ஒரு கதவு மூடினால்...

உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை.
ஒரு கதவு மூடினால்...
Published on
Updated on
2 min read

உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜும்தார்.

தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளைப் பெற இயலாமல் ஓய்வையும் அறிவித்த அமோல் மஜும்தார், அண்மையில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன் ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியின் வித்தகராக மலர்ந்திருப்பது சாதாரண விஷயமன்று.

கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் எதுவானாலும் அதில் ஈடுபடும் வீரர் ஒவ்வொருவருக்கும் தமது நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடவேண்டும் என்பதே தலையாய விருப்பமாக இருக்கும். ஆனால், திறமையுள்ள வீரர் - வீராங்கனைகள் அனைவருக்கும் அவரவர் நாட்டு அணிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்துவிடாது.

பல்வேறு விளையாட்டுகளையும் நிர்வகிக்கும் அமைப்புகளின் செயல்பாடு, தேர்வாளர்களின் விருப்பு-வெறுப்பு போன்ற காரணிகள் ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்குரிய வாய்ப்புகள் கிடைப்பதையும், மறுக்கப்படுவதையும் தீர்மானிக்கின்றன.

1974-ஆம் ஆண்டு பிறந்தவராகிய அமோல் மஜும்தார் திறமையான வலதுகை பேட்டராகவும், வலதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கினார். ஆனால், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்களின் பட்டியல், அணித் தேர்வாளர்களின் கையில் இருந்ததால், இவரால் இந்திய தேசிய அணியில் இடம்பெறவே இயலாமல் போனது.

மும்பை ரஞ்சிக் கோப்பை அணியின் தலைவர் பதவி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியின் துணைத் தலைவர் பதவி மட்டுமின்றி, இந்தியா-ஏ அணியிலும் இடம் பெறுகின்ற அளவுக்குக் கடுமையாக உழைத்தவரால் கடைசி வரையில் இந்திய தேசிய அணியில் இடம் பெற முடியவில்லை.

ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுபவர்கள் தாங்கள் விளையாடும் அணியை மாற்றிக் கொள்ள அளிக்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அஸ்ஸôம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் ரஞ்சி அணிகளில் இடம்பெற்று விளையாடிய பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகிய அமோல் மஜும்தார், 2014-ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தாம் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க இயலாவிட்டாலும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி, 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி, சர்வதேச அளவில் வளர்ந்துவரும் அணியாகிய நெதர்லாந்து அணி ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புகள் அமோல் மஜும்தாரைத் தேடி வந்தன.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான பயிற்சியாளர் பதவியும், மும்பை ரஞ்சிக் கோப்பை அணியின் பயிற்சியாளர் பதவி ஆகியவையும் இவரைத் தேடிவந்தன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியில் அமர்த்தப்பட்ட அமோல் மஜும்தார், திறமை மிகுந்த இளம் வீராங்கனைகளை ஒருங்கிணைத்துச் சிறந்த முறையில் வழிகாட்டியதன் மூலம் இன்று மகளிர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்திருக்கிறார் எனும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

மகளிர் உலகக் கோப்பை வெற்றியை நோக்கிய பயணம் அமோல் மஜும் தாருக்கு அப்படி ஒன்றும் எளிதாக அமையவில்லை. ஒட்டுமொத்த அணித் தேர்வு, ஒவ்வொரு போட்டிக்கும் உரிய 11 வீராங்கனைகளைக் கொண்ட இறுதி அணியின் தேர்வு, முறையான வலைப்பயிற்சி, தேவையான உடற்பயிற்சி, வீராங்கனைகளுக்கு ஏற்படும் காயம், தொடர்தோல்விகளால் துவண்டு போன வீராங்கனைகளின் மனங்களில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை அனைத்தும் இவருக்குச் சவால் மிகுந்ததாகவே அமைந்திருந்தன.

அரை இறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளிடம் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த இந்திய அணி வீராங்கனைகளைத் தேற்றி மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவந்தது இவருடைய குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அமோல் மஜும்தாரின் கிரிக்கெட் வாழ்க்கை, ஒரு வகையில் நம் தமிழகத்தின் எஸ்.வெங்கட்ராகவனுடையதை ஒத்திருப்பதாகக் கூற முடியும். திறமையான ஆஃப் ஸ்பின்னராக விளங்கிய வெங்கட்டின் சமகாலத்தில் அவரைப்போலவே திறமைவாய்ந்த ஆஃப் ஸ்பின்னராகிய கர்நாடகத்தின் இ.ஏ.எஸ்.பிரசன்னாவும் களத்தில் இருந்ததால் பெரும்பாலும் இவ்விருவரில் ஒருவர் மட்டுமே ஆஃப் ஸ்பின்னர் என்ற கணக்கில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்தக் காரணத்தால் இந்திய அணிக்காகக் குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகளையே பெறமுடிந்த வெங்கட்ராகவன் தாம் ஓய்வுபெற்ற பிறகும் சர்வதேச கிரிக்கெட் நடுவராகப் பணிபுரியும் தகுதியைப் பெற்று நீண்டகாலம் திறமையுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவ்வுலகில் தொடர் தோல்விகளால் துவண்டவர்களை உற்சாகமூட்டும் விதத்தில், 'கடவுள் ஒரு கதவை மூடினால், நமக்காக இன்னொரு கதவைத் திறந்து வைப்பார்' என்று கூறுவது உண்டு.

திறமையிருந்தும் தாங்கள் விரும்பும் வாய்ப்புகளைப் பெற இயலாதவர்கள், வேறு வடிவில் தங்களைத் தேடிவரும் வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சாதனைகளைச் செய்யலாம் என்பதற்கு அமோல் மஜும்தார், எஸ்.வெங்கட்ராகவன் ஆகிய இருவரின் வாழ்க்கையே சாட்சி என்றால் அது மிகையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com