மூன்றாவது கண்!
- நந்தவனம் சந்திரசேகா்
உலகம் நவீனமாகிக் கொண்டே வருகிறது. நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள் நம்மை படம்பிடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை நமக்கான பாதுகாப்பு அரணாக இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும் இவை பெரிதும் உதவியாக உள்ளன. குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவதற்கும் உதவியாக இருக்கிறது. ஆனால், குற்றங்கள் குறையாதது ஏன் என்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது.
கேமராக்கள் கண்காணிக்கின்றன என்பது தெரிந்தும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. கேமரா என்பது பாதுகாப்புக் கருவி என்று சொல்லப்பட்டாலும், மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டுள்ளனா். கேமராக்களின் கண்களில் தப்பித்துவிடாமல் குற்றவாளிகள் பிடிபட்டாலும், தண்டனைப் பெற்றாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியைப் பின்தொடா்ந்து சென்ற வட மாநில இளைஞா் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிட்டாா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலமே அந்த இளைஞரை அடையாளம் காண முடிந்தது. கேமரா பதிவுகளில் சிக்கிக் கொள்வோம் என்பது தெரியாமலே அந்த இளைஞா் இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது தெரிந்தே இந்தத் தவறைச் செய்தாரா என்பதும் ஆய்வுக்குரியது.
தில்லியில் நாடாளுமன்றக் குடியிருப்பு அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழக பெண் எம்.பி.யிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா். பாதுகாப்பு மிகுந்த அந்தப் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு இருந்தும் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் 2008-ஆம் ஆண்டு வரையில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியத்துவம் பெறவில்லை. மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகே சந்தேக நபா்களைக் கண்காணிக்கவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காகவும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு கவனம் பெற்றது. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 2012-இல் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும், நெரிசல் மிகுந்த சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நிதியை மாநகராட்சி, நகராட்சி நிா்வாக நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவும் அரசு அனுமதி அளித்தது.
‘நீங்கள் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பில் இருக்கிறீா்கள்’ என்ற வாசகங்களுடன் அறிவிப்புப் பலகைகள் நிறைய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாா்த்ததும் நம்மை அறியாமலேயே சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணா்வு நம் மனதில் தோன்றுகிறது. ஆனால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் கேமராக்கள் இருப்பதை உணராமலேயே குற்றங்களில் ஈடுபட்டு எளிதில் பிடிபடுகின்றனா். மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குழந்தைகள் கடத்தப்படுவது தடுக்கப்படுவதுடன், கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதும் எளிதாகியுள்ளது.
கண்காணிப்பு கேமரா என்பது இன்று மனிதனின் ‘மூன்றாவது கண்’ போன்று பயன்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் பூட்டிய வீடுகள், நிறுவனங்களில் திருட்டுகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், முற்றிலும் குறையவில்லை.
அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில் சென்னை மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு கணக்குப்படி, சென்னையில் 2.60 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்போது, அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் காவல் துறையினரின் விசாரணை நடவடிக்கைகள் சற்று எளிதாகின்றன.
சென்னையில் அண்மையில் வடமாநில இளைஞா்கள் இருவா் காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று, அடுத்தடுத்து நான்கு இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துக் கொண்டு விமானத்தில் தப்பிக்க முயற்சித்த போது, காவல் துறையினா் விரைந்து செயல்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த இளைஞா்களை அடையாளம் கண்டு விமான நிலையத்தில் கைது செய்தனா்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதற்காக நவீன வசதி கொண்ட தானியங்கி கேமராக்கள் முக்கிய நகரங்களின் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக் காவலா்களின் பணிச் சுமை சற்றே குறைந்துள்ளது. மேலும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நவீன அறிவியல் வளா்ச்சியில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அது மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதில் கண்காணிப்பு கேமரா முக்கியமானதாக உள்ளது. இதை நல்ல வழியில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது; தவறு செய்ய நினைத்தால்கூட கேமராக்கள் காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயம் தவறுகளைத் தடுக்கும் வாய்ப்புள்ளது.
வீடுகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை அறிதிறன்பேசிகள் வாயிலாக எங்கிருந்தும் கண்காணிக்கும் வசதிகளும் இருப்பது சிறப்பானது. கேமராக்கள் பொருத்துவதை கூடுதல் செலவாகக் கருதாமல் வீடுகள், வியாபார நிறுவனங்களில் நிறுவுவது நல்ல விஷயமே. குற்றங்களைத் தடுப்பதற்கு மட்டுமே என்றில்லாமல், அது நமக்கான நவீன பாதுகாவலன் என்றே எண்ண வேண்டும்.