நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சொல்லப் போனால்... கூட்டணியும் குழப்ப அணியும்!

தேர்தல் முடிவுகள் வெளிவரக் கூடிய கடைசி நேரத்தில் திமுக கூட்டணித் தலைவர்கள் வெளியிட்டுவரும் கருத்துகள் பற்றி...

News image

ஆளுக்கொரு பக்கம்... - செய்யறிவு சித்திரிப்பு / இரா. முத்துராஜா

Updated On :3 மே 2026, 6:25 am

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள கடைசி நேரத்தில் திடீரென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் கூட்டணியிலுள்ள தலைவர்களுக்கும் என்ன நேரிட்டது?

கூட்டணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி போல தேர்தல் வரும் வரைக்கும் இருந்த திமுக கூட்டணியில், தேர்தல் அறிவித்ததுமே உள்ளே கடாமுடா என்று சப்தங்கள் எழத் தொடங்கின.

யாருடைய ஆசிர்வாதத்தின் அடிப்படையில் என்று தெரியவில்லை, திடீரென விஸ்வரூபம் காட்டிய சில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கான புதுப்புதுத் தத்துவங்களை அவிழ்த்துவிட்டனர்; சொந்தக் கட்சித் தலைவரையே சந்தேகத்துக்குரிய நபராக சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பினர்.

இவர்களை எல்லாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்சித் தலைமையோ கடைசி வரை எதுவுமே பேசவில்லை. எங்கிருந்தோ ஒரு குடம் தண்ணீர் ஊற்றி அவர்களின் கொதிப்பை யாரோ அடங்கவைத்தார்கள். ஆனாலும் அவர்களின் அதோ பார் பூச்சாண்டி, ரயிலு வண்டியிலே என்ற டயலாக்குகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைத்துவிட்டது – கடந்த தேர்தலைவிட கூடுதலாக 3 தொகுதிகள். ஆனால், பிறகு  அவற்றைப் பங்கிட்டுக்கொள்ள கட்சிக்குள் நடந்தவையெல்லாம் வேற லெவல்.

வந்தார் வென்றார் என்பது போல தேமுதிக தலைவி பிரேமலதா விஜயகாந்த், தம்பிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி.யுடன் 10 பேரவைத் தொகுதிகளையும் பெற்றுக்கொண்டு போய்விட்டார். பாவம், ஏழு, எட்டு ஆண்டுகளாகக் கூட்டணியிலேயே விடாமல் ஒட்டிக்கொண்டிருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஏற்கெனவே கொடுத்த தொகுதிகளிலும் ஒன்றைக் குறைத்துக் கொடுக்க, கொஞ்சம் முணுமுணுப்புடன் இந்திய கம்யூனிஸ்ட்டும் கொஞ்சம் குரல் கொடுத்த பின் மார்க்சிய கம்யூனிஸ்ட்டும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டன; போட்டியுமிட்டிருக்கின்றன.

தேர்தலின் வெற்றி, தோல்வி, ஒவ்வொரு கட்சியின் எதிர்காலம், கூட்டணிகளின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம் எல்லாமும் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 4 ஆம் தேதிதான் தெரியும். வெற்றி, தோல்விக்குப் பிறகு பாராட்டவும் செய்யலாம்; விமர்சனமும் செய்யலாம், ஒட்டிக்கலாம், கட்டிக்கலாம், இல்லையென்றால் வெட்டிக்கலாம்.

ஆனால், என்னவோ தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் கடைசி நேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சகட்டுமேனிக்குக் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

வழக்கம்போலதான். கரூர்த் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணி, ‘களத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் மிகத் தெளிவாக உணர முடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்’ என்று கொளுத்திப் போட்டார்.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எல்லாரும் காங்கிரஸுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்றோ, காங்கிரஸ்தான் தமிழ்நாட்டில்  எதிர்க்கட்சியென்றோ தப்பித்தவறிக்கூட அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் யாரைச் சொல்கிறார், யாருக்காகச் சொல்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

ஆனால், தமிழ்நாடு - புதுச்சேரிக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரவாயில்லை, ஏற்கெனவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் என்றதுடன்,  “காங்கிரஸ் உண்மையில் புத்துயிர் பெறும் நிலையில் இருக்கிறது. கட்சி ஏற்கெனவே தனது அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டது. நிச்சயமாக காங்கிரஸ் கட்சியும், தொண்டர்களும், உள்ளூர் தலைவர்களும், மத்திய தலைவர்களும் இப்போது தமிழ்நாடு மறுசீரமைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்றும் தெரிவித்தார் (எப்படி என்று அவரும் சொல்லவில்லை; வேறு யாரும் கேட்கவுமில்லை!).

