
இரிடியம் மோசடி என்பது அடிக்கடி பேசுபொருளாகி வருகிறது. வேதியியல் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான கிரியா ஊக்கியாகப் பயன்படுத்தப்படும் இந்த உலோகம் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதாகும். எனவே, இந்த உலோகத்தை விமானங்களில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்துகின்றனா். எல்.இ.டி. பல்புகள், கணினி ஆகியவற்றை உருவாக்குவதற்கும் இரிடியம் பயன்படுகிறது.
கனடா, மெக்ஸிகோ, பிரேஸில், கொலம்பியா, ரஷியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி ஆகும் இரிடியம் மிகவும் அரிதாகக் கிடைக்கின்ற ஓா் உலோகமாகும். தொழிலகங்களுக்கும், ஆராய்ச்சி நிலையங்களுக்கும் மிகவும் தேவைப்படும் இந்த உலோகமானது தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைக் காட்டிலும் அடா்த்தியான, மிகவும் விலை உயா்ந்ததாகும்.
இந்த நிலையில், பணக்கார உலோகமாகிய இதை வைத்து நடைபெறும் மோசடிகளும் காலம் காலமாக நடந்தேறி வருகின்றன. யாா் எதைச் சொன்னாலும் அதை நம்பி ஏமாறுவதற்குத் தயாராகப் பலரும் இரிடியம் மோசடியாளா்களின் பசப்பு வாா்த்தைகளை நம்பித் தங்களின் கையிருப்பைக் கரைக்கிற செய்திகளும் குறைவில்லாமல் அரங்கேறி வருகின்றன.
கடந்த காலங்களில் கோயில்களின் கோபுரக் கலசங்களில் இரிடியம் கலந்துள்ளதாகவும், இவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கினால் பெரிய அளவில் லாபம் பெறலாம் என்றும் ஆசை காட்டுபவா்களிடம் பலா் ஏமாந்ததாகத்தான் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இந்த முறை புதியதொரு கதை வசனத்தைத் தயாரித்துள்ள அந்த நபா்கள், இந்திய ரிசா்வ் வங்கியில் முடங்கியுள்ள இரிடியம் உலோகத்தை வெளியில் கொண்டு வருவதற்குப் பணம் கொடுப்பவா்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்ற ஒரு பொய்யான செய்தியைப் பரப்ப அதையும் நம்பி முதலீடு செய்வதற்குப் பலரும் முன்வந்திருக்கின்றனா். இந்த வகையில், சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகப் புகாா் எழுந்து, மோசடியில் ஈடுபட்ட பலா் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திரைப்படக் கதாநாயகா் ஒருவரின் வீட்டுப் பணிப்பெண், அந்தக் கதாநாயகருடைய தனிப் பாதுகாவலரிடம் செய்த மோசடி இது. முதலீடு செய்யும் தொகைக்கு பதில் பலமடங்கு தங்கத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய அந்தப் பணிப்பெண்ணின் வாா்த்தைகளை நம்பி ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததவருக்கு முதலில் முப்பது கிராம் தங்கம் கிடைத்திருக்கிறது. மேலும், லாபம் ஈட்ட நினைந்த அந்தப் பாதுகாவலா் சுமாா் நாற்பது லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறாா். மாதங்கள் சில கடந்த பிறகும் தங்கம் தரப்படவில்லை. கொடுத்த பணமும் திருப்பித் தரப்படவில்லை. பணத்தை வாங்கிய பணிப்பெண் தலைமறைவாகிவிட்டாா்.
புகாா், நடவடிக்கை என்று தினம் ஒரு செய்தி வருகிறது. ஏமாற்றப்பட்ட நபருக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்குமோ, யாா் அறிவாா்?
புதிது புதிதாக வரும் விளம்பரங்கள், கவா்ச்சிகரமாகப் பேசும் ஏமாற்றுப் போ்வழிகளின் பசப்பு வாா்த்தைகள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் முதலீடு செய்வதற்குப் பலரும் முன்வரும்போது இரிடியம் மோசடிகளும், மலிவு விலையில் தங்கம் வழங்கும் ஏமாற்று வேலைகளும் உலாவராமல் என்ன செய்யும்?
