அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தேவை: லோக்பால்-லோக் ஆயுக்த விழிப்புணர்வு

வலுவான சட்டம், வலுவான அமைப்பு, போதுமான நிதி ஆகியவற்றுடன் மக்கள் நம்பிக்கையும், மக்கள் பங்கேற்பும் இணைந்தால்தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் உண்மையான வெற்றியைப் பெறும்.

News image

பிரதிப் படம்

Updated On :18 வினாடிகள் முன்பு

முனைவர் வீ. ராமராஜ்

ஸ்வீடனில் குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக 1809-ஆம் ஆண்டில் 'ஆம்புட்ஸ்மன்' என்ற சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட்டது. இதை முன்மாதிரியாகக் கொண்டு பின்னர் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் 'ஆம்புட்ஸ்மன்' அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆம்புட்ஸ்மன் அமைப்பின் அடிப்படையில், இந்தியாவில் ஊழல் குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்த ஆகிய அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய அரசின் முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966-ஆம் ஆண்டு பரிந்துரைத்தது.

1968-ஆம் ஆண்டில் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மாநிலங்களவையில் நிறைவேறாமல் காலாவதியானது. அதன்பிறகு, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளிலும் லோக்பால் மசோதாக்கள் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன.

பல்வேறு அரசியல் மற்றும் நாடாளுமன்றச் சூழ்நிலைகளால் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக மகாராஷ்டிர மாநிலம் 1971-ஆம் ஆண்டு லோக் ஆயுக்த சட்டத்தை இயற்றி, லோக் ஆயுக்த அமைப்பை நிறுவியது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், கேரளம், ஒடிஸô, ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸôம், பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களும் தங்களுக்கென சட்டங்களை இயற்றி லோக் ஆயுக்த அமைப்புகளை உருவாக்கின.

ஊழலுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் இந்தியாவும் 2005-ஆம் ஆண்டு கையொப்பமிட்டது. 2011-ஆம் ஆண்டு இந்தியா அந்த உடன்படிக்கையை அங்கீகரித்தது. சுமார் அரை நூற்றாண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டம், 2013 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

லோக் ஆயுக்த அமைப்புகளை ஏற்படுத்தாத மாநிலங்கள் அவற்றை உருவாக்குவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதற்கும் இந்தச் சட்டம் வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் லோக் ஆயுக்த சட்டங்கள் இயற்றப்பட்டன.

தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டம் 2018 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, 2019 -ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. தற்போது மத்தியில் லோக்பால் மற்றும் 28 மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் ஊழலுக்கு எதிரான விசாரணை மன்றங்களாகக் செயல்பட்டு வருகின்றன.

லோக்பாலின் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குரிய ஊதியமும் வசதிகளும், உறுப்பினர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குரிய ஊதியமும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதைப் போலவே, தமிழ்நாடு லோக் ஆயுக்த தலைவருக்கு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குரிய ஊதியமும் வசதிகளும் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குரிய ஊதியமும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. தேசிய அளவிலான லோக்பால் மற்றும் மாநிலங்களில் செயல்படும் லோக் ஆயுக்தக்கள் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காகவும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் மத்திய, மாநில அரசுகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான ஓராண்டு காலத்தில், லோக்பால் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஊழல் புகார்களின் எண்ணிக்கை லோக்பால் இணையதள தரவுகளின்படி 431 மட்டுமே. இதில் பிரதமர் மீது இரண்டு புகார்களும், மத்திய அமைச்சர்கள் மீது இரண்டு புகார்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆறு புகார்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன; இதே 2025-26 காலகட்டத்தில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டம், 2013 இயற்றப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட பல மாநில லோக் ஆயுக்தகளிலும் குறைந்த அளவிலான புகார்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

2013-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட பல மாநில லோக் ஆயுக்தக்களின் பணிகளும் அதிகாரங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன. அதேவேளையில், 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக அமைக்கப்பட்ட சில மாநில லோக் ஆயுக்தகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளும் அதிகாரங்களும், பிந்தைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தகளைக் காட்டிலும் வலுவானதாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே, லோக்பால் மற்றும் மாநில லோக் ஆயுக்தகளின் பணிகளையும் அதிகாரங்களையும் மேலும் வலுப்படுத்துவதன் மூலம், இந்த அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே எந்தவொரு அமைப்பையும் தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நம்பகமான அமைப்பாகக் கருதி மக்கள் அணுகுவார்கள்.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திலும் மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆணையங்களின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

உரிமை மீறல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்த புகார்களை விசாரிப்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் குறித்து தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்வதும் இந்த ஆணையங்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

மேலும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல், உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல், உரிமைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஊக்குவித்தல், பொதுமக்களிடையே உரிமைகள் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் இந்த ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய பணிகள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தகளின் சட்டங்களில் இதே அளவில் வெளிப்படையாகவும் விரிவாகவும் வரையறுக்கப்படவில்லை.

ஊழலுக்கு எதிராகச் செயல்படும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தகளுக்கு, ஊழல் குறித்த புகார்களை விசாரிப்பதுடன் மட்டுமல்லாமல், ஊழல் தொடர்பான நிகழ்வுகள் குறித்து தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரமும் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஊழலுக்கு எதிரான சட்டங்கள், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்களின் அதிகாரங்கள், பணிகள், புகார் அளிக்கும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்புகள் குறித்து கல்வியும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தகளில் சிறப்புப் பிரிவு அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு லோக்பால் சட்டத்திலும், மாநில அரசுகள் தங்களது லோக் ஆயுக்த சட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

உயர்நிலை ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த போன்ற அமைப்புகள் குறித்துப் பலரிடம் போதுமான அளவில் விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக, சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொது நலப் பாதுகாப்பு அமைப்பை மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். ஊழலை ஒழிப்பது என்பது, அரசு அல்லது விசாரணை அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகப் பொறுப்பு. அந்தப் பொறுப்பைத் திறம்பட நிறைவேற்ற, ஊழல் எதிர்ப்பு நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?, அவற்றின் அதிகார வரம்பு என்ன?, அவற்றை எவ்வாறு அணுகலாம்? என்பது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தகளுக்கான சட்டங்களை இயற்றுவதும், அந்த அமைப்புகளை உருவாக்குவதும், அவற்றுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதும் மட்டுமே ஊழலுக்கு எதிரான விசாரணைகளை வலுப்படுத்தி விடாது. இந்த அமைப்புகள் திறம்படச் செயல்படுவதற்கு வலுவான சட்டக் கட்டமைப்புடன் அவற்றின் அதிகாரங்கள், செயல்பாடுகள், புகார் அளிக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

வலுவான சட்டம், வலுவான அமைப்பு, போதுமான நிதி ஆகியவற்றுடன் மக்கள் நம்பிக்கையும், மக்கள் பங்கேற்பும் இணைந்தால்தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் உண்மையான வெற்றியைப் பெறும். இதற்கான விழிப்புணர்வை நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.