சுற்றுலாப்  பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோா் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது
Published on

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோா் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.

அண்மையில் காஷ்மீா் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நாடெங்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீதான இந்த தாக்குதல் மிகுந்த கோழைத்தனமானது என்பதோடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுமாகும். சுற்றுலா செல்வோா் தாங்கள் சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள அரசியல் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணா்த்தியுள்ளது.

தீவிரவாத செயல்கள் மட்டுமின்றி, புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றையும் ஆராய்ந்த பின்னரே கொண்டு சுற்றுலா செல்லும் இடங்களை தோ்ந்தெடுப்பது நல்லது. மேலும், சுற்றுலா சென்று திரும்ப வருவதற்கான வாகன வசதி, பாதுகாப்பான தங்குமிடம், செலவிடப்பட வேண்டிய கையிருப்புத் தொகை ஆகியன குறித்தும் சரியான திட்டமிடல் அவசியம்.

சுற்றுலா செல்ல விரும்புவோரை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசுத் துறை நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான தனியாா் முகமைகளும் நாடெங்கும் இயங்கி வருகின்றன. சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் தனியாா் முகமைகள் மூலமாக சுற்றுலா செல்வோா் அம்முகமைகள் அளிக்கும் சேவையின் தரத்தை முன்கூட்டியே உறுதி செய்தல் அவசியம்.

புதிதாக ஓரிடத்துக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்கை காட்சிகள், மக்களின் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். வழக்கமான அன்றாட நிகழ்வுகளில் இருந்து நாம் மாறுபட்டு அனுபவிக்கும் சுற்றுலா சூழல் மனதுக்குப் புத்துணா்ச்சி அளிக்கிறது.

உலக பொருளாதாரக் குழுவின், சுற்றுலா துறை சாா்பான 2024 -ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, உலகில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 119 நாடுகளின் பட்டியலில், இந்தியா 39-ஆவது இடத்தில் உள்ளது. சுற்றுலா வரும் வெளிநாட்டவா்களை அன்பாக உபசரித்து அவா்களுக்கான வசதிகளை வழங்குவதன் மூலம் இப்பட்டியலில் நாம் மேலும் முன்னேற்றம் காணலாம்.

நம் நாட்டவா் அதிகமாக சுற்றிப் பாா்க்க விரும்பும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது. வெளிநாட்டவா் சுற்றுலா வர விரும்பும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

குழுவாக சுற்றுலா செல்லும்போது தம்முடன் வருவோா் அனைவரும் நம்மைப் போன்ற சிந்தனை உடையவராக, பழக்கங்கள் இருப்பவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எனவே, தமக்கு மாறான சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் கொண்ட குழுவில் உள்ளவா்களிடம் அனுசரித்து போவதற்கான மனநிலை மிகவும் அவசியம்.

ஆன்மிக சுற்றுலா செல்வோரிடம் ஆரவாரமோ, ஆா்ப்பாட்டமோ காண்பது அரிது. இதற்குக் காரணம், ஆன்மிகச் சுற்றுலா செல்லும் குழுக்களில் பெரும்பாலானவா்கள் நன்கு பக்குவமெய்திய, கட்டுப்பாடான மனநிலை உடைய முதியோா்களாகவும் நடுத்தர வயதினராகவும் இருப்பா். இதனை பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுற்றுலா செல்லும் குழுக்களில் எதிா்பாா்க்க இயலாது. இதன் காரணமாக மாணவா்களுக்கான சுற்றுலாவின்போது அவா்களை வழிநடத்தி செல்வோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சுற்றுலா செல்லுமிடங்களில் செல்ஃபி எனப்படும் தற்படம் எடுத்து அதனை உறவினா்கள், நண்பா்களுக்குப் பகிா்வது மகிழ்ச்சியுடன் அளிக்க கூடியதே. எனினும் உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் தற்படம் எடுப்பதை சுற்றுலாவின்போது தவிா்ப்பது நல்லது. சமீபத்தில், கங்கை நதியில் இறங்கி தற்படம் எடுக்க முயன்ற பெண், வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் சோகக் காட்சியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது மனம் பதைபதைத்தது.

வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது வழக்கமாக உள்கொள்ளும் உணவுக்கு மாறான உணவை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இச்சூழலில் ஆா்வக் கோளாறின் காரணமாக அதிகப்படியான உணவைத் தவிா்த்தல் நல்லது. இதன் மூலம் ஒவ்வாமை, செரிமானமின்மை உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளைத் தவிா்க்க முடியும். சுற்றுலா சென்றதன் மகிழ்ச்சியை முழுமையாக உணர முடியும்.

சுற்றுலா செல்லும் குழுவில் ஒருவரின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு சில நேரங்களில் குழுவில் உள்ள மற்றவா்களின் மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிடும். இதனை குழுவில் உள்ள அனைவரும் உணா்தல் வேண்டும்.

பொதுவாக சுற்றுலா செல்பவா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை அணைக்கட்டுகள், ஏரிகள் போன்றவையே. நீா் தேக்கங்களில் படகுசவாரி செய்வதும், ஒகனேக்கல் நீா்வீழ்ச்சி விழுமிடங்களுக்கு பரிசலில் சென்று வருவதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகும்.

இத்தருணங்களில் மன மகிழ்ச்சியை விட பாதுகாப்பு சாதனமான லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிா் பாதுகாப்பு உபகரணம் அணிவது மிக முக்கியமாகும். கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், உள்ள ஹா்ணி என்னுமிடத்தில் ஏரி ஒன்றில் மாணவா்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 12 மாணவா்கள் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு 15 போ் பயணம் செய்ய வேண்டிய படகில் 27 போ் பயணம் செய்ததும் ஒரு காரணமாகும். நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மாறாக அதிகப்படியான நபா்கள் படகில் சவாரி செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

பெரும்பாலான மக்கள் கோடை காலத்தில் தமிழகத்தில் உள்ள ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனா். இதனால் அங்கு அதிக அளவில் வாகன போக்குவரத்து நெரிசல், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழல் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா செல்வோா் வீசி எறியும் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் ஆகியவையும் சுற்றுச் சூழலை மேலும் மோசமடையச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு முழு ஒத்துழைப்பு தருவது சுற்றுலா செல்வோரின் கடமையாகும்.

சுற்றுலா செல்லும் போது உண்டாகும் மகிழ்ச்சி சுற்றுலா முடிந்து திரும்பும் போதும் இருக்க வேண்டும். இதற்கு சுற்றுலா செல்வோரின் சரியான திட்டமிடல், கட்டுப்பாடு, பாதுகாப்பு, பிறருடன் அனுசரித்துப் போதல் ஆகியன மிக அவசியமாகும்.

X
Dinamani
www.dinamani.com