தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

அரசாணையால் ஆபத்து!

அரசே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது?

News image
Updated On :8 மே 2026, 6:44 am IST

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் "மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் சுருக்கமாக "ஹாக்கா' (HACA) என்று அழைக்கப்படுகிறது.

மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் அரசாணை எண் 44-இல் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மேற்குத் தொடர்ச்சி மலை கவலையளிக்கும் அளவுக்குச் சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் "வளர்ச்சி' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் பொருளாதார, சமூக மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு, மெல்லிய சுற்றுச்சூழலையுடைய மலைப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்துகின்றன. இதனால், மலைப் பகுதிகள் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மலைப் பகுதிகளில் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகளை வழிமுறைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்படுகிறது' என்று அந்த அரசாணை கூறுகிறது.

மலைப் பகுதி என்பது மலைகளை மட்டும் உள்ளடக்கியது அன்று; மலையடிவாரங்களில் உள்ள கிராமங்களையும் உள்ளடக்கியது. அந்தப் பகுதிகளில் வேளாண்மைக்காக நிலங்களைச் செதுக்குதல், வீட்டு மனைகள் உண்டாக்குதல், கனிம வளங்கள் எடுத்தல், சுற்றுலாத் திட்டங்கள் திட்டமிடுதல், அணைகள் கட்டுதல், மின்சாரம் தயாரித்தல், சாலை, ரயில் பாதைகள் அமைத்தல் போன்ற பல பணிகளுக்கும் மலைப் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

2011-இல் மேற்குத் தொடர்ச்சி மலை மிக வேகமாக அழிந்து கொண்டிருந்த காரணத்தால் அப்போதைய மத்திய அரசு, சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமங்கள் எடுப்பதற்கும், அணைகள் கட்டுவதற்கும், சுற்றுலாவுக்கும் எல்லாவிதக் கட்டுமானங்களுக்கும் மொத்தமாக தடை விதித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.

குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை செல்கிறது. கர்நாடகமும், கேரளமும், மகாராஷ்டிரமும் காட்கில் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தன. மத்திய அரசும் காட்கில் அறிக்கையை ஏற்கவில்லை. அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அரசு அமைத்த குழுவின் அறிக்கையை அந்த அரசே ஏற்கவில்லை!

2013-இல் மத்திய அரசு கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை அமைத்தது. விண்வெளி விஞ்ஞானியை சுற்றுச்சூழல் ஆய்வுக்குத் தலைமையேற்கச் சொன்னது பலத்த விவாதத்துக்கு உள்ளானது. கஸ்தூரிரங்கன் குழு காட்கில் குழுவின் பரிந்துரைகளைத் திருத்தி, மத்திய- மாநில அரசுகளின் திருப்திக்கேற்ப ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதன் பலனாக "வளர்ச்சி' என்ற பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலை இன்னும் அதிவேகமாகச் சீரழிய ஆரம்பித்தது. அதிலும் கேரளம் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பகுதிகளையெல்லாம் அழித்தது. வயநாடு போன்ற மெல்லிய சூழலையுடைய பகுதியில் நிலச்சரிவால் மிகுந்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. ஆனால், கேரளம் இன்னும் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

முந்தைய திமுக அரசு 24. 02.26 அன்று ஓர் அரசாணை வெளியிட்டது. அதில் "வீட்டுமனைத் திட்டங்களின் அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக' இந்த அரசாணை வெளியிடப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இருக்கிறது இந்த அரசாணை! இதன்படி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல, இந்த பாதுகாப்பு ஆணையத்தின் வளையத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டன. அங்கெல்லாம் இனிமேல் ஆணையத்தின் அனுமதியில்லாமலேயே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக்கப் படலாம்; கனிம வளங்கள் எடுக்கப்படலாம்; சாலைகள் போடப்படலாம்; ரிசார்ட்டுகள் கட்டப்படலாம்...

கோவை மாவட்டத்தில் வால்பாறை மட்டுமே மலையாம். வெள்ளியங்கிரி போன்றவையெல்லாம் மலைப் பகுதியே இல்லையாம்! ஈரோடு மாவட்டம் மொத்தமாக மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. ஈரோடு மாவட்டத்தில் தலைமலை, திருநெல்வேலியில் அகஸ்திய மலை} இவையெல்லாம் மலைகள் இல்லாமல் வேறு என்னவாம்? நீலகிரியையும் கொடைக்கானலையும் மட்டும் ஏனோ விட்டு வைத்திருக்கிறார்கள்!

மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கிறது இந்த அரசாணை. இது செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள மலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்; மலைகள் அழிந்தால் காடுகளும் அழியும்; காடுகள் இல்லையென்றால் மழை இல்லை; மழை இல்லையென்றால் தண்ணீர் இல்லை; மொத்தத் தமிழகமும் பாலைவனமாகிவிடும்!

இந்த அரசாணை குறித்து உயர் பதவிகளில் உள்ள பல குடிமைப் பணி அதிகாரிகளுக்கே தெரியவில்லை. அவ்வளவு ரகசியமாக ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்றால் அதன் நோக்கம் நிச்சயம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை. அரசு அதிகாரிகளுக்கே தெரியாமலிருக்கும் போது பொதுமக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், மனை வணிக முதலாளிகளுக்கு உடனே தெரிந்துவிட்டிருக்கிறது!

