சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

புத்தர்பிரானின் வாழ்வும் வாக்கும் பலகோடி மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

News image

புத்தர் சிலை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:41 am

-குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சித்ரா பெளர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன். சகோதர -சகோதரிகள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா (மே 1) நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பாரதம் உலகுக்கு வழங்கியுள்ள கொடைகளில் தலையாயது பெளத்தம். புத்தர்பிரானின் வாழ்வும் வாக்கும் பலகோடி மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

தன்னை அறிதலை உலகுக்குக் கற்றுக் கொடுத்தது பாரதம். புத்தர் என்ற சொல்லுக்கு விழிப்புணர்வு பெற்றவர் என்பதே பொருள். மக்கள் தன்னையறிய வேண்டும் என உழைத்த மகானின் அவதார தினமும் ஞானம் அடைந்த தினமும் ஒரே நாளில் அமைந்திருக்கிறது.

இளவரசனாகப் பிறந்த சித்தார்த்தர் அரச ஆடம்பரத்தில் வளர்ந்தவர்.

29 -ஆவது வயதில் அரண்மனை, மனைவி, மகன், செல்வம் அனைத்தையும் துறந்து ஆன்மிக அறிவொளிக்கான தேடலோடு அலைந்து திரிந்தார். ஆறு ஆண்டுகாலம் வாழ்வின் உண்மையைத் தேடியவருக்கு புத்த கயாவில் போதி மரத்தடியில் உயர்ந்த ஞானம் உள்ளத்தில் மலர்ந்தது. புத்தர் என்ற மகானாக உயர்ந்தார்.

நான்கு உன்னத உண்மைகளையும், அதை அடைவதற்கான ஐந்து ஒழுக்கங்களையும் சித்தார்த்தர் உணர்ந்த அந்தத் தருணமே ஒரு புதிய சித்தாந்தத்தின் தொடக்கமாகவும் உலக வரலாற்றில் பாரதத்தின் பெருமையாகவும் மலர்ந்தது.

வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத்தில் தனது முதல் போதனையை ஐந்து துறவிகளுக்கு வழங்கினார். "தர்மத்தின்

சக்கரத்தை இயக்குதல்' என்று புகழப்படும் இந்த தர்ம போதனையே பெளத்தத்தின் கோட்பாடாக விரிந்தது. இந்தச் சொற்பொழிவு பெளத்த சமயத்தின் தொடக்கமாக அமைந்தது.

இரண்டாண்டு காலம் மக்களுக்கு அறத்தின் பாதையை எடுத்துச் சொல்லிவந்த புத்தரால் ஈர்க்கப்பட்டு மகத மன்னர் பிம்பிசாரர் ராஜகிரிகாவில் வேணு வனா (மூங்கில் தோப்பு) மடாலயத்தை நன்கொடையாக வழங்கினார். செல்வந்தர் அனதபிண்டிகா, ஜெதவன தோப்பு நிலம் முழுவதையும் தங்க நாணயங்களால் நிறைத்து மடாலயம் எழுப்புவதற்குக் கொடை அளித்தார். அறத்தைப் பின்பற்றுவதில் பாரதம் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இத்தகைய சம்பவங்கள்.

புத்தபிரானின் நான்கு உண்மைகளை மடாலயங்கள் போதித்தன. ஆசையே துன்பத்துக்குக் காரணம்; ஆசையை விலக்குவதால் துன்பத்திலிருந்து விடுபடலாம்; துன்பத்தை அகற்றுவதற்கான எட்டு நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் துன்பமற்று வாழலாம். கடந்த காலத்தை எண்ணி வருந்தாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள்.

வாய்மை சக்தி வாய்ந்தது; மனமே எல்லா செயல்களுக்கும் காரணம்; அதனால் நேர்மறையாக சிந்திக்கப் பழகுங்கள்; கடினமான காலங்களை நினைத்துப் பயந்து பின்வாங்காதீர்கள். இந்த உலகில் நமது பயணம் தனியானது; அந்தப் பயணத்தை ஆன்மிகப் பாதையில் செலுத்துங்கள். வார்த்தைகள் காயப்படுத்தும் அதனால் இதமாகப் பேசுங்கள். அன்பும் அகிம்சையும் அவசியமானவை. எப்போதும் கற்றுக் கொண்டிருங்கள், கற்றலை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்குப் பெருவழி காட்டினார்.

தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும்காப்பியங்களில் மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் புத்தபிரானின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச் சொல்லும் படைப்புகள். வீரசோழியம் இலக்கண நூல் தமிழ்நாட்டின் சரித்திர ஆராய்ச்சிக்கும் உதவுகிறது. பல இலக்கியங்கள் இன்றைக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

"மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்

கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்'

(ஆதிரை பிச்சையிட்ட காதை: 84 -90) என்று மணிமேகலை காப்பியம் பெளத்தத்தின் சாரத்தை விளக்குகிறது.

கொல்லாமை, கள்ளாமை (திருடாமை), பிறன்மனை விரும்பாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை என ஐந்து சீலங்களைக் கடமை என்றார். சமயம் என்ற சிந்தனையைத் தாண்டி மனம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. எண்ணமும் செயல்களும் நேர்மறையாக இருக்கும் வரை நேர்மறையான வாழ்வும் சமூகமும் சாத்தியமாகும் என்று வாழ்வியல் அறத்தையே புத்தர்பிரான் கற்றுக் கொடுத்திருக்கிறார். குழம்பிய மனநிலையில் இருந்த

மக்களுக்கு தெளிவான அறிவொளி தந்ததால் அவரை நாம் "ஆசிய ஜோதி' என்று கொண்டாடுகிறோம். பிரதமர் நரேந்திர மோடி "மனதின்குரல்' நிகழ்ச்சியில், "பகவான் கெளதம புத்தரின் வாழ்க்கைச் செய்தி இன்றும் பொருத்தமாக உள்ளது. அமைதி நமக்குள் தொடங்குகிறது என்பதை அவர் நமக்குக் கற்பித்தார்; தன்னை வெல்வதே மிகப் பெரிய வெற்றி என்பதை அவர் நமக்கு உணர்த்தியுள்ளார். இன்று உலகம் கடந்துவரும் பதற்றங்கள், மோதல்களுக்கு மத்தியில், புத்தரின் போதனைகள் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளன' என்று கூறியதைப் பெருமையுடன் நினைவூட்டுகிறேன்.

அன்பின் பாதையைக் காட்டிய புத்தர்பிரானின் போதனை போரில் நாட்டம் கொண்ட சக்ரவர்த்தியான அசோகரையும் மனம் மாறச் செய்ததென்றால் போதனையின் மகத்துவத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அசோக சக்கரவர்த்தி பெளத்த நெறிகளைப் பரப்பும் கல்வெட்டுகள், ஸ்தூபிகளை நாடு முழுவதும் நிறுவினார். சாஞ்சியிலும் சாரநாத்திலும் நிறுவப்பட்டுள்ள ஸ்தூபிகள் இன்றும் உலக மக்களை ஈர்க்கின்றன. சாஞ்சி வளாகம் சுற்றுலாத் தலமாக பெளத்தக் கட்டடக் கலையின் சான்றாக உள்ளது. சாரநாத்தில் உள்ள ஸ்தூபியின் சிங்கத் தலைகள் பாரதத்தின் தேசியச் சின்னமாக இருக்கிறது.

ஆசிய நாடுகளில் அசோகர், தனது குடும்பத்தினர், பெளத்தத் துறவிகள் துணையுடன் புத்தபிரானின் கொள்கைகளை நிலைநிறுத்தினார். அசோகரின் கல்வெட்டுச் சாசனம் இந்தச் செய்தியை உறுதி செய்கிறது. தமிழகத்தில் பெளத்த சமயம் காலூன்றவும் அவரே காரணம் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அசோகரின் மகன் மகிந்தன் இலங்கையில் புத்தரின் போதனைகளைப் பரப்பியதை வரலாற்று நூலான மஹாவம்சம் பேசுகிறது.

