
இன்றைய உலக வர்த்தகம் பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி எதிர்காலம் குறித்த அச்சம் எழுவது இயல்பே. உலக வர்த்தகத்தில் ஒரு நாட்டின் ஏற்றுமதி, பிற நாடுகளின் அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களைப் பெரிதும் சார்ந்துள்ளது.
உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகள் விதிக்கும் கூடுதல் வரிகள் அல்லது தடை உத்தரவுகள், இந்தியப் பொருள்களின் விலையை அதிகரித்து, சர்வதேச சந்தையில் அவற்றின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாக இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதித்து, பொருளாதார வளர்ச்சியைக் குறைக்காமல் பாதுகாப்பது அவசியம்.
இத்தகைய சவால்கள் நமக்குப் புதியதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர் இதைவிடப் பெரிய இடர்களை எதிர்கொண்டு, நுட்பமான உத்திகளால் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
சந்தைப் போட்டியில் வெற்றிபெற வெறும் விலையையும் தரத்தையும் மட்டும் நம்பியிருக்க முடியாது. நேர்மையான வர்த்தகம் மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதுதான் உண்மையான, நிலைத்திருக்கும் மூலதனம் என்பதை அக்காலத் தமிழ் வணிகர்கள் நிரூபித்தனர். இன்றைய எண்ம யுகத்தில், உலகளாவிய வர்த்தகப் போட்டிகளை வெல்வதற்கு, இந்த அடிப்படை நேர்மையையும், தரக் கட்டுப்பாட்டையும் நாம் மீண்டும் கையிலெடுக்க வேண்டியது மிக அவசியம்.
19-ஆம் நூற்றாண்டில் இந்திய வணிகர்கள், ஒரு இணை அதிகார மையமாகச் செயல்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சான்சிபார் தீவில் இதன்
உச்சத்தைக் காணலாம். குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் சிவ்ஜி, சான்சிபாரை ஆண்ட ஓமன் சுல்தான் சையத் சயீத்திடம் இருந்து சுங்க வரி வசூலிக்கும் முழு உரிமையையும் பெற்றார். இது இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அமைந்தது.
ஐரோப்பிய, அமெரிக்க வர்த்தகர்கள் உள்பட அனைவரும் ஜெயராம் சிவ்ஜியிடம் கணக்குக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமலேயே, பொருளாதாரத்தின் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்தி, ஒரு தனிநபர் பேரரசைப்போல் செயல்பட முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் கடற்பயணங்களும் வர்த்தகமும் ராஜதந்திரமும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்த்தின. சோழப் பேரரசின் கடற்பயணங்கள், தென் கிழக்கு ஆசியாவின் வணிகப் பாதைகள் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தி, வர்த்தகப் பாதுகாப்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன.
இந்த வரலாற்று அணுகுமுறைகளை இன்றைய நவீனச் சூழலுக்கு ஏற்ப நாம் பின்பற்ற வேண்டும். உலகெங்கிலும் நிதி, தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் வலுவான நிலையில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தோர் நமது மிகப் பெரிய பலம். அவர்களின் சந்தை நுண்ணறிவையும், உள்ளூர் சமூகங்களுடனான தொடர்புகளையும் பயன்படுத்தி, புதிய கூட்டணிகளை உருவாக்குவது, வர்த்தகத் தடைகளைத் தாண்டி வெற்றிபெற உதவும்.
இன்றைய வர்த்தகப் போர்களை எதிர்கொள்ள, நிதித் தொழில்நுட்பம் மற்றும் எண்மப் பாதுகாப்பு போன்ற நவீன உத்திகள் அவசியமாகின்றன. பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் சர்வதேசப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யலாம்.
ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான் போன்ற கூட்டமைப்புகள் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இத்தகைய கூட்டணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
மூலப்பொருள்களை ஒரே ஒரு நாட்டில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யாமல், பல நாடுகளிலிருந்து பெறுவதும், உற்பத்தி நிலையங்களை வெவ்வேறு புவியியல் பகுதிகளில் அமைப்பதும்
மிகவும் முக்கியமான உத்திகளாகும். இது ஒரு நாட்டில் ஏற்படும் அரசியல் பதற்றம், வேலைநிறுத்தம் அல்லது இயற்கைச் சீற்றம் போன்ற நெருக்கடிகளின்போது, உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, வர்த்தகப் பாதுகாப்பை வழங்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவும், 20}ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜப்பானும் இத்தகைய சவால்களை எதிர்கொண்டன. அவர்கள் வெளிநாட்டு வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்பட்டபோது, உள்நாட்டுத் தொழில்களில் முதலீடு செய்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினர். இதன் விளைவாக, அவர்களின் பொருளாதாரம் பலமடைந்ததுடன், உலகத் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறினர்.
எனவே, வணிகச் சவால்கள், ஏற்றுமதித் தடைகள் போன்றவை ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் திறக்கும் ஆற்றல் கொண்டவை என்பதை நாம் உணர முடியும்.
உலக வர்த்தகத் தடைகள் ஏற்படும்போது, 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையே நமது பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய பாதுகாப்பாகவும், வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவும் அமைகிறது. இந்த உள்நாட்டுச் சந்தையை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், வெளி வர்த்தகச் சவால்களைச் சமாளித்து, வலுவான பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.