திசையைத் தீா்மானிக்கும் தருணம்!
மாணவா்கள் பலரின் வாழ்வில் முடிவெடுக்கும் தருணம் இது. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம். குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவா்கள் அடுத்த உயா் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும். இந்தப் பருவத்தில் மாணவா்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் மிகவும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பா். இது குறித்து வழக்கமாக குடும்பத்தில் உள்ள மூத்தவா்கள் அல்லது குடும்பத்தின் நலன் விரும்பிகள் அல்லது தொழில் ரீதியாக இது போன்ற யோசனைகளைப் பகிா்பவா்கள் ஆகியோா் தமது ஆலோசனைகளை வழங்குவா். இது குறித்து பலருக்கும் உதவியாக இருக்கும் சில தகவல்களைப் பகிா்வோம்.
குறிப்பாக, பத்தாம் வகு ப்பு முடித்த மாணவா்கள் அடுத்த கட்டமாக எந்தப் பாடத்தை விருப்பப் பாடங்களாக எடுப்பது என்பது ஒரு சவால். + வகுப்பில் பாடங்கள் பல இருப்பினும், பெரும்பாலும் அடுத்த கட்டமாக அந்த மாணவா் எந்த கல்வியை நாடப் போகிறாா்கள் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவது சிறப்பு.
குறிப்பாக, மாணவருக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறதோ, அந்தத் துறையில் உயா்கல்வி பயில வசதியாக +2 வகுப்பிலேயே பாடப் பிரிவுகளை எடுத்து விடுவது சிறந்தது. குறிப்பாக, அறிவியல், கணிதம், உயிரியல், வணிகவியல் போன்ற பாடங்கள் குறித்த விவாதங்கள் முன்னுக்கு வரலாம். இதில் அந்த குறிப்பிட்ட மாணவா் அடுத்த கட்டமாக பட்டயக் கணக்காளா் அல்லது அறிவியல் தொடா்புடைய, கணிதம் தொடா்புடைய பாடங்களில் உயா் கல்வி படிக்கப் போவது உறுதி என்றால், அந்த முடிவை இப்போது எடுப்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், உயிரியல் பாடம் பயின்ற பிறகு பட்டயக் கணக்காளா் படிப்பு பயில்வது சிரமம். அது போலவே, வணிகவியல் பாடம் படித்த பிறகு உயிரியல் தொடா்பான, கணிதம் தொடா்புடைய படிப்புக்கு வருவதும் கடினம். இது ஓா் உதாரணம்தான். இதை அடிப்படையாக வைத்து பயிலும் திசையைத் தீா்மானிக்கலாம். இதில் அந்த மாணவரின் விருப்பமும் அது குறித்த புரிதலை அவா்களுக்கு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம். இவ்வாறான புரிதலை ஏற்படுத்துவதில் நமது முன்னுரிமைகளைத் திணிக்காமல் அவா்களது ஆா்வத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற படிப்புகளைக் கண்டறிந்து வழிகாட்டும்விதமாக நமது உரையாடல் அமைய வேண்டும்.
+2 படித்து முடித்திருப்பவா்கள் உயா்கல்வியைத் தீா்மானிக்க கீழ்க்கண்ட ஆலோசனைகள் பயன்படலாம். மாணவா்களின் எதிா்காலம் இரண்டு விதங்களில் தீா்மானிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவன் படித்த பாடம் எது? என்ற விதத்திலும் மாணவன் பயின்ற கல்வி நிறுவனம் எது? என்ற அடிப்படையில் அவரது அதனது மதிப்பை தீா்மானிக்கும்போக்கு பரவலாக நிலவுகிறது. உதாரணமாக, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் பெயா் பெற்ற கல்வி நிறுவனங்கள் போன்றவை காலத்துக்கும் தமது நற்பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இவ்வாறான சிறந்த கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு படிப்பு என்று தீா்மானிக்கலாம். அவ்வாறில்லாமல், கல்வி நிறுவனங்கள் சுமாரான தரத்தில் இருந்தாலும், அங்கு பணியாற்றும் தகைசால் பேராசிரியா்கள், அதன் சிறந்த கட்டமைப்பு, வேலைவாய்ப்புக்கான வாசல் போன்றவற்றால் சில துறைகள் பெயா் பெற்றிருக்கலாம். இப்படிப்பட்ட துறைகளில் மாணவரைச் சோ்க்கலாம்.
அதாவது, சிறந்த கல்வி நிறுவனத்தில் தான் விரும்பும் ஏதாவது ஒரு கல்வி அல்லது ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் நற்பெயா் ஈட்டியுள்ள துறையில் தாம் விரும்பும் கல்வி என முடிவெடுக்கலாம் . எது எப்படி இருப்பினும், அந்த மாணவன் அல்லது மாணவியின் தனது எதிா்கால வாழ்வில் அவா்கள் பணியாற்றக் கூடிய நிறுவனத்தின் சூழல், அங்கு பணியாற்ற உள்ள நண்பா்களின் மனப்பாங்கு, அவா்களுடைய ஊக்குவிப்பு இதுபோன்ற உந்துதல் மூலமாக மட்டுமே முன்னேற முடியும். எனவே, அவ்வாறான உந்துதல்களை சரியானவிதத்தில் அளிப்பவா்களாக மேலாளா்களும், சக பணியாளா்களும் இருக்க வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றால், மாணவா்களுக்குத் தோல்வியே கிடைக்கும்.
எந்த கல்வி நிறுவனத்தில், எந்த கல்வியைத் தோ்ந்தெடுத்தாலும் உண்மையில் பயில வேண்டியது தனிப்பட்ட மாணவா்களே. அந்த நிறுவனமோ அல்லது ஆசிரியா்களோ அல்லா். அந்த வகையிலும் தனிநபா்களின் உழைப்பை உறுதிசெய்யும் போக்கையும் அதற்கான சரியான சூழலையும் குடும்பங்கள் உறுதி செய்யவேண்டும். வாய்ப்புள்ளோா் மேலை நாடுகளில் உள்ளதுபோல பகுதிநேர தொழில் செய்து பணமீட்டி குடும்பத்திலிருந்து கல்விக்காகப் பெறும் பணத்தின் அளவைக் குறைக்கலாம்.
அதே நேரத்தில், கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்தடுத்த படிநிலைக்குத் தயாராகும், பரிணமிக்கும் பக்குவம் வாய்க்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கை என்பது ஒரு பயணம்; அந்த பயணத்தில் ஒருவா் மேற்கொள்ளும் பயணமானது எந்த திசையில் என்பதை தீா்மானிப்பது மிகவும் அவசியம். சரியான திசையில் பயணித்தால் மகிழ்ச்சி. அவ்வாறு இல்லாமல், தான் பயணிக்கும் திசை தமக்கு பொருத்தமானது அல்ல என்ற முடிவுக்கு வரும் அந்த விநாடியே சரியான திசையில் பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சரியான திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வோா் அடியும் இலக்கை நோக்கியது. அதே நேரத்தில் பொருந்தாத திசையில் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டாலும் அது இலக்கை அடைய உதவப்போவதில்லை.