ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...

மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்?
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்கோப்புப் படம்
Updated on
3 min read

உலகம் நாகரிகம் பெற்ற காலத்திலிருந்தே கல்வியும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மதிக்கப்பட்டனர். ஆசிரியப் பணி அறப்பணியாக மதிக்கப்பட்டது. புராண காலங்கள் என்றாலும், அறிவியல் காலங்கள் என்றாலும் சரி, ஆசிரியர் என்னும் குருமார்கள் அனைவராலும் வணங்கப்பட்டனர். குருமார்களின் திண்ணைப் பள்ளிகளிலேயே படிப்பிக்கப்பட்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே குருவிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்கள்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று புறநானூறு (183) பாடுகிறது. கற்பிக்கும் ஆசிரியருக்கு துன்பம் வரும்போது உதவி செய்தும், அவருக்குத் தேவையறிந்து பொருள் கொடுத்தும், வெறுப்பின்றி பணிவுடன் கற்றல் வேண்டும்.

பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே கல்வியும், ஆசிரியப் பணியும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வித் துறை தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டனர். ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன.

இப்போது, மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோல் தேர்வை நடத்துவது கிடையாது. 2022-ஆம் ஆண்டு நடத்தவேண்டிய தேர்வு கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

இப்போது பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ’டெட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சிச் சான்றிதழ்களை பிப்ரவரி 2 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.

முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் ’டெட்' தேர்வு நடத்தப்படுகிறது.

மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60% (90 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் 5% வரைக் குறைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ’டெட்' தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜனவரி 30 அன்று வெளியிடப்பட்டது. அதனை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்கள் தேர்ச்சிச் சான்றிதழ்களை பிப்ரவரி 2 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது.

'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய தரவுகளும் வெளியாகியுள்ளன. முதல் தாள் தேர்வை 92,417 பேர் எழுதினர். இதில் 45,469 பேர் (49.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,900 பட்டதாரி கள் எழுதியுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 4,604 பேர் (31.5%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய டெட் தேர்வுகளில் 10-15% மட்டுமே தேர்ச்சி விகிதம் இருந்தது. இந்த முறை வினாத்தாள் வழக்கத்தைவிட மிகவும் எளிதாக இருந்ததுடன், தேர்ச்சி மதிப்பெண்களும் குறைக்கப்பட்டதால் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

மேலும், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் ’டெட்' தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனால், இப்போது பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த நவம்பரில் டெட் தேர்வு எழுதினர். அவர்களில் பலர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

ஏராளமான ஆசிரியர்கள் ஓரிரு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதே சமயம் வினாத் தாளில் தவறாக இடம்பெற்ற சில கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை ஆணையின் படி, அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கொள்கைளில் மாற்றம் செய்வதற்கு ஆணைகளைப் பிறப்பித்தது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பணி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விடுப்பு மனு ஆணை மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எழுத்துத் தேர்வின் மூலமாக தெரிவு செய்யப்படுகிறார்கள். மேற்கூறியவையனைத்தும் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தக்கூடிய ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்பட்டு ஆசிரியர் நியமனங்களைச் செய்து வருகிறது. அரசால் அறிவிக்கப்படாத வரை நியமனத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் வரை செல்லுபடியாகும் ஒன்றாகவே கருதப்படும் என்றும் வரையறுக்கப்பட்டது.

ஆசிரியர் பணிக்காகவே படித்துத் தேர்ச்சி பெற்றவர்களை தகுதித் தேர்வு எழுத வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் கட்டாயப்படுத்துகின்றன. அத்துடன் ஆசிரியராக நியமனம் பெற்று பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களையும் தகுதித் தேர்வு (டெட்) எழுதியே ஆக வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறுவதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த ரூ. 2500 ஊதிய உயர்வை நிராகரித்து, நிரந்தரப் பணிகோரி போராட்டம் நடத்தினர்.

சம வேலைக்குச் சம ஊதியம் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 37 நாள்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட் டைக் களைந்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருடன் 2 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதே சமயம் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது.

எச்சரிக்கையை மதிக்காமல் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் ஜனவரி மாத ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்தது. தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து, போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர் நலன் கருதி பள்ளிக்குத் தொடர்ந்து சென்று கற்பித்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கற்றல் இடைவெளியை நீக்கி, கற்பித்தல் பணியில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்கள் குறைபாடுகளைக் கோரிக்கைகளாகத் தெரிவித்து அமைதி வழியில் போராட உரிமைப் படைத்தவர்கள். ஆனால் அவர்களை அடக்க முயல்வது நியாயம் இல்லை.

ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு கூறுகிறது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்? இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com