இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

காற்று, நீா் மற்றும் உணவுடன் தொடா்புடைய உடல்நலக் கோளாறுகளால் உலகில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

News image

தில்லி காற்று மாசு

PTI

Updated On :1 ஏப்ரல் 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

முனைவா் ப.மு. நடராசன்

காற்று, நீர் மற்றும் உணவுடன் தொடர்புடைய உடல்நலக் கோளாறுகளால் உலகில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் காற்றே மிக முக்கியமானது. ஒருவர் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் காற்றைச் சுவாசிக்காமல் இருப்பின் உயிரிழப்பார். ஆனால், நீரின்றி சில நாள்களும், உணவின்றி சில வாரங்களும் வாழ இயலும். எனவே, தூய காற்று என்பது ஆரோக்கியமான, நிலைத்த வாழ்க்கைக்கான மக்கள் அடிப்படைத் தேவையாகும்.

தில்லி காற்று மாசைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் மதன் பி. லோக்கூர் தலைமையில் 2020-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. பின்னர், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காற்று தர மேலாண்மை ஆணையத்தை அமைத்தார். தில்லி மற்றும் தேசிய தலைநகர்ப் பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த இந்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

1980-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தில்லி மக்கள் இன்றும் தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை தொடர்கிறது.

காற்றின் நுண்துகள்கள் 2.5 மைக்ரோமீட்டருக்குக் குறைவாக இருப்பின் அவை பி.எம்.2.5 என அழைக்கப்படுகின்றன. இவை மனித முடியின் அகலத்தைவிட 25 மடங்கு சிறியவை. இவற்றைச் சுவாசிக்கும்போது, அவை நுரையீரலுக்குள் ஆழமாகச் சென்று ரத்தத்தில் கலக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் காற்றின் நுண்துகள்கள் பாதுகாப்பு அளவு ஒரு கன மீட்டர் காற்றிலுள்ள ஐந்து மைக்ரோகிராம்.

ஆனால், தில்லி நகரின் நுண்துகள்களின் சராசரி அளவு 110 முதல் 130 மைக்ரோ மீட்டர் ஆகும். மேலும், குளிர்காலங்களில் இது 500 மைக்ரோ மீட்டர் வரை உயர்கிறது. இவ்விரு காற்றிலும் அதிக அளவில் நுண்துகள்கள் இருக்கின்றன. இதனால், ஆண்டுதோறும் சுமார் 30,000 மக்கள் அகால மரணம் அடைகின்றனர்.

போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் சாலை தூசு, அண்டை மாநிலங்களின் பயிர்க் கழிவு எரிப்பு, பட்டாசு வெடித்தல், வீட்டுப் பயன்பாடுகள், யமுனை நதிக் கழிவு நீர் ஆகியவை தில்லி காற்று மாசின் முக்கியக் காரணங்களாகும்.

தில்லியில் 1.25 கோடி முதல் 1.30 கோடி வாகனங்கள் உள்ளன. இவை பி.எம்.2.5, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் கரியமில வாயு உற்பத்தியை அதிகரிக்கின்றன. பழைய வாகனங்களை மாற்றுதல், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் அவசியம். லண்டன், பெய்ஜிங் போன்ற நகரங்கள் இந்த நடவடிக்கைகள் வாயிலாக 20–முதல் 40 சதவீதம் வரை காற்று மாசைக் குறைத்தன.

தில்லி நகரில் உள்ள சுமார் 25,000 சிறிய தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான டன் பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10 நுண்துகள்களை வெளியேற்றுகின்றன. மின்தடுப்பு துகள் தடுப்பிகள், துணி வடிகட்டிகள் போன்ற நவீன அமைப்புகள் வாயிலாக 85 முதலம் 95 சதவீதம் வரை இவ்வகை நுண்துகள்களைக் குறைக்க முடியும்.

