அடிமையாகிவிட்டவன் செய்யும் கொடுமை பல மடங்காக இருக்கும். தாய் சேமித்து வைத்திருக்கும் காசுகளையும் அவன் பறித்துக் கொள்வான். அவள் காதில் தொங்கிய கம்மலைக் கழற்றி வட்டிக்கடையில் அடகு வைப்பான். தாய் பிடிவாதமாக மறுத்துப் போராடினால் அவள் உடலிலிருந்து உயிரைப் பிரித்து விடுவான். ஓரளவுக்கு வசதியுடைய பெற்றோர் முதியோர் இல்லம் நாடுவார்கள். அங்கும் வாடுவார்கள். மன அமைதியைத் தேடுவார்கள்.
அல்லலுற்றுச் சொல்ல முடியாத வேதனையில் விழுந்து கிடக்கும் தாய், தந்தைக்கு நலம் சேர்க்க சில அமைப்புகள் தலை உயர்த்துகின்றன. ஹெல்ப்ஏஜ் இந்தியா, தமிழ்நாடு முதியோர் சங்கம், டிக்னிட்டி ஃபவுண்டேஷன், மூத்தோர் நலக்கூட்டமைப்பு ஆகியவை, கண்ணியம் மிக்க பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பதற்கு ஆதரவு அளிக்கின்றன. முன்பு காவல் துறையின் நேரடி பாதுகாப்பும் இருந்தது.
ஒவ்வோர் ஆண்டும் உலக முதியோர் புறக்கணிப்பு விழிப்புணர்வு தடுப்பு நாள் ஜூன் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது; முதியோருக்கான தேசியக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் நலம் கவனிப்புச்சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும் ஈன்றோரின் நலம் மேன்மையுறவில்லை.
பெற்றோரின் துக்கம் குறைய வேண்டுமானால், தக்க மதிப்போடு அவர்கள் வாழ வேண்டுமானால், வழிவந்தோரின் மனப்பான்மை மாற வேண்டும். வருங்காலத்தில் தமக்கும் கழிவிரக்க நிலை வரும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாளை (ஜூன் 15) உலக முதியோர் புறக்கணிப்பு விழிப்புணர்வு தினம்.
கட்டுரையாளர்:
மேனாள் பதிப்பாசிரியர்,
தமிழ்வளர்ச்சி இயக்ககம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.