மகிந்தனால், இலங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்த அரிட்டர் பெளத்தத்தை ஏற்றுத் துறவியானார். பின்னர், இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்து பெளத்த சமயத்தைப் பரப்பியிருக்கக் கூடும். அரிட்டாபட்டி என்னும் கிராமம் இன்றைக்கும் இருக்கிறது. இது அரிட்டர் பெயரால் அமைந்திருக்கலாம். காவிரிப்பூம்பட்டினம், கும்பகோணம், மயூரப் பட்டணம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், பல்லாவரம், மதுரை, அரிட்டாபட்டி, தஞ்சை, அழகர் மலை, சித்தர் மலை, குன்னக்குடி, ஆனைமலை, திருச்சிராப்பள்ளி பகுதிகளில் பெளத்த அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

மதுரைக்கு அருகில் பெளத்தத் துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குகைகள் இருக்கின்றன; அங்குள்ள கல்வெட்டுகள் அசோகர் காலத்து பிராமி எழுத்துகளை ஒத்திருப்பதால் அவை கி.மு. 3 -ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்கின்றனர் சரித்திர ஆராய்ச்சியாளர்கள். பெளத்தப் பள்ளிகளில் சமூகப் பாகு பாடின்றி கல்வி கற்பித்தனர். புத்தரின் அறநெறிகளான திரிபிடகம் நூலையும் புத்த ஜாதகக் கதைகள் என்ற புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய கதைகளையும் மக்களிடம் பரப்பினர். பெளத்தத் துறவிகள் இலவசமாக மருத்துவமும் மருந்தும் கொடுத்து உதவினர். பலவிதங்களிலும் தியானம் பயிற்றுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அன்னதானம் செய்வதை பெளத்தம் அடிப்படைக் கடமையாக்கியது. ஏழை, எளியவர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகளை அமைத்தனர். "மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என மணிமேகலை பாடுகிறது. பசியைப் போக்கியும் நோய் தீர்த்தும் அன்பு காட்டியவர்கள் வழியில் மக்கள் பெளத்த நெறிகளை ஏற்று பெளத்தர்களாயினர்.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல விதமான ஆன்மிக சிந்தனைகள், சித்தாந்தங்கள் இந்த மண்ணில் தழைத்து வளர்ந்திருக்கின்றன. பெளத்தமோ சமணமோ எந்தச் சமயமாயினும் பாரதம் முழுவதும் ஒரே மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே இந்த தேசம் கலாசாரத்தால் உணர்வால் ஒரே தேசமாக இருந்ததைச் சொல்கின்றன.

வாழ்நாள் கல்வியை வலியுறுத்திய பெளத்தம் கல்விச் சாலைகளையும் நூலகங்களையும் மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தியது. கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் 10,000 மாணவர்களும், 1,500 ஆசிரியர்களும் கொண்ட பல்கலைக்கழகமாக நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாளந்தா போலவே தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற பல்கலைக் கழகம் இருந்ததற்கு வரலாற்று ஆவணங்கள் சான்று பகர்கின்றன. விக்ரமஷிலா, ஒடந்தபுரி என நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், இலக்கியப் படைப்புகள் என தேசத்தின் அறிவுசார் உச்சத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.

பெளத்தப் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்பதற்காக ஆசியா முழுவதிலுமிருந்து அறிஞர்கள் வந்தனர். சீனத் துறவி பாஹியானின் 15 ஆண்டுகால இந்திய யாத்திரை பெளத்தத்துக்காகவே மேற்கொள்ளப்பட்டது. சீனத் துறவி யுவான் சுவாங் இந்தியாவில் 16 ஆண்டுகள் நாளந்தாவில் படித்து, நூல்களை சேகரித்துக் கொண்டு தாயகம் திரும்பியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்துக்கு வந்த யுவான் சுவாங் இங்கிருந்த பெளத்த பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்ததோடு நூல்களைப் படியெடுத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார் என்று அவரது விரிவான பயணக் குறிப்புகளால் அறிகிறோம்.

கடுமையான தவத்தால் நலிந்த புத்தருக்கு இரங்கிய சுஜாதை, அன்போடு பாயசம் அளித்து உயிர்காத்து போதி மரத்தடியில் தியானம் செய்யும் வலிமையைத் தந்தாள். அவளின் அன்பையும் இரக்கத்தையும் புத்த பூர்ணிமா தினத்தில் பாயசம் செய்து

நினைவுகூர்கிறோம். "அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோதி, அன்புதான் உலகமகா சக்தி' என்பதைப் போதித்த புத்தபிரானின் போதனைகள் இன்றைய உலகுக்கும் அவசியமானவை. அன்பால் அகிலம் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.