“கூட்டணிக்கு ஆட்சி அமைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது. மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார். பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க பல கட்சிகள் ஒன்றுசேர்ந்தது இதுவே முதல் முறை. ஏதாவது மாறப் போகிறதா என்று பார்ப்போம். தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது, முடிவுகளுக்காகக் காத்திருப்போம். ஆனால், இனி எங்களால் ஒரு நடுநிலை சக்தியாக (?) இருக்க முடியாது. நாங்கள் ஒன்று ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும்” என்று அறிவித்திருக்கிறார்.

சரிதான், இவர்கள் இப்படிதான் ஏற்கெனவே பேசினார்கள், பேசுவார்கள் என்றால் இன்னும் சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருத்துகளைச் சிந்திக் கூட்டணியை வியக்க வைத்திருக்கிறார்கள்.

“தேர்தல் கருத்துக் கணிப்புகள் பல வந்திருந்தாலும் மதச்சார்பற்ற கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்கும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் திமுக எப்படிப்பட்ட ஆட்சியை கடைப்பிடிக்க போகிறது என்பதை நாம் நிதானமாகப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

“இந்தத் தேர்தலில்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறைந்தபட்சம் ஆறு இடங்களையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்று நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியபோதும்கூட தி.மு.க. தலைமை இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஆனாலும்கூட பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமளித்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு இணைந்து நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். கடைசி வரை எந்தவிதமான பிசிறும் இல்லாமல், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், பாஜகவை எதிர்த்துப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். எனவே, வெற்றி பெறுகிற இந்த ஆட்சி, எப்படிப்பட்ட ஆட்சி அமையப் போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், இன்றைக்கும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும்கூட கடந்த காலத்தில் திமுக அரசும் அதை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றுதான் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். அதே மாதிரி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்ப்பதற்கும் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“வேறு எந்தத் தேர்தலையும்விட இந்தத் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது வழக்கமாகத் தேர்தல் நடக்கிற நேரத்தில் இளைஞர்கள் வேறு எங்காவது இருப்பார்கள். ஆனால், இந்த முறை அப்படி இல்லாமல் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற மாதிரியான ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே, அப்படிப்பட்ட இளைஞர்கள் ஓர் அரசியல் ரீதியாகத் தேர்தலில் வாக்களிப்பது, ஒரு மாற்றம் வேண்டும் என்கிற முறையில் ஒரு நோக்கத்துக்கு வந்திருப்பது என்ற இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி வரவேற்கத் தக்கது;  பாராட்டத் தக்கது”  - இவ்வளவையும் சொல்லியிருப்பவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரான கே. பாலகிருஷ்ணன்!

“தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தருவதில்லை. நான்கு கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன, ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சாதகமாக உள்ளது. மற்றொரு கருத்துக்கணிப்பு விஜய்யின் தவெக ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறது. வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“தமிழக வெற்றிக் கழகம்  ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, அது ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடும். நிச்சயமாக அதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடமும், முதல்முறை வாக்காளர்களிடமும் தவெகவுக்கு ஆதரவாக மாற்றம் உள்ளது” என்று கூறியிருப்பவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ!

ரொம்ப சரி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு விடியோவை வெளியிட்டு என்ன சொல்லியிருக்கிறார், பார்க்கலாம்.

“இந்தக் கூட்டணி ஒரு கொள்கைப் பிடிப்புள்ள கூட்டணி. இந்தப் பொறுப்புணர்வோடு இக்கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியைக்  கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விசிக பெரும் முயற்சி எடுத்துள்ளது.

“கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டணியைச் சீர்குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளைப் பலரும் எடுத்தனர். அவர்களின் இலக்கு விசிகதான். எப்படியாவது திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, என்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த நினைத்தனர். என் மூலமாக திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திட்டமிட்டனர்.