ஆண்டுக்கு 1.10 லட்சம் முதல் 1.45 லட்சம் டன் பி.எம்.10 நுண்துகள்கள் வெளியேறுகின்றன. தண்ணீர் தெளித்தல், பொருள்களை மூடுதல், இயந்திரத்தைப் பயன்படுத்தி சாலைகளைச் சுத்தம் செய்தல் போன்ற முறைகள் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரை சாலைகளில் தூசைக் குறைக்க முடியும்.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேச மாநிலங்களில் 4.4 முதல் 6.2 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இந்த வகையில் மாசடைந்த காற்றைத் தடுக்க, பயிர்க் கழிவுப் பகுதிகளில் கோதுமை தானியத்துக்கு உழுதல் இன்றி, நேரடி விதை விதைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துதல், பயிர்க் கழிவுகளை மக்க வைத்தல், எரிப்புக்கு கடுமையான விதிகளை அமல்படுத்துதல் மற்றும் போதிய நிதி ஊக்கங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி காற்றின் மாசைக் குறைக்கலாம்.

மேலும், பயிர்க் கழிவுகளை மின் உற்பத்தித் தொழிற்சாலை வாயிலாக மின் உற்பத்தி செய்து, கரியமில வாயு உற்பத்தியைத் தடுத்து, புவி வெப்பத்தைத் தடுக்கலாம். விவசாயக் கழிவுகளை எரிக்காது தொழிற்சாலைக்கு வழங்கியும், மேலும் காளான் வளர்ப்பு ஆகியவற்றால் விவசாயிகள் தங்களது வருமானத்தைப் பெருக்கலாம்.

ஆண்டுதோறும் 8,000 முதல் 10,000 டன் பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தடுக்க "பசுமைப்”பட்டாசுகள்' மட்டும் பயன்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.

சமையல் எரிபொருள்கள், புகைபிடித்தல், ஊதுபத்தி போன்றவை வீட்டு மாசை அதிகரிக்கின்றன. வீட்டுக்குள் ஏற்படும் இவ்வகைக் காற்று மாசைக் குறைக்க, புகையற்ற திரவ பெட்ரோலிய வாயு அல்லது மின்சாரம் பயன்படுத்துதல், போதிய காற்றோட்ட வசதி ஏற்படுத்துதல், புகைப்பதை முற்றிலும் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்.

தில்லி நகரில் தினமும் 302 கோடி லிட்டர் கழிவு நீர் உற்பத்தியாகிறது. இதனால், ஹைட்ரஜன் சல்ஃபைடு, அமோனியா, மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. அனைத்துக் கழிவு நீரையும் மேம்பட்ட முறையில் நன்னீராக்கி இவ்வகைக் காற்று மாசைத் தடுப்பதுடன், நகருக்குத் தொடர்ந்து நன்னீர் வழங்கலாம்.

வளர்ந்த மரம் ஆண்டுக்கு 20 முதல் 25 கிலோ கரியமில வாயுவை உறிஞ்சுகிறது. ஆனால், தில்லி போக்குவரத்து வாகனங்களால் உற்பத்தியாகும் கரியமில வாயு உற்பத்தியைத் தடுக்க 90 கோடி மரங்கள் தேவைப்படும். எனவே, மரக்கன்றுகளை நடுவது என்பது துணைவழி மட்டுமே; முழுத் தீர்வு அல்ல. இருப்பினும், எந்த அளவு நிலப்பரப்பு இருக்கிறதோ, அந்த அளவு வாய்ப்புள்ள மரக்கன்றுகளை நட்டு இவ்வாயுவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியம்.

உலக அளவில் பி.எம்.2.5 நுண்துகள்கள் கலந்த காற்றை சுவாசிப்பதால் 70 லட்சம் பேரும், இந்தியாவில் சுமார் 17 லட்சம் பேரும், தில்லி நகரில் சுமார் 20,000–முதல் 30,000 மக்களும் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். இந்தக் காற்று மாசால், ஆஸ்துமா, இதய நோய் போன்றவை 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தில்லி நகரில் 40 ஆண்டுகளாக காற்றின் மாசைத் தடுக்காமல் இருப்பது அரசின் தவறல்ல; உரிய அறிவியல் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

கலிஃபோர்னியா, பெய்ஜிங், சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற இடங்களில் கடுமையான விதிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் காற்று மாசு குறைக்கப்பட்டது. இதுபோல, தில்லியிலும் காற்று மாசைத் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.