-முனைவர் முஷிரா பானு
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.
ஒரு மாணவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டால், அது அவரது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமின்றி, அவரது குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம், நாடு எனப் பரவலாக பலருக்கும் பயன்தரும். ஆராய்ச்சியின் மூலம் கேள்வி கேட்கும் பழக்கத்தையும், சுய சிந்தனைத் திறனையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் மாணவர்கள் பெறுகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசு, நெகிழிக் கழிவு, தண்ணீர்ப் பஞ்சம், நோய்கள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆராய்ச்சி அவசியம். ஆராய்ச்சியின் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. மருத்துவத்தில் தரமான சிகிச்சை முறைகள், விவசாயத்தில் மேம்பட்ட விதைகள், சுற்றுச்சூழலில் பசுமைத் தொழில்நுட்பங்கள், தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு போன்றவை மாணவர்களின் ஆராய்ச்சியிலிருந்து உருவாகும் திறன்கள்.
சி.வி.ராமன், அப்துல் கலாம் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது இளமைக் காலத்திலேயே ஆராய்ச்சி செய்து உலகத்துக்குப் பங்களித்தனர். இதேபோல், இன்றைய மாணவர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, நாளைய சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
ஆனால், மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான ஆய்வக வசதிகள் குறைவாக உள்ளன. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் ஆராய்ச்சிக் கனவுகள் நிறைவேறாமல் போகின்றன. திறமையான வழிகாட்டிகள் இல்லாதது மாணவர்களின் முயற்சிக்குத் தடையாக உள்ளது.
பள்ளி, கல்லூரி நிலைகளிலேயே மாணவர்களை சிறிய ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்புகள் கிடைத்தால்தான் அவர்களின் திறமை சரியான திசையில் வெளிப்படும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாணவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஆராய்ச்சிப் பயிற்சிகளை மேற்கொள்ள உதவுகின்றன.
மாணவர்களின் ஆராய்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தேசிய அமைப்புகள் பல திட்டங்களை அறிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்காக அறிவியல் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆய்வறிக்கைகளை வெளியிடும் வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. இளம் விஞ்ஞானி ஊக்கத்தொகை, பயிலரங்குகள் நடத்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல் துறையில் மாணவர்களை ஈர்க்கும் விதமாக மத்திய அரசு சார்பில் "இன்ஸ்பயர்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, பள்ளி அளவில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் கல்லூரிகளில் ஆய்வக வசதிகள், கருவிகள், ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
சமூக அறிவியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக புலமைப் பரிசில் மற்றும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது வரலாறு, தத்துவம் போன்ற துறைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான தொழில்நுட்ப வசதிக்காக "வர்ச்சுவல் லேப்' திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் களமாக "அடல்' ஆய்வகங்கள் உள்ளன.
கலை, அறிவியல் மாணவர்கள் தங்கள் திறமைகளை ஆராய்ச்சி வாயிலாக வெளிப்படுத்தும் போது, அது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்துக்கும், நாட்டின்அறிவியல், கலாசார வளர்ச்சிக்கும் பெரிய பங்களிப்பை அளிக்கின்றன.
மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது சமூகத்தில் புதிய மாற்றங்கள் நிகழும்; கல்வி நிலையங்கள் உயிரோட்டமிக்க களமாக மாறும்; மாணவர்கள் சிந்திக்கும் குடிமக்களாக உருவாகுவர்; நாடு சுயமுன்னேற்றப் பாதையில் சென்று உலக முன்னணியில் திகழும். இதனால், மாணவர்களின் ஆராய்ச்சி "நாளைய சமூகத்தின் மாற்றுச் சாவி' என்பது வெறும் முழக்கமல்ல; வரலாற்று உண்மை.
கல்வி நிலையங்கள் மாணவர்களை புத்தக அறிவில் மட்டும் கட்டுப்படுத்தாமல், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னோடிகளாக உருவாக்க வேண்டும். ஒவ்வோர் மாணவரும் தமக்குள் இருக்கும் ஆராய்ச்சி மனப்பாங்கை வெளிக்கொண்டு வந்து, சமூக முன்னேற்றத்துக்கான மாற்றுச் சாவியாக திகழ வேண்டும். இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட்டால், அவர்கள் கண்டு பிடிக்கும் புதுமைகள் நாளைய தலைமுறைக்கான புதிய உலகைக் கட்டமைக்கும்.
ஆராய்ச்சி என்பது பெரிய ஆய்வகங்களில் நடக்க வேண்டிய ஒன்று மட்டும் அல்ல; அது மாணவர்களின் ஆர்வத்திலிருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தொடங்கக்கூடியது. அந்தச் சிந்தனைகளை உறுதிப்படுத்தும் நிதி, வசதி, தளம் ஆகியவற்றை அரசின் ஊக்கத் திட்டங்கள் வழங்குகின்றன. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி ஆராய்ச்சி மூலம் புதிய உலகத்தைப் படைக்க முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.