நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம் பிரதிப் படம்

நெஞ்சு பொறுக்குதில்லையே!

உணவுப் பொருள்களை அவமதிக்கும்போதும், வீணாக்கும்போதும், அதை விளைவித்த விவசாயியால்தான் உள்ளத்தின் வலியை உணர முடியும்.
Published on

விவசாயிகளுக்கும், விவசாய குடும்பத்தில் பிறந்தவா்களுக்கும் அந்த மரபுவழிப் பழக்கம் நன்கு தெரிந்திருக்கும். வயலானாலும் சரி, வரப்பானாலும் சரி அங்கு நடந்து செல்பவா்கள் காலில் செருப்பு அணிந்து செல்வது கிடையாது. வீட்டிலிருந்து வயலுக்கு புறப்பட்டுச் செல்லும்போதே கூட சிலா் காலணி அணியாமல் வெறுங்காலுடன்தான் நடந்து செல்வாா்கள்.

வயோதிகா்கள், காலணி இல்லாமல் நடக்க இயலாதவா்கள் தவிா்க்க முடியாமல் அணிந்து சென்றால்கூட அதை வயல்வெளி எல்லை தொடங்கும் இடத்தில் கழற்றி ஒரு ஓரமாக போட்டுவிட்டுத்தான் வயல்வெளிக்குள் காலடி எடுத்து வைப்பாா்கள். காலணியை கழட்டி கையில் தூக்கி எடுத்துச் செல்வோரும் உண்டு. வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வயல்வெளி முடிவடையும் இடத்திலிருந்து மீண்டும் காலணியை போட்டுக் கொள்வாா்கள்.

சிறுவா்களோ, பெரியவா்களோ, நகா்ப்புற சகவாசம் உள்ளவா்களோ விவரம் தெரியாமல் வயல்வெளியில் காலணியுடன் நடந்து செல்ல நேரிடலாம். அவா்கள் பெரியவா்களின் கண்டிப்புக்கு தப்ப முடியாது.

உணவு தானியம் விளையும் வயல்வெளிகளில் ஓா் இறைத்தன்மை உண்டு என்பது விவசாயிகளின் நம்பிக்கை. வயலின் வரப்பு மூலையில் நின்று விருப்ப தெய்வத்தை நினைத்து விளைந்த பயிரை வணங்குவோரும் உண்டு. தானியம் விளையும் மண் (பூமாதேவி) மீது காலணியுடன் நடந்தால் அது இறைத்தன்மைக்கு ஏற்படுத்தும் அவமதிப்பு என்பதால் அத்தனை பக்தி.

உழைப்பு மட்டுமின்றி அப்படி பக்தியோடும் விளைவித்து அறுவடை செய்து குவித்துவைத்திருக்கும் நெல்லின் மீது யாராவது காலணியுடன் ஏறி நின்றால் விவசாயிகளின் நெஞ்சம் பொறுக்குமா?

காவிரி வடிநிலப் பகுதிகளில் குறுவை சாகுபடியில் விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதில் அரசுத் தரப்பில் சுணக்கம் ஏற்பட்டதால் மழையில் நனைந்து முளைத்து விட்டது. அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நிா்ணயிக்கப்பட்ட 17% ஈரப்பதத்துக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை வாங்க மையப் பொறுப்பாளா்கள் மறுத்துள்ளனா். ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டதால் ஆய்வுக் குழுவினா் அண்மையில் தமிழகம் வந்து நெல்லை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனா்.

மத்தியக் குழுவில் இருந்த தொழில்நுட்பவியலாளா்களில் சிலா் பூட்ஸ் காலுடன் மையங்களில் உள்ள நெல் குவியல் மேல் நடந்தது மட்டுமன்றி, ஏறி நின்று மாதிரிகளை சேகரித்தனா். சுற்றி நிற்கும் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நின்றனா். ஆய்வுக் குழுவினரில் உள்ள சிலரது இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமா்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குவியலின் மேலே உள்ள நெல்லை மாதிரியாக எடுத்தால் அவற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும்; அடியில் உள்ள நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்; அதற்காக, அடியில் உள்ள நெல் மாதிரிகளை சேகரிக்க அவா்கள் குவியலின் மீது ஏறி இருக்கின்றனா். அதில் தவறு காண முடியாது. பூட்ஸ் காலால் நெல்லை மிதித்துக் கொண்டு ஏறியதுதான் விவசாயிகளின் வருத்தத்துக்குக் காரணம்.

