அண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
"இந்தத் திரைப்படத்தை காண்பதற்காக நிறைய பணம் செலுத்தி இருக்கிறோம். முழு திரைப்படத்தையும் பார்த்து விட்டுப் போகலாம்' என உறவினர்கள் தொடர்ந்து அறிவுரை சொன்னபோதும் காது கொடுக்காது, "நாங்கள் வாடகை வாகனம் பிடித்து வீட்டுக்குச் செல்கிறோம்' எனச் சொல்லி மூன்று சிறுவர்களும் கூட்டாக வெளியேறி இருக்கிறார்கள். இவர்கள் கல்லூரியில் படிக்கும் பதின் பருவ வயதைக் கடந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். மூவரும் பள்ளிக்கல்வி படிக்கும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
மற்றொரு நாள் "இன்று கோயிலில் அபிஷேகம் இருக்கிறது; அதனால் கருவறைக்குள் சென்றால் வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும்' என்று முன்கூட்டியே சொன்ன நிலையில்,"அப்படியானால் நாங்கள் கோயிலுக்கு வர மாட்டோம். நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்' என்று அடம் பிடித்தார்களாம். கேரம்போர்டு, செஸ் விளையாடுங்கள் என விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தால்கூட, "இதையெல்லாம் விளையாட நீண்ட நேரம் ஆகும். எங்களுக்குத் தேவை இல்லை' என விளையாட்டிலும் ஆர்வம் காட்டவில்லையாம். பிறகு நாள் முழுதும் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்றால், காலை தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தம் பெற்றோரின் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தியபடியே மற்ற நிகழ்வுகளின் மீது ஆர்வம் இல்லாது இருக்கிறார்கள் என வருத்தப்பட்டார் உறவினர்.
இன்றைய எண்ம யுகத்தில் மனிதனின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது இந்த கவனத்திறன் சுருங்கல். "கவனம் என்பது ஒரு நாணயம். அதை எங்கே செலவழிக்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தரம் அடங்கியுள்ளது' என்றார் தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ். ஆனால், இன்று அந்த நாணயம் சில்லறையாக சிதறிக் கிடக்கிறது.
எண்ம யுகத்தின் மிகப் பெரிய இழப்பு பணமும் நேரமும் அல்ல; நம் கவனத்திறன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று மனிதனின் சராசரி கவனத்திறன் எட்டு விநாடிகளாகக் குறைந்து விட்டது என்கிறது. 2026-இல் நாம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறோம்.
நாம் எப்படி இங்கு வந்தோம்? விரல் நுனியில் உலகம் இருப்பதால் மூளைக்குள் புயலடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு இந்தியர் நாள் ஒன்றுக்கு 6.5 மணி நேரம் கைப்பேசி திரையைப் பார்க்கிறார். ஒவ்வோர் ஆறு நிமிஷத்துக்கும் ஒருமுறை கைப்பேசியைத் தொடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூ}டியூப் ஷார்ட்ஸ், வாட்ஸ்}ஆப் ஸ்டேட்டஸ் என 15 விநாடி உள்ளடக்கங்கள் நம் மூளையில் "டோபமைன் ஹிட்' கொடுக்கின்றன. மூளை அந்த வேகத்துக்கு பழகிவிட்டது. இதனால் 45 நிமிஷ பாடவேளை, 220 பக்க புத்தகம், முக்கிய நபருடன் ஆழமான உரையாடல் எல்லாம் நேரத்தை விழுங்கும் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
பெரியவர்களுக்கே அவ்வப்போது கைப்பேசியைத் தொடும் தொற்று இருக்கிறது என்று சொல்லும் போது மனக்கட்டுப்பாடு அதிகம் இல்லாத பதின் பருவ பிள்ளைகளின் நிலை என்ன ஆகும்? அதிலும் அவர்களை அதிகம் எதிர்கொள்ளும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கடினம். "ரீல்ஸ்'க்கும் "ஷார்ட்ஸ்'க்கும் பழகியவர்கள் வகுப்பறையில் 45 நிமிஷங்களுக்கு, ஏன்...30 நிமிஷங்களுக்குக்கூட தொடர்ச்சியாக ஒரு பாடத்தை கவனிக்கத் திணறுகின்றனர்.
ஒரு பாட வேளையான 45 நிமிஷத்திற்கு இடையில் ஓர் இடைவேளை கிடையாதா எனும் அளவுக்கு பாடத்தின் மீது கவனத்தைக் குவிக்கத் தடுமாறுகின்றனர். வகுப்பறையில் ஒரு கணக்கைப் போட (தீர்க்க) தொடங்கினால் மாணவ}மாணவிகள் ஆழமாக புரிந்து கொள்ள அடுத்தடுத்த வழிமுறைகளில் அவர்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டும். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பல்வேறு விதமான பதில்கள் வரும். அவ்வாறு வரும் ஒவ்வொரு தவறான பதில்களிலிருந்தும் புதிரை விடுவித்தபடி சரியான விடைக்கு அடிக்கோடிடுவார் ஆசிரியர். அதனால்தான் வகுப்பறையில் நிகழும் இந்த கற்றல்}கற்பித்தல் நினைவடுக்கில் நீண்ட நாள் தங்கியிருந்து ஞாபகத்துக்கு வலு சேர்க்கிறது.
ஆனால், கவனத் திறன் சுருங்கியவர்கள் ஒரு கணக்கை போடத் தொடங்கினால் உடனடியாக பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு விவாதம் மூலமாகவோ, தவறான பதிலிலிருந்தோ சரியான விடையைக் காணும் நிதானமும் பொறுமையும் அவர்களிடத்தில் இல்லை.
