திருடுவதற்கும் ஊழல் செய்வதற்கும் ஒரு சிறு வேறுபாடுதான் உண்டு. திருடுவதற்கு அதிகாரம் தேவையில்லை; ஆனால், ஊழல் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். இதைப் போன்றே மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
சமூகத்தில் எந்த ஆதரவுமில்லாத திருடர்கள் பிடிபட்டால், அந்த இடத்திலேயே தண்டனையை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். ஊழல் செய்பவர்களுக்கு, இப்படி நேரடியாக மக்கள் தரும் தண்டனை உண்டா? பொதுச் சமூகம், திருடர்களைப் பார்ப்பதுபோல ஊழல் செய்பவர்களை, இழிவுபட பார்ப்பதில்லை. இது ஏன்?
ஊழல் செய்வதைத் திருட்டுக் குற்றமாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஊழல்வாதிகளின் சொத்துகள்தான் நம்மைச் சுற்றி குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், இது குறித்து நாம் பேசுவதில்லை.
ஊழலை எதிர்த்து எத்தனையோ கொந்தளிப்புகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. மொழிப்போர் தியாகத்துக்கு இணையாக ஊழல் எதிர்ப்பில் நம் மண்ணில் உயிர்த் தியாகம் செய்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆற்று மணலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் செயல்பாட்டாளர்களைத் தவிர எத்தனையோ நேர்மையான அதிகாரிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கடந்தகால செயல்பாடுகளில் எல்லாம் மக்கள் பார்வையாளர்கள்தான். இவர்களால் மறைந்தும் ஒளிந்தும் நின்றுதான் பாராட்ட முடிந்ததே தவிர, வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் முன்வந்து பாராட்ட முடிந்ததில்லை. இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவர்கள் மனதில் கட்டி எழுப்பப்பட்டுள்ள ஒருவித அச்சம். மாற்றங்களுக்கான சிந்தனைச் செயல்பாடுகள் அனைத்தையும் முளையிலேயே அழித்துவிடக் கூடியது இந்த அச்சம்.
இதிலுள்ள சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றத்துக்கான நம்பிக்கை தோன்றும் காலங்களில் எல்லாம், ஆதிக்க உலகத்தின் சூழ்ச்சிக்காரர்களுக்கு மூக்கு வியர்த்து விடுகிறது. எங்கிருந்தோ பிரச்னை உள்ள பகுதிக்குப் பறந்து விடுகிறார்கள். பொது சமூகம் மிகவும் மோசமாக அச்சுறுத்தப்படுகிறது.
இந்தத் தருணங்களில் எல்லாம், அதிகாரத்தின் இரும்புக் கரங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன. அதில் சிக்கி சிதைந்து போனவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக நமக்குச் சொல்லப்படுகின்றன.
தங்கள் தேர்ந்த சூழ்ச்சியால் இதன் இறுதி நம்பிக்கையையும் படுகொலை செய்து விடுகிறார்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் அவர்கள் குறித்த சுயநலமும், குடும்ப சுயநலமும் இருப்பதை யாரால்தான் தவிர்க்க முடியும். சமூகப் பயம் குடும்ப பயத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டி அமைக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, சமூக பயம்தான் மக்களாட்சியின் முதல் எதிரி.
ஊழல் பிரச்னை, ஒவ்வொரு தனி மனிதரின் வளர்ச்சியுடனும் நாட்டின் முன்னேற்றத்துடனும் அடிப்படையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு தனிமனிதருக்கு சம்பந்தம் இல்லாததாக மாற்ற முடியும்? இவ்வாறு பயமுறுத்தி மாற்றியதில் சமூக பயத்துக்கு அடிப்படையான பங்கு இருக்கிறது. இந்த பயம், யாராலும் அகற்ற முடியாததாக கடந்த காலத்தில் இருந்தது.
இதன் சமூக பயத்தைப் போக்க இன்றைய முதல்வர் எடுத்துவரும் முயற்சி, இன்றைய காலத்தில் யாராலும் செய்ய முடியாத அரிய செயலாகவே எனக்குத் தோன்றுகிறது. சமூக பயம் அனைத்தையும், அகற்ற அவர் பயன்படுத்தும் மக்கள் உரையாடல் வசீகரம் மிக்கது.
பொது மேடையிலிருந்து ஊழலுக்கு எதிரான சமூக உரையாடல் ஒன்றைத் தொடங்குகிறார். இது மக்களுடன் அவர், நேரடியாக நடத்தும் உரையாடல். இதன் மூலம், சமூக மாற்றத்துக்காக மக்களின் மனக்கதவுகளைத் திறக்க வைத்துவிடுகிறார். யார் லஞ்சம் கேட்டாலும் தரமுடியாது என்று துணிச்சலுடன் சொல்லுங்கள். தமிழக முதல்வர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று சொல்லுங்கள் என்கிறார்.
இவரது இந்த குரல், பலம் பொருந்திய "சம்மட்டி' போன்றது. உடைக்க முடியாத மர்ம இரும்புப் பூட்டுகளை உடைத்து, மர்மக் கோட்டைகளின் ஊழல் புராணங்களின் முகத்திரையை கிழிக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா கூறியதை இங்கு குறிப்பிட வேண்டும். அதிகாரம் சார்ந்த உயர்நிலை ஊழல்தான் நாடு முழுவதும் நடைபெறும் சிறு சிறு ஊழலுக்கான ஆணி வேர் என்றார். உயர் அதிகாரம் சார்ந்த ஊழல் ஒரு நச்சு மரத்தின் வேர் போன்றது. ஆணிவேருடன் வெட்டி வீழ்த்தப்பட்டால், மற்ற அனைத்தும் காய்ந்து கருகி வாடி உலர்ந்து விடும் என்பது அவரது கருத்து.
