இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஊழல் புதை குழிகளும் தமிழக பட்ஜெட்டும்...

அரசின் மறைமுக ஒப்புதல் இல்லாமல், எந்த உயர்நிலை ஊழலும் நடைபெற முடியாது. கடந்த பல ஆண்டுகளாக இதற்கென்று ஒரு ஏழு கடல் தாண்டிய பாதாள உலகம் என்னும் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.

சித்திரிப்பு

Published On :45 வினாடிகள் முன்பு

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை திட்டத்தில் ஒரு புதிய வெளிச்சம் தெரிகிறது. இது ஒரு சிறு பகுதியாக முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது கரை சேர முடியாமல் தவிக்கும் கப்பல் ஒன்றுக்கு கிடைத்த ஒரு கலங்கரைவிளக்கமாக எனக்குத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கமானதுதான்.

நிதிப் பற்றாக்குறை எப்போதுமே ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்படுவது வழக்கமானதுதான். நிகழாண்டு நிதிநிலை அறிக்கையிலும் இந்த பற்றாக்குறை இருக்கிறது. இந்திய நிதி ஆணையம் மொத்த மாநில வளர்ச்சியில் இது மூன்று சதவீதத்தை தாண்டிவிடக் கூடாது என்ற விதியை வகுத்துள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சில மூன்று சதவீதத்தை தாண்டி விட்டன. தமிழகம் இதைத் தொட்டிருக்கிறது; ஆனால் தாண்டவில்லை.

பொதுவாக பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்குவார்கள்; வரிகளைக் கூடுதலாக்குவார்கள். இது சராசரி நடவடிக்கைகளில் ஒன்று. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை வேறொரு திட்டத்தை முன்வைக்கிறது என்பதுதான் இதில் புதுமை. தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த முயற்சியை முழுவதுமாக பின்பற்றினால் அது சமுதாயத்தில் வேறொரு விளைவை உருவாக்கும்.

பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதைத் தவிர்த்து, நிர்வாகச் செயல்பாட்டில் பல காலமாக அழுக்குப் பிடித்திருந்த தீமைகளையும் இது அகற்ற உதவும். தேவையற்ற குதர்க்க உரையாடல்களைத் தவிர்த்து விட்டு, இது குறித்து ஒரு பொது உரையாடலை தொடங்குவது இன்றைய காலத்தின் தேவை.

தமிழகத்தில் நடைபெறும் ஊழலுக்கும் வரவு-செலவு திட்டங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை யாரால் மறுக்க முடியும்? வரவு-திட்டங்களிலேயே ஊழலுக்கான முதல் பாதை திறந்து கொள்ளும் தந்திரத்தை எளிய மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

அரசின் மறைமுக ஒப்புதல் இல்லாமல், எந்த உயர்நிலை ஊழலும் நடைபெற முடியாது. கடந்த பல ஆண்டுகளாக இதற்கென்று ஒரு ஏழு கடல் தாண்டிய பாதாள உலகம் என்னும் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். இது ஒரு தனி அரசாகி தன் ஆட்சியை நடத்திக் கொண்டேயிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், வாய், நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, கைகள் வேறொரு கள்ளத்தனத்துக்குத் தயாராகிவிடும்.

இந்தச் செயல்பாடு, கடலில் கண்ணுக்குத் தெரியாமல் மூழ்கியிருக்கும் பனிமலை போன்றது. இதில் மறைந்திருக்கும் பல லட்சம் கோடி யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது. இதை இந்த நிதிநிலை அறிக்கை கண்டறிந்துள்ளது என்பது எதிர்பாராத ஒன்றல்ல. ஊழல் செய்பவர்களுக்கு அச்சம் தரத்தக்க, தொலைநோக்குப் பார்வை கொண்ட நான்கு முக்கியமான அதிரடிச் செயல்பாடுகளை இந்த நிதிநிலை அறிக்கை முன்வைத்துள்ளது.

மணல் கொள்ளை, கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கும் கொள்ளை, கடற்கரை ஓரங்களில் தாது மணல் கொள்ளை ஆகியவை இதில் அடங்கும். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களும் தீவிரமாக நடை பெற்றன. எந்தச் சட்டங்களாலும் நீதிமன்றத் தீர்ப்புகளாலும் இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது அரசு இயந்திரத்தின் மறைமுக ஒப்புதலுடன் கொடி போட்டு பயணம் செய்துகொண்டே இருந்தது.

இவை சார்ந்த பல நிறுவனங்களும் நடத்திய முறைகேடுகள் அளவிட்டுக் கூற இயலாதவை. போலி ரசீதுகள் தயாரித்தல், பாட்டில் தயாரிப்பதில் அந்த நிறுவனங்களின் எண்ணிக்கை ஏமாற்று, மூலப்பொருள் விநியோகிப்பதில் உள்ள திருட்டுத்தனங்கள் என்று தோண்டத் தோண்ட ஊழல் புதையலாக வந்து கொண்டேயிருக்கிறது. ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி ஏய்ப்பு ஆகியவை கோடிக்கணக்கில் இதில் மறைந்திருக்கிறது.

தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தனியார் மதுபான உற்பத்தி ஆலைகளில் சோதனைகள் நடத்திப் பார்த்தன. இதனால், எந்தப் பலனும் கடந்த காலத்தில் கிடைக்கவில்லை. புலனாய்வு அமைப்புகளின், இது குறித்த பல்வேறு அறிக்கைகள், ஆதாரங்களாகக் கிடைத்துள்ளன.