பாடம் எடுக்கும் போது அவர்களின் கவனத்தைப் பாடத்தின் மீது குவிக்க இன்றைய ஆசிரியர்கள் மிக அதிகமாக மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிஷமும் அவர்களுக்கு சவால்தான். கற்பித்தலில் புதுப்புது உத்திகளை நித்தம் அறிமுகம் செய்து மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. கற்றல் கற்பித்தலுக்கு அடுத்து தேர்வுக்கு வருவோம். இந்த கவனத் திறன் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் முழு கவனத்தை குவித்து தேர்வு எழுதும் தகுதியை இழக்கிறார்கள்.
புகையிலை, மது, குட்கா போல கைப்பேசியும் ஒரு போதைதான். இதனால், பெரும்பாலான மாணவ}மாணவிகளுக்கு 60, 70 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்ற மனநிலை அதிகரித்துள்ளது. 90}க்கு மேல் அல்லது 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் பார்க்கும்போது சமீபத்திய இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் இத்தகைய மனநிலை அதிர்ச்சி அளிக்கிறது. இது கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் நிலை அல்ல. இங்கு குறிப்பிடப்படுவது கவனத்திறன் குறைந்த மாணவ}மாணவிகளை. இவர்கள் நிச்சயம் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் தகுதி பெற்றவர்கள். ஆனால், அதற்காக அவர்கள் முயற்சிப்பதில்லை. 60 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து கொண்டவர்கள்.
கூகுள், மெட்டா, டிக் டாக் போன்ற நிறுவனங்களின் முதன்மைப் பொருள் நீங்களோ, நானோ அல்ல; நம் கவனம்தான். "முடிவில்லா சுருள்' எனும் தானியங்கி ஓட்டம், அறிவிப்பு (நோட்டிபிகேஷன்) புள்ளிகள் எல்லாம் நம்மை கைப்பேசியுடன் அடிமைச் சங்கிலிபோல பிணைக்க வடிவமைக்கப்பட்ட உளவியல் பொறிகள். நாம் இவற்றையெல்லாம் இலவசமாகப் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நம் கவனத்தை விற்றுக் கொண்டிருக்கிறோம்.
வாட்ஸ்-ஆப் அரட்டையுடனேயே பாடம் படிப்பது, சாப்பிடும்போது காதொலிப்பானில் (ஹெட்போனில்) கேட்பது, பேசும்போது இன்ஸ்டாகிராமில் தொடர்வது என ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதை திறமை என நினைக்கிறோம். ஆனால், பல்பணி (மல்டி டாஸ்கிங்) செய்பவர்களின் மூளை ஒரு வேலையில் இருந்து இன்னொன்றுக்குத் தாவ 40 சதவீதம் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், செய்யக்கூடிய வேலைகளில் தவறுகள் 50 சதவீதம் அதிகரிக்கின்றன.
இப்படி கவனம் சிதறும் போது பதற்றம் கூடுகிறது. ஒரு வேலையையும் முழுமையாக முடிக்காத குற்ற உணர்வு மேலோங்கும். இதனால், தேவையற்ற பயம், தூக்கமின்மை எல்லாம் பக்கவிளைவாக நாளடைவில் வந்து சேரும்.
நம் முன்னோர் மணிக்கணக்கில் ஒரு வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டனர். ஆனால், இன்று நம்மால் எட்டு விநாடிகள்கூட ஒரு விஷயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்கிறார்கள். "ரீல்ஸ், ஷார்ட்ஸ்' போன்ற 15 விநாடி காணொலிகள் நம் மூளையை வேகமான தூண்டுதலுக்குப் பழக்கப் படுத்திவிட்டன. அறிவிப்பு (நோட்டிஃபிகேஷன்) ஒலி கேட்டாலே நம் கவனம் சிதறுகிறது. எதிரில் இருப்பவர்களைக் கவனிக்காது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உறவுகள் பலவீனமடைகின்றன.
நாளைய தலைமுறையான இன்றைய பிள்ளைகளை வளர்ப்பதில் ஒவ்வொரு பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. லட்சுமண ரேகை போல ஒரு எல்லைக்கோட்டை வகுக்க வேண்டியது அவசியம். உணவருந்தும் போது கைப்பேசியைத் தவிர்ப்பது, தேவையில்லாத அறிவிப்பு (நோட்டிஃபிகேஷன்) ஒலியை நீக்குவது அவசியம். எடுத்துக்கொண்ட வேலையில் 25 நிமிஷம் ஆழ்ந்து பணி செய்துவிட்டு ஐந்து நிமிஷம் கிடைக்கும் ஓய்வில் கைப்பேசியை கையாளச் சொல்லி முதலில் பழக்கி, பின்னர் 25 நிமிஷங்களை 45 நிமிஷமாக உயர்த்தும் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதுவே கவனத்துக்கான பயிற்சி. ஆரம்பத்தில் மனம் அலைபாயும். மீண்டும் இழுத்து வர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. பள்ளிகளிலும் முதல் ஐந்து நிமிஷத்தில் மூச்சுப் பயிற்சி, கவனம் குவித்தல் போன்ற பயிற்சி கொடுக்கலாம். பிரெஞ்சு தத்துவ ஞானி சிமோன் வெயில், "கவனம்தான் பிரார்த்தனையின் அரிய வடிவம்' என்று சொன்னார். நம் கவனத்தை யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது. கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... கூட்டணியும் குழப்ப அணியும்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

