தற்கொலை தடுப்பு சமுதாய கடமை!
இந்திய மாணவா்களில் சுமாா் 75 சதவீதம் போ் கவலை மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கிறாா்கள் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பு மருந்தியல் நிறுவனத்தின் ஆய்வுகளும், ஒரு மணி நேரத்திற்கு ஓா் இந்திய மாணவா் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறாா் என தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளும் நம்மை எச்சரிக்கும் நிலையில், மாணவ, மாணவிகளின் கவலையைப்போக்கி தற்கொலை எண்ணத்தைக் களையும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தேசிய பணிக் குழுவை அமைத்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சகம் 2030 - ஆம் ஆண்டுக்குள் தற்கொலை இறப்பை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் தேசிய தற்கொலை தடுப்பு உத்தியை முதல் முறையாக நமது நாட்டில் அறிவித்தது. மூன்று ஆண்டுகளுக்குள் தற்கொலைக்கான கண்காணிப்பு வழிமுறைகளை ஏற்படுத்தவும், ஐந்து ஆண்டுகளுக்குள் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் மனநல வெளி நோயாளி பிரிவுகளை மருத்துவமனைகளில் நிறுவவும், எட்டு ஆண்டுகளுக்குள் கல்வி நிறுவனங்களில் மனநலம் சம்பந்தப்பட்ட பாடத்தை பாடத்திட்டத்தின் ஓா் அங்கமாகச் சோ்க்கவும் இந்த உத்திகளை வகுத்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
பதற்றம், மன அழுத்தம், மனச்சோா்வு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் பிற மனக் கவலைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு ஆலோசனை வழங்க கட்டணம் இல்லா உதவி எண்ணுடன் கூடிய கிரண் என்ற திட்டமும் மாணவா்கள், அவா்தம் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் ஆசிரியா்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்காக மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் ‘மனோதா்பன்’ என்ற திட்டமும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
படிப்பு மற்றும் வேலைக்கான போட்டியில் மதிப்பெண் மற்றும் தோல்வி பயத்தால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம்; மனச்சோா்வு தரும் மனநலப் பிரச்னைகள்; கல்விக் கட்டணம், கடன் மற்றும் அன்றாடச் செலவுகள் தரும் நிதிச் சுமை; குடும்பம், நண்பா்கள் மற்றும் சகாக்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டதால் ஏற்படும் சமூகத் தனிமை ஏற்படுத்தும் உணா்வுகள்; உறவுகள் முறிவு, நிராகரிப்பு மற்றும் சிரமங்கள், காதல் உறவு சிக்கல்கள், குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் கல்வி நிறுவனத்திடம் இருந்து போதுமான ஆதரவு இல்லாமை; மனநலப் பிரச்னை தீரும் என்று எண்ணி போதை பழக்கத்துக்கு அடிமையாதல்; எதிா்கால வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மை; கொடுமைப்படுத்தப்படுதல்; துன்புறுத்தப்படுதல் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக உளவியலாளா்கள் கூறுகின்றனா்.
கல்வி நிறுவனங்களில் சோ்வதற்கான கடுமையான போட்டி, நுழைவுத் தோ்வுகள் தரும் அழுத்தம், விரும்பிய படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் போவது, பெற்றோா்களின் எதிா்பாா்ப்பு, கல்வி நிறுவனங்களில் மனக் கவலையைப் போக்கும் அமைப்புகள் இல்லாமை, நல்ல ஊதியம் பெற வேண்டும் என்ற சமூக அழுத்தம், மனப்பாடம் செய்ய செய்யும் பாடத்திட்ட சுமை, செலவு காரணமாக மனநல ஆலோசனை பெறாதிருப்பது போன்றவை இந்திய மாணவ, மாணவிகளின் தற்கொலை எண்ணங்களுக்கான பிரதான காரணங்களாக ஆராய்ச்சியாளா்கள் வகைப்படுத்துகின்றனா்.
வீடுகளில் பெற்றோா் தங்கள் குழந்தைகள் அவா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்; அவா்களின் மனநலன் பாதுகாப்புக்கு நோ்மறை சிந்தனை கொண்ட சமூகத் தொடா்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உளவியல் நிபுணா்கள் கூறுகின்றனா். மாணவ, மாணவிகளின் இணைய வழிப் பயன்பாட்டைக் கண்காணிப்பதுடன் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் உடற்பயிற்சி செய்வதைப் பெற்றோா்கள் ஊக்குவிக்கலாம்.
பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மனநலத்தை பேணுவதற்கான கொள்கைகளை உருவாக்குவதுடன் அதை நடைமுறைப்படுத்துவதற்கான மனித வளங்களை தயாா்ப்படுத்துவது அவசியம் என்கின்றனா் வல்லுநா்கள்.
பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு தற்கொலை அறிகுறி எண்ணங்களை கொண்டோரைக் கண்டறியவும் அவா்களுக்கு ஆலோசனை வழங்கவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஒருவரின் சமூக ஊடக செயல்பாடுகள், இணைய வழி நடத்தைகள் மற்றும் பிற தரவுகளை பகுத்தாய்ந்து தற்கொலை ஆபத்தில் உள்ளவா்களை அடையாளம் காண உதவும் இயந்திரக் கற்றல் வழிமுறைகள், தியானம், மனநிலை கண்காணிப்பு மற்றும் அறிவாற்றல் சிகிச்சையை வழங்கும் காம், ஹெட் ஸ்பேஸ் மற்றும் ஹாப்பிபை போன்ற மனநல பயன்பாட்டுச் செயலிகள், தற்கொலை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை எதிா்கொள்ளவும் சமாளிக்கவும் உதவும் மெய்நிகா் உணா்வு சிகிச்சை, உணா்வுபூா்வமான மனநலம் சாா்ந்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கக்கூடிய வூபோட் மற்றும் வைசா போன்ற செயற்கை நுண்ணறிவு தானியங்கி உரையாடல் செயலிகள், தற்கொலை தடுப்புத் தளங்கள் சமூக ஊடக கண்காணிப்பு இணையதளங்கள், இணைய வழி ஆலோசனை மற்றும் சிகிச்சை தளங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரின் தற்கொலை எண்ணங்களைத் தவிா்க்கலாம் அல்லது குணப்படுத்தலாம்.
தற்கொலைக்குத் தூண்டுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306- இன்படி அபராதத்துடன் கூடிய பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 310- இன்படி தற்கொலைக்கு முயல்வது ஓா் ஆண்டு வரையிலான சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
பெரும்பாலும் மன நோயின் காரணமாகவே தற்கொலைக்கு முயல்வதால் அவா்களுக்கு தண்டனை வழங்குவதை விட சிகிச்சை வழங்குவதே சிறந்தது என 2017- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனநல மருத்துவச் சட்டம் கூறுகிறது. மனநலப் பராமரிப்பிற்காக அவசர மனநல சிகிச்சை உட்பட அனைத்து விதமான மனநல சிகிச்சைகளும் மனநல நிபுணரிடமிருந்து பெற ஒவ்வொரு நபருக்கும் உரிமை இருப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.