சாதாரண பொதுமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பில் சொத்து வாங்கும்போது, சட்டபூர்வமான கட்டணங்களைவிடக் கூடுதலாகப் பெருந்தொகையை லஞ்சமாகக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதைத் தவிர, போலி ஆவணப் பதிவுகள், உரிமையாளருக்குத் தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்து சொத்துகளை அபகரித்தல், ஒரே சொத்தை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களுக்குப் பதிவு செய்து கொடுப்பது போன்ற கற்பனைக்கு எட்டாத பல்வேறு பித்தலாட்டங்கள் இதில் நடைபெற்றன. மேலும், அரசு மற்றும் பொது நில ஆக்கிரமிப்புக்கு பதிவுத் துறை ஆதரவாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவின் பரிந்துரை முக்கியமானது. அரசின் தேவையில்லாத விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் இதன் நோக்கம். இதன் மூலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்து எதிர்காலத்தில் புதிய செயல்பாட்டை உருவாக்க முடியும்.

மின்சாரத் துறையில் மட்டும் நிலக்கரி ஏற்றுமதி - இறக்குமதியில் ஏற்பட்ட மோசடிகள், மோசடி செய்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து இழப்பீடு பெறத் தவறியது, நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் ரத்து செய்யத் தவறியது என்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இதில் விரயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை இந்த நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தப் போகிறது. இதைப் போலவே, பழைய பேருந்துகளை சரியான நேரத்தில் மாற்றாமல் இயக்கியதால் ஏற்பட்ட அதிக பராமரிப்புச் செலவும், எரிபொருள் விரயமும் மிகவும் கூடுதலானவை.

கட்டுமானப் பணிகள், காலதாமதத்துடன் திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக இருக்கின்றன. இந்த இடைக்காலத்தில் செலவுகள் அதிகரித்து விடுகின்றன. இதில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் விரயமாகிறது. நெடுஞ்சாலைத் துறை பாலங்கள், சாலைப் பணிகள், ரயில்வே மேம்பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகளில் இந்த காலதாமத்தை நம்மால் பார்க்க முடியும். உயிரித் தொழில்நுட்ப பூங்கா போன்ற திட்டங்களில்கூட பொருத்தமானவர்களை நியமிக்க முடியாமலும், தேவையான உபகரணங்கள் இல்லாமலும் அவை நின்ற இடத்திலேயே நிலை கொண்டுள்ளன.

தேயிலை பெருந்தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள் தொழிலாளர்களையும் எளிய மக்களையும் சார்ந்திருக்கும் தொழில்கள். அரசு நிறுவனமான "டான் டீ' போன்றவற்றில் தரம் குறைந்த பச்சைத் தேயிலையை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ததால் ஏற்பட்ட நிதி இழப்பு பேரிழப்பு.

இதைப் போலவே, ஒதுக்கப்பட்ட நிதி பலதுறைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. திட்டமிடல் இன்மையால் இவை திருப்பி அனுப்பப்படுகின்றன; இதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்த நான்கு இடங்களிலும் நடை பெறும் ஊழல் மூலம் கரைபுரண்டு மாயமாய் மறைந்து போகும் மக்கள் வரிப் பணம் மீட்டெடுக்கப்பட்டால், இதில் ஓராண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கைகூட போட முடியும்.

2036-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருமானத்தை 1.5 டிரில்லியனாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்துக்கான வருவாயை இதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நம்மால் உறுதிபடக் கூற முடியும்.

ரஷிய புரட்சி 1917-ஆம் ஆண்டிலும், சீனப் புரட்சி 1949-ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

கடந்த பல நுற்றாண்டுகளாக ஏழை மக்களை அடிமைப்படுத்தி சுரண்டி சேர்க்கப்பட்ட பணத்தையும், அவர்கள் அபகரித்து வைத்திருந்த சுகபோகங்களையும் பறிமுதல் செய்தது. மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதைப் பகிர்ந்து அளித்தார்கள்; இதைத்தான் இவர்கள் புரட்சி என்றார்கள்.

உழைக்காமலும், எந்தத் தொழிலும் செய்யாமலும், அரசியல் அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி கட்சிகளின் வழியாக சேர்த்த சொத்துகள் குறித்த கணக்கெடுப்பு இன்று தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிறது. இதிலுள்ள சட்டக் குறுக்கீடுகளை நாம் அறிவோம். ஆனாலும், அந்தத் தடைகளைக் கடந்து அதைச் சாதிக்கும்போது, யார் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார்கள் என்ற விவரமாவது தமிழக மக்களுக்கு தெரிய வரும். சுரண்டலற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்ட சமநிலைச் சமூகம் மலர்வதற்கான திசைப் போக்கை அது திறந்து வைக்கும்.

இது போன்ற இழிசெயல்களை செய்யக் கூடாது என்ற பாடத்தை எதிர்காலச் சமூகத்துக்கு எடுத்துரைக்கும் செயல் திட்டமாக அது வளர்ச்சி பெறும்.

எது எப்படி இருந்த போதிலும், பேரழகு கொண்ட இயற்கையைச் சிதைத்து, அதன் வளங்கள் அனைத்தையும் நடத்தும் கொள்ளைக் கொடுமையையும், மக்களிடமிருந்து பெற்ற வரியில் தனிச் சுரங்கம் அமைத்து அதைத் திருடுவதையும் தடுக்கும் தீவிர முயற்சியை ஒரு நிதிநிலை அறிக்கை தொடங்கியிருக்கிறது என்றால், அதை வாழ்த்தி வரவேற்பது நமது கடமை.

மாநில முதன்மைச் செய்தி தொடர்பாளர், தமிழக வெற்றிக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.