விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தேவை மனித நேயம்!

அதிகாரிகள் பெரும்பாலும் மனித நேயத்துடன் நடந்துகொள்வதில்லை என்பதற்குப் பல நிகழ்வுகள் முன்னுதாரணாக இருந்திருக்கின்றன.

News image

ஜித்து முண்டா

Updated On :7 மே 2026, 5:16 am IST

ஆறு. சுப்பிரமணியன்

அதிகாரிகள் பெரும்பாலும் மனித நேயத்துடன் நடந்துகொள்வதில்லை என்பதற்குப் பல நிகழ்வுகள் முன்னுதாரணாக இருந்திருக்கின்றன. ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக வங்கிகள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலையும் சாதாரண இந்திய மக்களின் நிலைமை இந்த எண்ம உலகத்திலும் மாறவில்லை என்பதற்கு ஒடிஸாவில் நிகழ்ந்த சம்பவம் சான்றாய் அமைந்துள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் கேந்ஜார் மாவட்டத்தில் கடந்த ஏப். 27-ஆம் தேதி இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்று வங்கியின் கிளை மேலாளரை அணுகி, தனது சகோதரி இறந்து இரு மாதங்களாகிவிட்டன; அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.20,000-ஐ தர வேண்டும் என்று ஒருவர் கேட்ட சம்பவத்தால் மேலாளரும் வங்கி ஊழியர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

இந்தச் செயலின் பின்னணி மிகவும் கொடுமையானது. எலும்புக்கூட்டை எடுத்துவந்தவர் ஒடிஸா மாநிலம், கேந்ஜார் மாவட்டம், பாட்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாலிபோசி கிராமத்தைச் சேர்ந்த ஜித்து முண்டா ஆவார். அந்த எலும்புக்கூடு இரு மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமான அவரது மூத்த சகோதரி கல்ரா முண்டாவுடையது.

கல்ரா முண்டா இறப்பதற்கு முன்பாக, அவர் தனக்குச் சொந்தமான கால்நடைகளை விற்று அதில் வந்த சுமார் ரூ.20,000-த்தை மாலிபோசி கிராமத்தில் உள்ள கிராம வங்கியில் தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிடவே, அவருக்கு வேறு யாரும் ரத்த உறவுகள் இல்லாத நிலையிலும், அவர் வங்கிக் கணக்கில் குறிப்பிட்டிருந்த வாரிசுதாரரும் இறந்துவிட்டதாலும், ஜித்து முண்டா முறையான வாரிசு என்பதால், வங்கி அதிகாரிகளை அணுகி தனது சகோதரி கணக்கில் உள்ள பணத்தை தனக்கு தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு வங்கி மேலாளர், இந்தப் பணத்தை எடுக்க வேண்டுமென்றால், காலமான சகோதரியின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வாங்கி வாருங்கள் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

ஜித்து முண்டாவுக்கு இந்தச் சான்றிதழ்களை எங்கே வாங்குவது என்று தெரியவில்லை. இது குறித்து அவர், வங்கி அதிகாரியிடம் மீண்டும் முறையிட்டுள்ளார். அவர் "சான்றிதழ் இருந்தால் இங்கு வாங்க. இல்லையென்றால் சகோதரியை அழைத்து வந்து பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று அதிகாரத் தோரணையில் கூறியிருக்கிறார்.

மனிதநேயம் இல்லா அந்த அதிகாரி கூறிய சொல் ஜித்துக்கு கோபத்தை வரவழைத்ததோ என்னமோ? நேராக சகோதரி உடலை புதைத்த இடத்துக்குச் சென்று தோண்டி, அங்கிருந்த சகோதரியின் எலும்புக்கூட்டை எடுத்துவந்து வங்கி அதிகாரி முன்பாக போட்டுள்ளார்; இதுதான் நடந்தது.

ஜித்துவின் இந்தச் செயலால் அதிர்ந்து போன அந்த கிராம வங்கி மேலாளர், போலீஸுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து விசாரித்து எலும்புக்கூட்டை எடுத்துச் சென்றதுடன், அந்தப் பகுதி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து ஜித்துவுக்கு பணம் கிடைக்க, வேண்டிய சான்றிதழ்களை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

வங்கி அதிகாரிக்கு பாடம் கற்பித்த ஜித்துவின் செயல் சற்று கரடு முரடானது என்றாலும், இந்தச் சம்பவம், சமுகத்துக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. அதாவது, ஜாதி சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் எனப் பல சான்றிதழ்களைக் கேட்டு அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு எளிதில் நிவாரணம் கிடைப்பதில்லை என்பதையும், அதனால் விரக்தியடைவோர் இதுபோன்ற கடினமான முடிவுகளுக்குத் தள்ளப்படுவதையும், ஏன் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதையும் நாம் இன்னமும் பார்த்து வருகிறோம்.

இதற்குத் தீர்வு காண வேண்டியது அரசும், அதிகாரிகளும்தான். வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக் கணக்கில் வாரிசுதாரர் குறிப்பிடப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து அதை ஏற்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளரை அறிவுறுத்தும் அதிகாரமும் இருக்க வேண்டும்.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட்டதும், அவரது குடும்பத்துக்கு வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றம், வங்கிக் கணக்குகளில் மாற்றம், வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம், காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஜித்துவை போன்றவர்கள் இத்தகைய அல்லது இதைவிட கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இது மட்டுமல்ல, ஆதார் போன்ற அத்தியாவசிய ஆவணங்களில் பெயர் திருத்தம் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறி இறங்கும் அப்பாவிகள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இதுபோன்று சொத்து ஆவணங்களில் பெயர் தவறாகப் பதியப்பட்டு, வாரிசுகள் அந்தச் சொத்தை வாங்குவதற்குள் படாத பாடு படுகின்றனர். இது போன்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வுகாணும் நடைமுறையும், சட்டபூர்வ எளிதான நடவடிக்கைகளும் இன்றைய எண்ம உலகில் நிச்சயம் தேவை.

அதேபோல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் நியமனத்தை கண்டிப்பாக செய்யவேண்டும். அதிலும் 3 வாரிசுதாரர்களை நியமிக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. அது போன்ற வாரிசுதாரர் நியமனங்களை செய்துகொள்ளும்போது, உயிரிழப்பு ஏற்படும் நிலையில், வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்கும். அதுபோல சொத்துகள் வைத்திருப்பவர்களும் முறைப்படி தங்கள் ஆயுளுக்குப் பிறகு இன்னாருக்கு இந்த சொத்து சென்றடைய வேண்டும் என்று உயில் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.