ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும். கல்வி பயின்ற பின்னர் ஒரு பணியில் இணைவதற்கோ அல்லது புதிய தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கோ பின்னணியில் சில தவிர்க்க முடியாத சமூக, பொருளாதாரத் தேவைகள் இயல்பாகவே உள்ளன.
ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேரும் தனிநபரின் அடிப்படையான கடமை, தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்வதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.
சக ஊழியர்களுடன் இணக்கமான பணிச் சூழ்நிலையை உருவாக்குவதும், அவர்களின் உடலுக்கோ, மனதுக்கோ எவ்வித துன்பமோ தேவையற்ற மன உளைச்சலோ ஏற்படுத்தாமல் நேர்மையாகப் பணியாற்றுவதும் ஒவ்வொருவரின் தார்மிகப் பொறுப்பாகும்.
இத்தகைய அமைதியான சூழல் மட்டுமே ஒருவரின் முழுமையான திறனை வெளிக்கொணர்ந்து, நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கும், தனிமனித மன அமைதிக்கும் உறுதுணையாக அமையும். நேர்மையாக தன் கடமையைச் செய்வதைத் தாண்டி, மற்றவர்களின் பணிகளில் தேவையின்றித் தலையிடுவது, புறம் பேசுவது, தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கில் சூழ்ச்சிகளைச் செய்வது எனத் தொடரும் இத்தகைய செயல்களையே "அலுவலக அரசியல்' என்று நவீன மனிதவள மேலாண்மை, உளவியல் ஆய்வுகள் தெளிவாக வரையறுக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) பணியிட மன அழுத்தத்தை ஒரு முக்கிய உடல்நல சவாலாக அங்கீகரித்துள்ள நிலையில், அடிப்படையில் பார்த்தால், இது தனிமனித நலனை மட்டுமே முன்னிறுத்தும் மனப்பான்மையின் வெளிப்பாடாகவே அமைகிறது. தங்களுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு நேர்மையான முறையில் முன்னேறுவதற்குப் பதிலாக, குறுகிய காலத்தில் அந்த இடத்தில் உயர நினைக்கும் மாற்று குறுக்குவழிகளையே பலரும் கையாள முற்படுகின்றனர்.
சமீபத்திய டெலாய்ட் மற்றும் லிங்க்ட்இன் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள், பணியிடத்தில் நிலவும் இணக்கமற்ற சூழலால் ஏற்படும் மன உளைச்சலே ஊழியர்கள் அதிக அளவில் வேலையை விட்டு விலகுவதற்கு முதன்மைக் காரணம் என்பதைத் தரவுகளுடன் உறுதிப்படுத்துகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை, புத்தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட்}அப்) நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான பணிச்சுமை (ஒர்க் பிரஷர்) மிக அதிகமாகவே உள்ளது.
மேலும், தற்போதைய கலப்பின வேலை முறையால் (ஹைபிரிட் ஒர்க்) ஏற்படும் கூடுதல் நெருக்கடி மற்றும் ஆட்குறைப்பு (லேஆஃப்) குறித்த பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவை நிலைமையை மேலும் சவாலாக மாற்றுகின்றன. இதனுடன் இந்த "அலுவலக அரசியலும்' இணையும்போது, அந்தப் பணியிடத்தின் அமைதியும் இணக்கமும் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நிறுவனங்களில் உள்ள மனிதவள அமைப்புகளின் (ஹெச்.ஆர். சிஸ்டம்ஸ்) மேம்பாடும், பாரபட்சமற்ற வெளிப்படையான மதிப்பீட்டு முறைகளும், சிறப்பான தலைமைத்துவமும் (லீடர்ஷிப்) இத்தகைய சவால்களைக் கடந்து நியாயத்தை நிலைநாட்டப் பெரிதும் அவசியமாகின்றன.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி நேர்மையாகப் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது திறமை முறையாக அங்கீகரிக்கப்படாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
பணியிடத்தில் ஏற்படும் இந்த விரக்தி, சிறந்த திறமையாளர்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. ஒரு சிறந்த பணியாளரை இழந்து, புதிய ஒருவரைத் தேடிப்பிடித்து அவருக்குப் பயிற்சியளிப்பது நிறுவனத்துக்கு பெரும் நேர விரயத்தையும், மறைமுகப் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது.
பணியிடங்களில் ஏற்படும் இந்த அறம் சார்ந்த சவால்களுக்குத் தனிமனிதப் போட்டி மனப்பான்மை மட்டுமே முழுமையான காரணமல்ல; தற்போதைய கல்வி முறைக்கும் இதில் தவிர்க்க முடியாத பெரும்பங்கு உள்ளது. இன்றைய கல்வி முறையானது பெரும்பாலும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட, மனப்பாடம் செய்யும் "ஏட்டுக்கல்வியாக' (ரோட் லேர்னிங்) நீடிக்கிறது.
"மென்திறன்கள்' (சாஃப்ட் ஸ்கில்ஸ்), குழுவாக இணைந்து செயல்படும் பண்பு மற்றும் "பணியிட அறநெறிகள்' (ஒர்க் பிளேஸ் எத்திக்ஸ்) குறித்த போதிய பயிற்சியை மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் வழங்குவதில்லை.
இந்த தேவையற்ற அலுவலக அரசியலைத் தடுக்கவும், ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவும் தனி மனித அளவிலும், நிர்வாக அளவிலும் பல்வேறு அவசியமான மாற்றங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும். முதலாவதாக, பணியாளர்களை மதிப்பீடு செய்யும் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை (ட்ரான்ஸ்பரன்ட் அப்ரைசல்) உறுதி செய்யப்பட வேண்டும். அறம் சார்ந்த தனிமனித பண்புகள், அவற்றை குழுக்களில் செயல்படுத்தும் திறன் உள்ளிட்ட நற்பண்புகளுக்கு நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும்.
புறங்கூறுதல், தன்னை மட்டுமே முன்னிலை படுத்துதல், பிறர் உழைப்பைத் திருடுதல் போன்ற ஒழுங்கீனமான செயல்களைத் தடுக்க நிறுவனங்கள் "சுழிய சகிப்புத்தன்மை' (ஜீரோ டாலரன்ஸ்) கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், கல்வி முறையானது வெறும் ஏட்டுப் பாடத்திட்டங்களோடு சுருங்கிவிடாமல், மனிதவள மேம்பாடு, மனவளக்கலை மற்றும் தியானம் போன்ற அகத்தூய்மைக்கான சுயக் கட்டுப்பாட்டு பயிற்சிகளைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்தே போதிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த சிந்தனையை பணிபுரியும் இடங்களிலும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா் பற்றாக்குறையை நீக்கக் கோரி சூரியா் தொடக்கப் பள்ளிக்கு ‘பூட்டு’
எல் நினோ: மீள்வது எப்படி?

மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தவெக அரசின் நோக்கம்: அமைச்சா் க.விக்னேஷ்

கர்ப்பம்: சிக்கல்களுக்கு 3 காரணங்கள்! எந்தெந்த வாரங்களில் பரிசோதனை அவசியம்?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