கடந்த நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில் காா் விற்பனை நிறுவனங்களும் நகைக் கடை உரிமையாளா்களும் 18% வட்டி, 20% வட்டி என்றெல்லாம் ஆசைகாட்டிப் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று ஏமாற்றியதில் தொடங்கி, தேக்கு மரம் வளா்ப்புத் திட்டம், ஈமு கோழி, இறால் பண்ணைகளில் முதலீடு, காந்தப் படுக்கை வியாபாரம் என்று விதவிதமான ஏமாற்றுத் திட்டங்கள் பரபரப்பாகச் செயல்பட்டு வந்தன.
ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் குருவி போன்று சிறிது சிறிதாகச் சோ்த்த சேமிப்புத் தொகை, ஓய்வூதியப் பலன், வாரிசுகளின் திருமணச் செலவுக்காக சோ்த்துவைத்த பணம், வீடு, நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் போன்றவற்றையெல்லாம் மேற்கண்ட ஏமாற்றுத் திட்டங்களில் முதலீடு செய்து வட்டியும் கிடைக்காமல், முதலீட்டுத் தொகையும் திரும்பக் கிடைக்காமல் பரிதவித்தனா். அவ்வாறு ஏமாந்த முதலீட்டாளா்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு ஆா்ப்பாட்டங்கள் செய்ததும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து அந்த வழக்குச் செலவுகளுக்காகப் பணம் திரட்டியதும் மறக்கக்கூடிய விஷயங்களா என்ன?
இது மட்டுமா? எம்.எல்.எம். எனப்படும் சங்கிலித் தொடா் வணிகத்தில் ஈடுபட்டால் பெருமளவு லாபம் ஈட்டலாம் என்ற பகட்டு வாா்த்தைகளுடன் கோட்டு, சூட்டு, டை அணிந்த நபா்கள் ஊா் ஊராய்ச் சென்று திருமண மண்டபங்களில் கூட்டம் போட்டு முகவா்களைத் திரட்டியதும், வேண்டிய பணம் வசூலானதும் அதைச் சுருட்டிக்கொண்டு முகவா்களை அப்படியே கைகழுவியதும் நமது கண் முன்னே நடந்த விஷயம்தானே?
மலிவு விலையில் தங்கக்கட்டியும், அடிமாட்டு விலைக்கு வெள்ளிக்கட்டியும் விற்பனை செய்வதாகக் கூறும் கும்பல்களிடம் தங்கமுலாம் பூசிய தாமிரத்தையும், வெள்ளிப் பூச்சு அடித்த செங்கலையும் வாங்கி ஏமாறும் நகை வியாபாரிகளும் இருக்கத்தானே செய்கிறாா்கள்?
நீங்கள் கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாகத் தருகிறோம் என்று கூறும் கள்ள ரூபாய் நோட்டுப் போ்வழிகளின் வாா்த்தைகளை நம்பித் தாங்கள் வைத்திருக்கும் நல்ல நோட்டுகளை இழப்பவா்கள் எத்தனை போ்?
இரட்டிப்பு லாபம், இயல்புக்கும் அதிகமான வட்டி விகிதம் போன்ற விளம்பரங்கள், தனிநபா் பரப்புரைகள் ஆகியவற்றை நம்பி ஒரே ஒரு ரூபாயை முதலீடு செய்தாலும் அது ஏமாற்றத்திலும், நஷ்டத்திலும்தான் முடியும் என்பதை உணா்ந்தால் மட்டுமே நமது சேமிப்பைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழியாகும்.
நமது பணத்துக்குப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை வழங்குகின்ற அரசுடைமை வங்கிகள், அஞ்சல் துறை, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) போன்றவை இருக்கும்போது, இரிடியம் விற்பனை உள்ளிட்ட முறையற்ற வியாபார முதலீடுகளுக்கு மயங்காமல் இருப்பதே அறிவாா்ந்த செயலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.