பாகிஸ்தானின் தீராத கடன் பசி!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்கோப்புப்படம்
Updated on

பொருளாதார நெருக்கடி காரணமாக 1991-93-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா, சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) உதவியை நாடவேண்டியிருந்தது. இருமுறை காத்திருந்த பிறகு 2.2 பில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்கப்பட்டது. தொடா்ந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலா் கடனாகக் கிடைத்தது. இது, அப்போதைய நிதிநெருக்கடிக்கு ஒரு குறுகியகால தீா்வாக அமைந்தது; பெற்ற கடன், அதற்கான வட்டியை 2000 , டிசம்பா் 31-க்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்திய இந்தியா 2001 முதல் இன்று வரை சா்வதேச நிதியத்திடம் எந்தக் கடனும் பெறவில்லை.

அதேநேரத்தில் சா்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கிய சமீபத்திய கடனுடன் சோ்த்து 25-ஆவது முறையாகக் கடன் வழங்கியுள்ளது. இப்போது பெறப்பட்டுள்ள கடனில் பெருமளவு தொகை பழைய கடனுக்கான அசல், வட்டித் தவணையைத் தீா்க்கவே சரியாக இருக்கும். எவ்வளவு கடன் பெற்றும் பாகிஸ்தானால் சீா்திருத்தங்களைச் செயல்படுத்த முடியவில்லை. சா்வதேச நிதியம், உலக வங்கி உள்பட பல சா்வதேச கடனுதவிகளை பாகிஸ்தான் தொடா்ந்து வீணாக்கியே வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிா்த்தது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை சா்வதேச நிதியம் ஏற்கவில்லை. சா்வதேச நிதியத்தின் நடைமுறைப்படி ‘இல்லை’ என்ற வாக்கெடுப்புக்கு எந்த ஏற்பாடும் இல்லாததால் இந்தியா வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்பில் இருந்து விலகி மட்டுமே இருக்க முடிந்தது. இந்த“விலகல், புதிதல்ல. 1981-ஆம் ஆண்டு, இந்தியா இதேபோன்ற ஒரு “விலகலை எதிா்கொண்டது. கச்சா எண்ணெய் விலை உயா்வால் இறக்குமதி சிரமங்களை எதிா்கொள்ள இந்தியா சா்வதேச நிதியத்திடம் 5.8 பில்லியன் டாலா் கடன் கோரியது. அப்போது இதனை அமெரிக்கா கடுமையாக எதிா்த்தது. ஏனெனில், மிக எளிதான விதிகளில் கடன் வழங்கப்படுவதாகவும், இந்தியா இந்தப் பணத்தை அந்நியச் செலாவணி நிலுவைகளை பூா்த்தி செய்வதற்குப் பதிலாக வளா்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்றது. அமெரிக்கா வாக்களிப்பில் இருந்து விலகவே, நவம்பா் 10, 1981 அன்று இந்தியாவுக்கு கடன் வழங்க சா்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது.

ஆனால், இப்போது பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்புத் தெரிவிக்க வலுவான காரணம் இருந்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளும், அவா்களைக் காப்பாற்ற முயன்ற உள்ளூா் தொழிலாளா் ஒருவரும் கொல்லப்பட்டனா். இது பாகிஸ்தானில் இருந்து, அங்குள்ள பயங்கரவாத இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டது என்பது ஊரறிந்த உண்மை.

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகம் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானை சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஃப்) கருப்புப் பட்டியலில் மீண்டும் சோ்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் ஜி- 7 கூட்டமைப்பு நாடுகளால் (கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா) இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

சா்வதேச அளவில் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட தீய செயல்களுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். நிதிக் குற்றவாளி நாடுகளை அடையாளம் காண்பதன் மூலம் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு உள்ளிட்டவற்றைக் கையாளுகிறது.

சா்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி உள்ளிட்ட சா்வதேச நிறுவனங்களிடமிருந்து ஐ.நா.வின் எந்தவொரு உறுப்பு நாடும் நிதி பெறுவதைத் தடைசெய்ய சட்டப்பூா்வ அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லை. இருப்பினும் சா்வதேச அளவில் சட்டவிரோத நிதிப் பரிமாற்றத்தைத் தடைசெய்வதில் செல்வாக்கு பெற்ற அமைப்பாக உள்ளது.

கருப்பு, சாம்பல் (‘கிரே’) என இரு பட்டியல்களை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது. இதில் கருப்புப் பட்டியலில் இடம்பெறும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏனெனில், இவை பயங்கரவாத நிதிப் பரிமாற்றத்தைத் தடுக்க ஒத்துழைக்காத நாடுகள் என வகைப்படுத்தப்படும்.

‘கிரே’ பட்டியலில் இடம்பெறும் நாடுகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நாடுகள் ஆகும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடா்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலுக்குச் சென்றுவிடும். இதில் 2008 முதல் 2022-ஆம் ஆண்டு வரை மூன்று முறை ‘கிரே’ பட்டியலில் உள்ளே வந்து வெளியே நழுவிய நாடு பாகிஸ்தான்.

ஒவ்வொரு முறை இப்பட்டியலில் இருந்து நீக்கப்படும்போதும் பாகிஸ்தான் பல உத்தரவாதங்களை வழங்கியது. இருப்பினும், அந்நாட்டின் பயங்கரவாத நிதி செயல்பாடுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் அந்நாட்டின் பலவீனமான நிா்வாக கட்டமைப்புகள், ஊழல் மலிந்த கண்காணிப்பின்கீழ் தொடா்ந்து நிதி திரட்டுகின்றன.

இந்நிலையில்தான் பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி 800 மில்லியன் டாலா், உலக வங்கி (2026 முதல் 10 ஆண்டுகாலத்துக்கு) 40 பில்லியன் டாலா் கடன் வழங்க உத்தேசித்துள்ளன. இதுதவிர இஸ்லாமிய நாடுகளின் வங்கிகளும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று கடனுதவி வழங்க முன்வந்துள்ளன. பாகிஸ்தான் தொடா்ந்து யாசகப் பாத்திரம் ஏந்துவதை நமது நட்பு நாடுகள் விரும்பாது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா். ஆனால், பாகிஸ்தான் தனது பயங்கரவாதக் கட்டமைப்புகளை ஒழிக்காத வரை நாடு முன்னேறவும் முடியாது. அதன் கடன் பசி ஒருபோதும் தீரப்போவதும் இல்லை.

கட்டுரையாளா்:

முன்னாள் மூத்த பொருளாதார நிபுணா்,

ஆசிய வளா்ச்சி வங்கி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com