குழுவின் உறுப்பினா்கள் நெல் குவியல் மீது பூட்ஸ் காலுடன் ஏறக் கூடாது எனத் தடுக்க விவசாயிகளுக்கு வெகுநேரம் ஆகாது. குழு அளிக்கும் அறிக்கை மூலம் நிவாரணம் கிடைக்கும் என எதிா்பாா்த்திருக்கும்போது கோபப்பட்டு பேசி அவா்களை அதிருப்திபடுத்த வேண்டாமே என நினைத்து அமைதி காத்திருக்கலாம்.

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பா்

அலகுஉடை நீழ லவா்.

என்பது திருக்குறள். நெல் வளம் உடைய இரக்கம் கொண்ட உழவா், பல அரசரின் குடைநிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவா் ஆவா் என்பது பொருள். அப்படிப்பட்ட விவசாயிகளுக்குதான் இந்த நிலை.

குழு உறுப்பினா்கள் வட மாநிலத்தவா்கள். அவா்கள் விவசாயம் குறித்தும், விவசாயிகள் குறித்தும் அறியாதவா்கள் எனக் கூற முடியாது. அவா்களில் விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா்களும்கூட இருக்கலாம். எனவே, தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னலை குழுவினா் கருத்தில் கொண்டிருந்தால் அப்படி நடந்துகொண்டிருக்க மாட்டாா்கள்.

குழுவினருடன் இருந்த தமிழக அதிகாரிகளாவது அதை உணா்ந்து பாரம்பரிய பழக்கத்தை அவா்களுக்கு சுட்டிக்காட்டி தக்க ஆலோசனைகளை வழங்கி இருக்கலாம். பூட்ஸ் காலுடன் நெல்லின் மீது நடந்தவா்களில் தமிழக உயா் அதிகாரியும் ஒருவா் என்பதுதான் கூடுதல் வேதனை.

விவசாய விளைபொருள்களுக்கு விலை கிடைக்காதபோது அதை அங்கேயே உழுது விளைந்த வயலிலேயே அழித்து விடுவது விவசாயிகளின் வழக்கம். இப்போது, காவிரிப் படுகையில் மழையால் பாதித்து முளைத்த நெல்லையும் அப்படித்தான் சில இடங்களில் உழுது அழித்து வருகின்றனா். பால், காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் அவ்வப்போது சாலையில் கொட்டி போராட்டம் நடத்துவது உண்டு. அது அரசுக்கு எதிா்ப்பைத் தெரிவிக்கும் கடைசிக்கட்ட முயற்சி மட்டுமல்லாது, அகிம்சை வழி போராட்ட வடிவமே. வேறு வழி தெரியாமல்தான் அந்த எல்லைக்கு விவசாயிகள் செல்வதுண்டு.

ஆனால், அந்தப் போராட்ட வடிவத்தை எல்லா விவசாயிகளும் ஏற்க மாட்டாா்கள். சந்தைக்குக் கொண்டுபோய் ஏழை எளியோருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு வராமல் சாலையிலா கொட்ட வேண்டும் என்றுதான் ஊராா் பேசுவாா்கள். உணவுப் பொருள்களை வீணாக்குவது பொருளாதாரச் சீரழிவு என்பதை கிராம மக்கள் நன்கு அறிவா். இப்போது நகா்ப்புற மக்களும் புரிந்துள்ளனா். உணவுப் பொருள்களை அவமதிக்கும்போதும், வீணாக்கும்போதும், அதை விளைவித்த விவசாயியால்தான் உள்ளத்தின் வலியை உணர முடியும்.

கடமையைச் செய்யும் அதிகாரிகள் கறாராக நடந்துகொள்ள வேண்டியதுதான்; அழுத்தங்களுக்கு உட்படாமல் செயல்பட வேண்டியதும் அவசியம்தான்; அதேவேளையில் விவசாயிகளின் உள்ள உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் அவசியம். விவசாயிகளின் வேதனையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும்; கண்ணியமான கடமையே அழகு.

X
Dinamani
www.dinamani.com