திருப்புமுனை நடவடிக்கை!

உலகில் எப்போதாவது அதிசயங்கள் நடப்பது உண்டு. இதற்குக் காரணங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம்.
திருப்புமுனை நடவடிக்கை!
Published on
Updated on
3 min read

உலகில் எப்போதாவது அதிசயங்கள் நடப்பது உண்டு. இதற்குக் காரணங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். மனமுவந்து வரவேற்கலாம். "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி' ஏற்றுக் கொள்ளலாம். அப்படித்தான் ஜிஎஸ்டி வரிக் குறைப்பு வந்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், "அடுத்தத் தலைமுறை ஜிஎஸ்டி சீர் திருத்தங்கள்' எனப்படும் இந்த வரிக் குறைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "ஜிஎஸ்டி 2.0' எனப்படும் இது இந்திய மக்களுக்குத் தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

நவராத்திரி தொடங்கும் செப்டம்பர் 22 முதல் இந்த வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையுள்ள இந்தப் பருவத்தில் மக்கள் பெருமளவில் பொருள்களை வாங்குவார்கள். வரியைக் குறைத்தால் அவர்கள் பொருள்கள் வாங்குவது அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இது கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் வரிகள் அதிகரிக்குமே தவிர குறைவது கிடையாது.

2017-ஆம் ஆண்டு பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. அப்போது, அடித்தட்டு மக்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது என எதிர்ப்புகள் கிளம்பின.

வரிக் கொடுமைகள் குறித்து எதிர்க்கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தின. வரி விகிதங்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு திடீரென வரிக் குறைப்பு செய்திருக்கிறது.

அமெரிக்காவின் 50% அநியாய வரி விதிப்பால் இந்தியத் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் பல மாநிலங்களில் பேரவைத் தேர்தல்களும் வரவிருக்கின்றன. அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மைக்காலமாக இந்தியாவில் வரி விதிப்பு அதிகம் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எப்படி இருப்பினும், இதனை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டும்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்களுக்கு ஜிஎஸ்டி 13% வரை குறைக்கப்படுவதால் நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற வர்த்தக, தொழில் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் 5, 12, 18, 28% என்று 4 பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள் இப்போது 5, 18% என்று இரண்டு பிரிவுகளாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 350}க்கும் மேற்பட்ட பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

12% பிரிவில் இருந்த 99 சதவீதப் பொருள்கள் 5% பிரிவுக்குள் வந்துள்ளன. அதேபோல், 18% ஜிஎஸ்டி பிரிவுக்குள் இருந்த 90 சதவீதப் பொருள்கள் 5% பிரிவுக்குள் வந்துள்ளன. இதனால், பெரும்பாலான பொருள்களுக்கு ஜிஎஸ்டி 13% வரை குறைந்துள்ளது.

என்றாலும், இதைப் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. வணிகர்களும், வணிக நிறுவனங்களும் இந்த விலைக் குறைப்பைப் பொறுப்புடன் ஏற்று செயல்படுத்த வேண்டும். விலை ஏறிய எந்தப் பொருளும், விலை குறைந்ததாக வரலாறு இல்லை.

வரி விகிதங்களை 5%, 18% என இரு விகிதங்களாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாகப் பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை வெகுவாகக் குறையும். உயர் ரக கார்கள், புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்ற குறிப்பிட்ட பொருள்களுக்குச் சிறப்பு 40% ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குட்கா, புகையிலைப் பொருள்கள் தவிர மற்ற அனைத்துப் பொருள்களுக்கான புதிய வரி விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும். தினசரி பயன்பாட்டு உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பு இல்லாத நிலை தொடரும். அதுபோல அனைத்து வடிவிலான சப்பாத்தி, பரோட்டா உணவுப் பொருள்களுக்கு இப்போது விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி நீக்கப்பட்டு, வரிவிதிப்பு இல்லாத வரம்பில் கொண்டுவரப்படும்.

பற்பசை, பால் புட்டி, குடைகள், சைக்கிள், சீப்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள் 5% ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்போது 28%-லிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்படுவதால் சிமென்ட் விலை குறைய வாய்ப்புள்ளது. மின்சார வாகனங்களுக்கு தற்போதுள்ள 5% ஜிஎஸ்டி தொடரும்.

மேலும், ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய வாங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாகத் திரும்பச் செலுத்தும் வரை, புகையிலை, குட்கா, புகையிலைப் பொருள்கள் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் மீது தற்போது விதிக்கப்படும் 28% ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு செஸ் விதிப்பு தொடரும்.

வரி சீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி ஆளும் 8 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசக் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர மாநிலத்தின் நிதியமைச்சருமான பையாவுலா கேசவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜிஎஸ்டி விகிதங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதை ஒரு கூட்டணிக் கட்சியாக தெலுங்கு தேசம் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறது. இது சாமானிய மக்களுக்குச் சாதகமான நடவடிக்கை' என்றார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒன்றுகூடி ஆலாசனை நடத்தின. ஹிமாசல் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் வரி விகித மறுசீரமைப்புக்கு ஒப்புதல் தெரிவிக்க வருவாய் பாதுகாப்புக்கான தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவது என முடிவானது.

இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய ஆடம்பரப் பொருள்கள் மற்றும் தீமைதரக் கூடிய பொருள்கள்மீது 1 முதல் 290% வரி விதிக்கப்பட்டது. அதன்பின் 2026 மார்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலை

முறைச் சீர்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி, நான்கு விகித ஜிஎஸ்டியில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடர்பான முன்மொழிவை

மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியது.

"சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையும் இதுவாகும்' என்று மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கிடைக்கும் பலன்களை நுகர்வோருக்கு தொழில் நிறுவனங்கள் முழுமையாக அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி குறைப்பு மூலம் பெரும்பாலும் அனைத்துப் பொருள்கள் - சேவைகளின் விலை குறையும். இதனால், தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி அதிகரிப்பை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளர்க்கும். தொழில் நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விவசாயம் தொடங்கி குறு, சிறு தொழில்கள், மருந்து உற்பத்தி, மின்னணு சாதனங்கள், சுற்றுலா, காப்பீடு என அனைத்துத் துறைகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன் அடைய வேண்டும்.

அரசு எத்தகைய உயர்ந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அவை மக்களைச் சென்றடைந்தால்தான் மரியாதையாகும்; மதிப்பும் கூடும். ஏழை, எளிய, நடுத்தர மக்களைச் சென்றடையும் திட்டங்களே உயிருள்ள திட்டங்களாகும். விலைவாசி உயர்வதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கக் கூடாது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com