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமங்களில் அனுமதி கிடைக்காமல் நின்று போயிருந்த வீட்டுமனைகளில் எல்லாம் மளமளவென்று வீடுகள், ரிசார்ட்டுகள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் இருக்கும்போதே சட்டவிரோத ரிசார்ட்டுகளும், சட்டவிரோதச் செங்கல் சூளைகளும் அமோகமாக இயங்கிக் கொண்டிருந்தன. சுற்றுச்சூழல் போராளிகள் நீதிமன்றம் சென்றதால் அனைத்தும் தடை செய்யப்பட்டன. இந்த அரசாணையால் சட்டவிரோதமாக நடந்தவைகளெல்லாம் இனி சட்டபூர்வமாக நடக்கப் போகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இந்திய வரைபடத்தில் இருந்து மொத்தமாகக் காணாமல் போகப் போகின்றன.

இப்போதைய அரசாணையின் மூலம் பல மலையடிவாரக் கிராமங்கள் மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம். கர்நாடகத்திலிருந்து இடம்பெயரும் யானைக் கூட்டங்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக நடந்து கோவையில் போளுவாம்பட்டிப் பள்ளத்தாக்கைக் கடந்து முதுமலைக்குச் செல்லும். மீண்டும் முதுமலையிலிருந்து அதே பாதையில் கர்நாடக வனப் பகுதிக்குத் திரும்பும்.

இந்த வலசைப் பாதையில் வெவ்வேறு உயரங்களில் சிறியதும் பெரியதுமாக மலைகள் உள்ளன. ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்கு யானைகள் தாவியோ பறந்தோ செல்ல முடியாது. இரண்டு மலைகளுக்கும் இடையிலுள்ள பள்ளத்தாக்கின் வழியாகவும் மலையடிவாரத்தின் வழியாகவும்தான் செல்ல முடியும். பெரும்பாலும் இந்த மலையடிவாரங்கள் காடுகளாகவும் வேளாண் நிலங்களாகவும் இருக்கும்.

மனித நடமாட்டம் குறைவாகவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இருக்கும். அதனால், யானைகளின் வலசையும் இடையூறு இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது; மக்களுக்கும் இடையூறு இல்லாமல் இருந்தது. அண்மைக் காலங்களில் நகர் விரிவாக்கம், சுற்றுலா, ஆன்மிகம் மற்றும் கல்வி நிலையங்களின் ஆக்கிரமிப்பு, உல்லாச விடுதிகள் என்று பல காரணங்களால் யானைகளின் வலசைப் பாதைகள் துண்டிக்கப்பட்டு மனித விலங்கு மோதல் மிகவும் அதிகரித்திருக்கிறது.

கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் யானைகளால் மனித உயிரிழப்புகளும் மனிதர்கள் அமைக்கும் சட்டவிரோத மின்வேலிகளால் யானைகள் உயிரிழப்பதும் அடிக்கடி நிகழ்கின்றன. இப்போது தடையில்லா வளர்ச்சி என்ற பெயரில் மலையடிவாரக் கிராமங்களில் கட்டுமானங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், சுற்றுலாக் கட்டமைப்புகளுக்கும், சாலைகளுக்கும், அணைகளுக்கும், மின் நிலையங்களுக்கும் அனுமதி அளித்தால் வலசைப் பாதைகள் இன்னும் துண்டாடப்பட்டு மனித விலங்கு மோதல் பன்மடங்கு அதிகமாகும்!

அது மட்டுமல்ல; மலைகளைத் தாங்கி அவற்றின் சூழலையும் காப்பாற்றுவது மலையடிவாரத்திலுள்ள கிராமங்களே. அவற்றின் சூழலை மாற்றி அமைத்து மனிதர்களின் புழக்கத்தை அதிகரித்தால் மலைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய விலங்குகள் மட்டுமல்லாமல் பல சிறிய விலங்குகளின் வாழ்விடம் அழியும். குள்ள நரி, முள்ளம்பன்றி, முள் எலி, கீரிப்பிள்ளை போன்ற சிறு விலங்குகளும் பாம்புகளும் அழிந்து போகும்.

இச் சிறு விலங்குகள் உணவுச் சங்கிலியில் மிக முக்கிமான இடத்தில் உள்ளவை. அந்தச் சங்கிலி அறுந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். ஏற்கெனவே ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். குள்ளநரி இனமே அழிந்து போய்விட்டது. மயில்களின் எண்ணிக்கை அதிகமாக இதுவும் ஒரு காரணம். மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சாப்பிடுவதால் பல இடங்களில் தேசியப் பறவை என்பதை மறந்து மயில்களை விஷம் வைத்துக் கொல்கிறார்கள்.

சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்தால் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை கூடும். அதனால் நிறைய பயிர்ச் சேதம் ஏற்படும். மனித விலங்கு மோதல் கட்டுக்கடங்காமல் போகும்.ஒரு மலை உருவாக ஆயிரங்கோடி ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற தவறான கொள்கைகளால் ஒரே மாதத்தில் எல்லா மலைகளையும் அழித்துவிடலாம். மக்கள் தவறு செய்தால் அரசிடம் முறையிடலாம். அரசே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது?

கட்டுரையாளர்:

சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.