இன்றைய தமிழக அரசு உயர்நிலை ஊழலை அகற்றுவதற்கான தீவிர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன் அதிர்வை அரசு இயந்திரத்தின் எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.
ஊழல் என்பது தனி மனிதரின் பிரச்னையா?, அமைப்புமுறை பிரச்னையா? என்பதை இங்கு யோசித்துப் பார்க்க வேண்டும். மன்னன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள் வழியும் என்பதே, தமிழரின் மரபு மொழி. அமைப்புமுறை எப்படியோ, அப்படியே அதற்குள்ளிருப்பவர்களும் செயல்பட வேண்டும். இன்றைய தமிழ்நாடு அரசு ஊழலும் லஞ்சமும் இல்லாத அமைப்பு முறைக்கு தனது பெரும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
ஊழல் பெருச்சாளிகள் என்ன செய்வது என்ற திண்டாட்டத்தில் இருக்கின்றன. திசை எது என்று தெரியாமல் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்றுக்கு புதிதாக கலங்கரை விளக்கம் ஒன்று தென்பட்டதைப் போல மக்களுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்கம் ஒன்று கிடைத்து விட்டது.
ஊழல் ஒழிப்பில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். மக்களாட்சியில், அரசு செயல்பாடுகளுக்கு இணையாக மக்கள் கண்காணிப்பின் செயல்பாடுகள் அவசியம் தேவையாகி விடுகிறது. மக்களின் பங்கேற்பு இல்லாமல் மக்களாட்சியில் எதையுமே சாதிக்க முடியாது.
சமூக பயம் நீங்கிய மக்கள் முதலில் விழிப்புணர்வு பெறுகிறார்கள். இதிலிருந்து புதிய சமுதாயத்துக்கான கட்டமைப்பை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், இவை தன் போக்கில் நிகழ்ந்து விடுவதில்லை. இதை ஒருங்கிணைக்கும் தலையாய முயற்சி ஒன்று தேவைப்படுகிறது.
இன்றைய அரசு உருவாக்கும் ஊழல் எதிர்ப்பு, போதை ஒழிப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தும் மக்கள் விழிப்புணர்வு மன்றம் ஒன்று தேவைப்படுகிறது.
பங்கெடுப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மிகச் சிறந்த கருவியாக இவை திகழ்கின்றன. ஊழலை ஒழிக்க விரும்பும் அறிவார்ந்த இளைஞர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.
ஊழல் என்பது பலமுகங்களைக் கொண்ட ஒருதீய சக்தி. இதை ஒழிப்பதற்கு கடந்த காலத்தில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. லோக்பால், லோக் ஆயுக்த போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. இதைத் தவிர, தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற ஒரு வலிமை வாய்ந்த சட்டமும் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டங்களுக்கு உயிர் இல்லாமல் செய்து விட்டார்கள். ஊழல் அதிகாரத்தின் இரும்புக் கோட்டையை இந்தச் சட்டங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இன்றைய சூழலில் இளைஞர்களின் ஒருங்கிணைப்பை இதற்குப் பயன்படுத்த வேண்டும்.
அரசு கண்காணிப்புக்கு 100 கண்கள் உண்டென்றால், மக்கள் கண்காணிப்பில் பல கோடி கண்கள் செயல்பாட்டில் இறங்கி விடுகின்றன. இந்தக் கண்காணிப்பில் ஒரு சமூகத்தை, தூய சமூகமாக மாற்றிவிட முடியும். இதற்குரிய தகுந்த ஏற்பாடுகள் மட்டும் தேவை. மக்களின் கண்காணிப்பு பயிற்சி களம் வேண்டும். பலகோடி கண்களின் கண்காணிப்பில் இந்த ஊழல் எங்கிருந்தாலும் கண்டறிந்து விட முடியும். இதன் மூலம்தான் ஊழல் அதிகார கோட்டைகளை முழுமையாகத் தகர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
அரசியல் என்பது தங்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்னும் அருவருப்பான எதிர்மறை இன்றைய இளைஞர்களிடம் தலைதூக்கி விட்டது. மேலே இருப்பவர்களைப் பார்த்து, உழைக்காமல் பணத்தைக் குவித்துக் கொள்ளும் குணம் அண்மைக்காலத்தில் வந்து விட்டது. இது அரசியல் குறித்த தவறான புரிதல் கொண்ட இழிநிலைக் காலம். அரசியல் என்பது சுயநலம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அது பொது நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். காரணம், அரசியல் என்பது மக்களுக்கானது என்ற புரிதல் இல்லை.
தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இன்றைய ஆட்சி மாற்றத்தை ஒரு புதிய முறையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை "ரீல்ஸ்'களால் நிகழ்ந்தவை என்று கொச்சைப்படுத்தக் கூடாது.
இணைய உலகில் தலைசிறந்து நிற்கும் தமிழக இளைய தலைமுறையின் கூட்டு அறிவால் நிகழ்ந்தவை. தனது வாக்குரிமையைச் செலுத்துவதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து வாக்களித்த இளைய தலைமுறையினர் பலரை நானறிவேன்.
காலம் ஒரு நதியைப் போன்றது; ஒருமுறை நம்மைக் கடந்து செல்லும் நதி நீர், மீண்டும் நம்மிடம் வருதில்லை. இன்றைய காலம் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை நடத்த நம்மை வற்புறுத்துகிறது. இதை நாம் நிராகரித்தால் பிற்காலத்தில் வரலாற்றுக்கு துரோகம் செய்தவர்களாக அறியப்படுவோம்.
கட்டுரையாளர்:
பொதுவுடைமை சிந்தனையாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









