வரதட்சிணை - சுய கெளரவத்துக்கு இழுக்கு

அண்மைக் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரதட்சிணை தொடர்பான குற்றங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

அண்மைக் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரதட்சிணை தொடர்பான குற்றங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவலின்படி 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வரதட்சிணைக் கேட்டு பெண்களைத் துன்புறுத்தியது தொடர்பாக சுமார் 15,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 27,154 நபர்களில் 4,838 பேர் பெண்கள் ஆவர். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வரதட்சிணைக் குற்றங்களில் பெண்களுக்கும் பங்கிருப்பது வேதனையளிக்கிறது.

வரதட்சிணைக் கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுவது தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் வட இந்திய மாநிலங்களில் அதிகம். இதை உறுதிப்படுத்தும் வகையில், 2023-ஆம் ஆண்டு நாடெங்கிலும் நிகழ்ந்த வரதட்சிணைக் கொடுமை தொடர்பான 6,100 மரணங்களில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 2,122 மரணங்களும், பிகாரில் 1,143 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

நம் நாட்டில் மணவிலக்கு கோரி பதிவாகும் வழக்குகளில், பெருவாரியான வழக்குகள் வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்துவது தொடர்பானவையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வரதட்சிணைக் கொடுமையால் 20 வயது இளம் பெண் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக வரதட்சிணை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வரதட்சிணைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவப் பருவத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

கூடுதலாக, மாநிலங்களில் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதோடு, வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்படுவோர் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நியாயம் பெறும் வகையில் அந்த அதிகாரிகள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வரதட்சிணை தொடர்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதோடு அவை தொடர்பான விவரங்கள் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண பந்தத்தில் நுழையும் மணமக்கள் பொருளாதார ரீதியாக சிரமம் அடையக் கூடாது என்பதற்காக மணமகன், மணமகள் வீட்டார் மணமக்களுக்கு மனமுவந்து தந்த பொருளுதவியே நாளடைவில் மணமகள் வீட்டார் மணமகனுக்கு கண்டிப்பாகத் தரவேண்டிய வரதட்சிணையாக பரிணாமம் பெற்றது.

தங்கள் வீட்டுப் பெண் வசதியான சூழலில் வாழ வேண்டும் என விரும்பும் பெற்றோர், தங்களின் பொருளாதார நிலைக்கும் மேலான குடும்பத்தில் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பின்னர், மாப்பிள்ளை வீட்டாரின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சூழலும் வரதட்சிணைக் கொடுமைகளுக்குக் காரணமாக அமைகிறது.

அண்மையில், தமது மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருந்த நண்பரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது, தமது பொருளாதார நிலைக்கும் மேலாக கடன் வாங்கி, தன் மகளுக்கு சீர்செய்வததோடு வரதட்சிணையும் தந்திருப்பதாக கூறினார். மேலும், அவ்வாறு வரதட்சிணை தந்தால்தான் தனது மகள், மணமகன் வீட்டில் கெளரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழமுடியும் என தன் செயலுக்கு நண்பர் நியாயமும் கற்பித்தார். பெற்றோரின் இதுபோன்ற மனநிலை மாற வேண்டும்.

புகுந்த வீட்டாரின் நற்பண்புகள் மட்டுமே ஒரு பெண்ணுக்கு நிரந்தர மகிழ்ச்சியை தருமேயன்றி, பெண் வீட்டார் அளிக்கும் அதிகபட்ச வரதட்சிணையால் அந்தப் பெண் புகுந்த வீட்டில் நிரந்தர மகிழ்ச்சியைப் பெறுவார் என்பது ஏற்க இயலாதது.

மணமகள் வீட்டார் அளிக்கும் வரதட்சிணை மூலமாக அனுபவிக்கும் சுகபோக வாழ்வு தனது சுய கௌரவத்துக்கு இழுக்கு என்ற தன்மான உணர்வு திருமண பந்தத்தில் இணையும் ஒவ்வொரு மணமகனுக்கும் இருந்தால் மட்டுமே சுமுக வாழ்வியலுக்கு எதிரான வரதட்சிணை தொடர்பான குற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும்.

வரதட்சிணை தடுப்புச் சட்டம் 1961, பிரிவு 3-இன் படி வரதட்சிணை கேட்பதும், கொடுப்பதும் குற்றம் என்பதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, ரூ.15,000 அல்லதுவரதட்சிணை தொகை இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், நடைமுறையில் பெரும்பாலான திருமண பந்தங்கள் வரதட்சிணை தருவதன் அடிப்படையிலேயே அமைகின்றன.

பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் இக் காலச் சூழலில், அவர்களின் மாதாந்திர வருமானத்தைக் கருத்தில் கொண்டு, மணமகன் வீட்டார்

வரதட்சிணை கோருவதிலிருந்து சற்றே விலகிச் செல்வதைக் காண முடிகிறது. இதனடிப்படையில், வரதட்சிணை எனும் சமூகச் சீர்கேடு தவிர்க்கப்பட, பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதை மேலும் ஊக்கப்படுத்துவது மிக அவசியம் எனத் தோன்றுகிறது.

சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே வரதட்சிணை இல்லாத சமூகம் முழுமையாக சாத்தியமாகாது; திருமண பந்தத்தில் இணையும் குடும்பங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மறந்து, அன்பையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டு இணைந்தால் மட்டுமே வரதட்சிணை இல்லா சமூகம் சாத்தியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com