
- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
உலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், "குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.
1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று "டாக்டர்ஜி' என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவார் ஐந்தாறு இளைஞர்களுடன் தொடங்கிய பாதுகாப்புக்கான குழு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இன்று மகத்தான பேரியக்கமாக உருபெற்றிருக்கிறது. தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக அந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
எனது 16-வயதில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் (கூட்டத்தில்) கலந்து கொண்டபோது எனக்கு போதிக்கப்பட்ட கருத்து- தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக இந்தக் கட்டளை இருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய , மிகச் சிறந்த இயக்கமாக உருவாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். என்பது ஏதோ ஹிந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனி மனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணை அமைப்புகளும் , பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு என்ன காரணம் என்று கேட்பவர்கள், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள் குறித்த புரிதல் இல்லாதவர்கள். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸôகதான் இருக்கும்.
1947 பிரிவினையைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் மேற்கு பஞ்சாபில் இருந்தும் (இப்போதைய பாகிஸ்தான்) கிழக்கு வங்கத்தில் இருந்து (இப்போதைய வங்கதேசம்) அகதிகளாக அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். அதன் சேவைகளைப் பார்த்துத்தான் காங்கிரஸ் கட்சியும் முகாம்களை அமைத்து அகதிகளுக்கு உதவ முன்வந்தது என்பது வரலாறு.
1971 ஒடிஸô புயல், 1977 ஆந்திரப் புயல், 1984 போபால் விஷவாயுக் கசிவு, 1984 தில்லி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, 2001 குஜராத் பூகம்பம், 2004 ஆழிப்பேரலை (சுனாமி) சீற்றம், 2020 கரோனா நோய்த் தொற்று பரவல் என்று இந்தியாவில் ஏற்பட்ட எந்தவொரு பேரழிவு நிகழ்வானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணம் வழங்கவும், பாதுகாப்புத் தரவும் முன்நின்று செயல்படும் ஒரே சமுதாய அமைப்பாக இன்றுவரை இருந்து வருவது ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
2015 பெருமழை வெள்ளத்தில் சென்னை மிதந்தபோது, மீட்புப் பணிகளில் முன்னிலை வகித்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான். ஆழிப்பேரலை தாக்கியபோதும், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் களமிறங்கியவர்களும் அவர்கள்தான். இதை ஊடகங்கள் வெளிக்கொணரத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மகாத்மா காந்திக்கு எதிரானது என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். காந்தியடிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் இடையே நட்பும், மரியாதையும் நிலவியது. 1934-இல் மகாத்மா காந்தி மகாராஷ்டிர மாநிலம், வர்தாவில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
1947 செப்டம்பர் 16-ஆம் தேதி தில்லியில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள் காலனியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார். இது குறித்து அவரது "ஹரிஜன்' செப்டம்பர் 28-ஆம் தேதி இதழில் காந்தியே குறிப்பிட்டிருக்கிறார்.
"ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. குறிக்கோளில் தூய்மை, அடிப்படை நேர்மை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையிலான எந்தவொரு அமைப்பும் வலுவான அமைப்பாக உயரும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்காட்டு'' என்பது காந்திஜியின் பதிவு.
1925-இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியதுமுதல் அதன் ஷாகாக்கள் தினசரி கூடுவது தடைபட்டதோ, நிறுத்தப்பட்டதோ இல்லை.
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட செய்தி வந்தபோது குருஜி கோல்வல்கர் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தேநீரை குடிக்க முற்பட்டபோது அவரிடம் காந்திஜி படுகொலை செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேநீர் கோப்பையை அப்படியே வைத்து விட்டு கண்களை மூடிச் சிலையாய் சமைந்தார் "குருஜி'. கண்களைத் திறந்ததும் அவரது உதடு உதிர்த்த வார்த்தைகள் இவை- "தேசத்துக்கு என்னவொரு துரதிருஷ்டம்.'
உடனடியாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேல், காந்திஜியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி மூவருக்கும் தனது இரங்கலைத் தந்தி மூலம் தெரிவித்தார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு விரைந்தார் "குருஜி'.
காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அடுத்த 13 நாள்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடத்தப்படவில்லை. அந்த இயக்கத்தின் வரலாற்றிலேயே வேறு யாருக்காகவும் ஷாகாவின் செயல்பாடு நிறுத்தப்பட்டதேயில்லை.
அப்படி இருந்தும் 1948 ஜனவரி 4 -ஆம் தேதி முதல் 1949 ஜூலை 11-ஆம் தேதிவரை ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கம் பண்டித ஜவாஹர்லால் நேரு அரசால் தடை செய்யப்பட்டது. 1966-இல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எம். கபூர் தலைமையில் மகாத்மா காந்தியின் படுகொலை தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த ஆணையம் 101 சாட்சிகளை விசாரித்தது. 407 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
1969-இல் வெளியிடப்பட்ட நீதிபதி ஜே.எம். கபூர் ஆணைய அறிக்கை, ""மகாத்மா காந்தியையோ, ஏனைய மூத்த காங்கிரஸ் தலைவர்களையோ குறிவைத்துத் தீவிரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஈடுபடுவது தொடர்பாக எந்தவொரு ஆதாரமோ, சாட்சியங்களோ இல்லை'' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை ஜாதிபேதமற்ற ஹிந்து சமுதாயம் என்பது ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ""பாரதியர்கள் அனைவருமே ஹிந்துக்கள். ஹிந்துக்கள் அனைவரும் பாரதியர்கள். "ஹிந்து' என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை; பண்பாட்டுக் கூறு. பாரதத்தில் வாழும் அனைவருமே "ஹிந்து' கலாசாரத்துடன் இணைந்திருக்கிறார்கள். ஹிந்து முன்னோர்களைக் கொண்டவர்கள் ஹிந்து தேசத்தை, அதாவது பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று சர்சங்சாலக் மோகன் பாகவத்ஜியின் கூற்றுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைக் கொள்கை.
""தீண்டாமை என்பது இந்திய மண்ணில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும்'' என்று 1973-இல் குரல் கொடுத்தவர் அப்போதைய சர்சங்சாலக்காக இருந்த "பாலாசாகேப்' என்று அழைக்கப்பட்ட மதுகர் தத்தாத்ரேய தேவரஸ். காந்தியடிகள் மட்டுமல்ல, பாபாசாகேப் அம்பேத்கராலும் ஆர்.எஸ்.எஸ். பாராட்டப்பட்டதற்குக் காரணம், தீண்டாமை குறித்த அந்த இயக்கத்தின் அணுகுமுறை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் அம்பேத்கருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பிருக்கவில்லை என்கிற பரப்புரை சிலரால் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 21, 1940 அன்று டாக்டர் அம்பேத்கர் சதாரா மாவட்டத்திலுள்ள கராடில் உள்ள ஷாகாவில் கலந்து கொண்டது குறித்த செய்தி புணேயில் இருந்து வெளிவரும் "கேசரி' நாளிதழில் காணப்படுகிறது. காங்கிரûஸ எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தேர்தலில் நின்றபோது, அவருக்கு ஆதரவாகப் பணியாற்றியது ஆர்.எஸ்.எஸ். என்பதும் உலகறிந்த உண்மை.
"அனைவரும் அர்ச்சகராகலாம் ' என்கிற கருத்தை முன்மொழிந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். காந்திஜியும் சரி, டாக்டர் அம்பேத்கரும் சரி, "தீண்டாமை' என்கிற ஒரு பிரச்னையில் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள்.
இன்று தனது நூற்றாண்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொண்டாடுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் தன்னலமற்ற தொண்டும், இந்தியாவில் வாழும் அனைவரும் "பாரதியர்' என்கிற கண்ணோட்டமும், தேசப்பற்றுடன் கூடிய அர்ப்பணிப்பும்தான். நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை, மாணவனாக ஷாகாவுக்குச் சென்று பொதுவாழ்க்கையைத் தொடங்கிய நான் வாழ்த்த கூடாது-அதனால் வணங்குகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.