காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நாம் உபயோகிக்கும் பற்பசையை எத்தனை பேர் இணைந்து தயாரித்திருப்பார்கள்?
குளிக்கும்போது பயன்படுத்தும் வாசனை சோப்பைத் தயாரிக்க எத்தனை பேர் வியர்வை சிந்தியிருப்பார்கள்? தினசரி நாம் உடுத்தும் உடையை நெய்தவர் யார்? நமது உணவுக்கான நெல், எந்த விவசாயியின் உழைப்பில் விளைந்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், முகம் தெரியாத இந்த மனிதர்களின் உழைப்பில் உருவான பொருள்களைத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் வசதியாக, மகிழ்ச்சியாக, மன நிறைவுடன் வாழ்வதன் பின்னணியில் எத்தனை விதமான மனிதர்கள் மறைந்திருக்கிறார்கள்!
அவர்களின் உழைப்பு இல்லாவிட்டால், நமது அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய்விடுமே! இப்படிப்பட்ட முகம் தெரியாத மனிதர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள் அல்லவா? நாள்தோறும் உணவு உண்பதற்கு முன், கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு சாப்பிடத் தொடங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அது எதற்காகத் தெரியுமா? 'இந்த வேளை உணவு என் தட்டில் விழுவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி' என்று தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, 'ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிப்போருக்கு மத்தியில், என்னுடைய பசியைப் போக்கும் விதத்தில் அறுசுவை உணவை அளித்த இறைவா, உனக்கு நன்றி!' என்று கூறவும்தான்.
ஆக, நன்றி உணர்வு என்பதை நாம் ஏதோ ஒரு வகையில் தினமும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் மனிதப் பண்பும்கூட. யாராவது ஒருவர் நமக்கு ஒரு உதவி செய்துவிட்டால், 'நன்றி' என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிப் பாருங்கள். அவர்கள் முகமும், அகமும் எப்படி மலர்கிறது என்பதைக் கண்கூடாகக் காண முடியும். நன்றியுணர்வு இல்லாத மனிதர்களிடம் இரக்கம், அன்பு, நேசம், பாசம், கருணை போன்ற உணர்வுகளைக் காண்பது அரிது. மனிதனாகப் பிறந்தவனுக்கு நன்றியுணர்வு வேண்டும்.
அதை ஆங்கிலத்தில் 'கிரேட்டிட்யூட்' என்கிறோம். மகாபாரதத்தில் கர்ணன் மிகப் பெரிய பராக்கிரமசாலியாக இருந்தபோதிலும், உயரிய குணநலன்கள் வாய்த்தவனாக இருந்தபோதிலும், தன் உடன்பிறந்த பாண்டவர்களுக்கு எதிராகச் செயல்பட்டான் என்ற பழிச்சொல் கர்ணனுக்கு உண்டு. ஆனால், ஆதரவற்று நின்ற தன்னை அரவணைத்து, அரச வாழ்வும் தந்த தன் நண்பன் துரியோதனனுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் துணிந்தான் கர்ணன்.
காரணம், செஞ்சோற்றுக்கடன் என்னும் நன்றியுணர்வுதான்! பெற்ற தாய், உடன்பிறந்த தம்பிகளின் நலனைவிட, நட்பே பெரிதென அவன் மனம் சொன்ன பாதையை அவன் தேர்ந்தெடுத்தான். அதனால், தனக்கு அழிவு நேரும் என்பது தெரிந்திருந்தும்கூட, தன்னுள் பொங்கிய நன்றி உணர்வுக்கு அவன் தலைவணங்கினான்; நட்புக்கு இலக்கணம் வகுத்தவன் ஆனான். ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறக்காமல் அடிக்கடி நினைத்துப் பார்க்கும்போது, இந்தப் பிரபஞ்சம் நம்மை ஆசிர்வதிக்கிறது. பல்வேறு வளங்களையும் நமக்குத் தர விழைகிறது.
கருணை என்னும் ஊற்றை நமக்குள் சுரக்கச் செய்கிறது. நம் மூலம் பலரது வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் நமக்கு கடுகளவுக்கு உதவி செய்தாலும்கூட அதை மலையளவு செய்ததாக எண்ணி நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன், 'இந்த அற்புதமான வாழ்க்கையைத் தந்த உனக்கு நன்றி கடவுளே!' என்று சொல்லிவிட்டு அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.
நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல வேலைக்காக, அருமையான உறவுகளுக்காக, அன்பான குழந்தைகளுக்காக, நாம் அனைத்து செüகர்யங்களுடன் வசிக்கும் வீட்டுக்காக, காலை முதல் இரவு வரை நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுக்காக, நோயின்றி, உடல் ஆரோக்கியத்துடன் நாம் இயங்க முடிவதற்காக என அத்தனை நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.
மனம் சோர்வாக இருக்கும் நேரங்களில், ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து, நம் வாழ்க்கையில் நடைபெற்ற மிக அற்புதமான நான்கைந்து சம்பவங்களைப் பட்டியலிட்டு, அதற்கு காரணமானவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்களை நினைத்துப் பார்ப்பது நம் மனதை உற்சாகப்படுத்துவதுடன், நன்றியுணர்வை அதிகப்படுத்தும். பெற்றோர்கள், கணவன்-மனைவி, சகோதர-சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் என பலதரப்பட்ட உறவு
களுக்கிடையேயான மனக்கசப்புகளையும், வருத்தங்களையும் நீக்கும் ஆற்றல் நன்றியுணர்வுக்கு உண்டு. நமக்கு எப்போதும் துன்பம் தருவதையே வழக்கமாகக் கொண்டவர்கள்கூட, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு நன்மை செய்திருக்கலாம். அந்த நன்மையை நினைத்துப் பார்த்து நன்றியுணர்வுடன் இருக்கும்போது, அந்த நபர் மீதான கோபம்கூட படிப்படியாகக் குறைவதை உணரலாம்.
நன்றியுணர்வுடன் இருப்பதால், மன அழுத்தம் குறைகிறது; கவலைகள் மட்டுப்படுகின்றன. சவால்களை எதிர்கொள்ளும் மனநிலை வாய்க்கிறது. மகிழ்ச்சி அதிகரிக்கிறது. உறவுகள் மேம்படுகின்றன. எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நேர்மறை எண்ணங்கள் தலைதூக்குகின்றன. ஒவ்வொரு நாளும் இரவு உறங்குவதற்கு முன்பு, படுக்கையில் உட்கார்ந்தபடியே அன்றைய நாளில் நடந்த நல்ல விஷயங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதையும் வழக்கமாக்கிக் கொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்
கோலிவுட் ஸ்டூடியோ

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
