இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைவு என்று சொல்ல இயலாது; சூடுபிடித்து விட்டது எனலாம். துணிதுவைக்கும் இயந்திரம், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம் என நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகிற இயந்திரங்கள் குறித்துச் சொல்லவில்லை.
பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத வழக்கமான செயல்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால், அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி, வாகன உற்பத்தி நிறுவனங்களில் உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது.
அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித் திறன், தரம், செலவினக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன. சுமார் 1,200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதைப் பார்க்கும் போது, உற்பத்தித் துறை தவிர வணிகம், சேவைத் துறைகளிலும் இயந்திரமயமாக்கல் அதிவேகமாகப் பரவி வருகிறது என உணரலாம். மேலும், நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதைவிட, கைப்பேசி செயலி வாயிலாக ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களே இதற்கு சாட்சி.
பணப் பரிவர்த்தனை செய்ய மக்கள் இன்று வங்கிகளுக்கு செல்வதற்குப் பதில் கைப்பேசி செயலி வாயிலாக அதைச் செய்கிறார்கள். குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் துப்பு துலக்க நாய்களுக்குப் பதில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள், கைப்பேசி ஆடியோக்கள், விடியோக்கள்தான் பயன்படுகின்றன. உணவங்களில் பரிமாற இனி தானியங்கி இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும். அப்போது உணவு பரிமாறும் பணியில் இருப்போருக்கு வேலை பறிபோகும். பெட்ரோல் நிலையங்களில் பணியாளர்கள் வேலை இழக்கலாம்.
துணிக் கடைகளில் கணினியுடன் இணைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையில் எப்படி இருப்போம் என்று பட்டனை அழுத்தினால் தெரிந்து விடும். அதை அணிந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாடுகளில் பிள்ளைகளுடன் செல்ல ரோபோ குரு உருவாக்கி உள்ளார்கள். இது மாணவர்களோடு பள்ளிக்குச் சென்று எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.
அங்கே ஒருபடி மேலே சென்று மாணவர்களுக்கு உடல்நலன் சரியில்லை; அன்று பள்ளி செல்ல முடியவில்லை எனும் சூழலில் அவர்களுக்குப் பதிலாக இந்த ரோபோ குரு பள்ளிக்குச் செல்லும் என்று சொல்கிறார்கள். வெகு விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ குரு வரலாம்.
பள்ளி மேற்படிப்பு, கல்லூரி மேற்படிப்பு, திறன் மேம்பாடு இவற்றுக்கு மட்டும் ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் அங்கே இயந்திரம் வந்து விடும் எனும் அபாயம் உருவாகி வருகிறது. கைக்கடிகாரம் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, எவ்வளவு நடந்து இருக்கிறோம், எத்தனை கலோரி செலவாகி போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். உணவு, பொருள்கள் வாங்குவதற்கு, வாடகை வாகனங்களை அழைக்க என் அனைத்துக்கும் கைப்பேசி செயலிகள் வந்து விட்டன.
அதாவது ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் திறன் இனி பயனற்றுப் போகும். புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டி வரும். நாம் செய்யும் தற்போதைய வேலைக்குப் பதில் புதிய வேலை செய்யும் நிலை உருவாகும். நாளுக்கு நாள் இயந்திரமயமாதல் அதிகரிக்கும்போது, அந்த புதிய தொழில்நுட்பத்துக்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் இந்தச் சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல், ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டால் அவர்களின் திறன் மேம்படுவதுடன் வேலையும் நிலைக்கும். எனவே, அன்றாடம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆயத்த ஆடைகளைப்போல, சுற்றுச்சுவர்கூடத் தயார் நிலையில் உள்ளதாக விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல் இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்து கொள்ளுதல்தான் இதற்கு முக்கிய தீர்வு. புதிய தொழில்நுட்பங்களின் வரவு இருந்தாலும், சிந்தித்து செயல்படுத்தும் பணிகளை எப்போதும் மனிதர்களே செய்வர். எனவே, சிந்திக்கும் புதிய உத்திதிகளைச் செயல்படுத்தும் நுட்பமான மனிதர்களாக நாமும் மாறுவோம்.
மாற்றத்தோடு வேகமாக நாமும் மாறுவோம். மாற்றம்தான் வளர்ச்சி என்பதைப் புரிந்து கொள்வோம். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஒவ்வொரு துறையிலும் நுழைந்துவிட்ட இந்த நேரத்தில், அதை அறிந்துகொள்ள முனைவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