“பல விதத்தில் ஆசைகாட்டி இக்கூட்டணியை சிதைக்க முயற்சி செய்தனர். ஆனால் பொறுமை காத்து, தொலைநோக்குப் பார்வையோடு இக்கூட்டணியில் இருந்தோம்.

“மதவாத, சாதியவாத சக்திகள் பலவித முகமூடிகளோடு களத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் வலுப்பெற்றால் தமிழகத்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் அவர்களின் முயற்சிகளையெல்லாம் புறந்தள்ளிக் கூட்டணியில் தொடர்ந்து நீடித்தோம். இதனை பாராட்டுவதற்குப் பதிலாக, கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

“கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்பிருந்தும் திருமாவளவன் பெறவில்லை என்று விமர்சித்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசு இருந்தாலும், திருமாவளவன் இந்த அரசை ஆதரித்தார் என்றார்கள். இப்படி எல்லாம் பேசி நம்மைக்  கூட்டணியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.

“தற்காலிக லாபத்துக்காக ஒரு முடிவை எடுக்க நான் விரும்பவில்லை. எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், ஆசை காட்டியும் திருமாவளவன் உறுதியாக இருந்தார் என்பதைக்  குறிப்பிட்டு யாரும் என்னைப் பாராட்டவில்லை. இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்று சொன்னால், அதற்கு விடுதலைச் சிறுத்தைகளின்  அணுகுமுறையும், உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும். அதை நாம் விரும்பவில்லை.

“திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நாம் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. அதற்காக நாம் முரண்டுபிடித்து, இழுபறி நிலையை உருவாக்கவில்லை. கூட்டணியில் சங்கடமான சூழலை உருவாக்க விரும்பவில்லை. கூட்டணியைப் பலவீனப்படுத்த கூடாது என்று நானே முடிவெடுத்தேன். மேலோட்டமாகப் பார்த்தால் அது ஏமாளித்தனம் போல தெரியும். பொறுப்புணர்வோடு ஆய்வு செய்தால் நம் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதனையும் பலர் இங்கு கொச்சைப்படுத்துகிறார்கள்.

“வாக்குக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என சொல்லியுள்ளனர். சிலர் அதிமுக - பாஜக அணி வெற்றி பெறும் என சொல்லியுள்ளனர். நாம் கருத்துக் கணிப்புகளை நம்பத் தேவையில்லை. எப்படி கணக்குப் போட்டாலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டிபோட்டுப் பிரிக்கிறார்கள்.

“திமுக, அதிமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வாக்குகளை அவ்வப்போது வந்த தலைவர்கள் அறுவடை செய்தனர். இப்போது திமுகவை அதிமுக, விஜய், சீமான் ஆகியோர் எதிர்த்து வாக்குகளைப் பிரித்தனர்.

“திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால், தனித்த சக்தியாக திமுக, அதிமுக அணிகளை பின்னுக்குத் தள்ளும் வலிமையை விஜய் பெறவில்லை. எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

“விசிக 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முடிவு எதுவாக இருந்தாலும் நமது அரசியல் களம் நீர்த்துப் போகாது. நம் பயணம் வேகம் பெறும், தீவிரமடையும்.”

தேர்தல் முடிவுகள் வெளிவர, திட்டவட்டமாக யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவிருக்கும் கடைசி நேரத்தில், திடீரென இவ்வளவு பெரிய தன்னிலை விளக்கத்தை யாருக்காக வெளியிடுகிறார் திருமாவளவன்? யாரைத் திருப்திப்படுத்த விரும்புகிறார், அல்லது யாரை எச்சரிக்க விரும்புகிறார்? யாரைக் குறை கூறுகிறார்? யாரைப் பாராட்டுகிறார்?

கடைசி நேரத்தில் கூட்டணிக்குள் நுழைந்து கறாராகப் பேசி, எம்.பி. பதவியுடன் பத்துத் தொகுதிகளையும் பெற்றுச் சென்ற தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய பங்கிற்கு, தனிப்பெரும்பான்மை இல்லாமல் போனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, “மே 4  ஆம் தேதிக்குப் பிறகு பதில் சொல்கிறேன். எல்லாருமே களத்தில் மிகத் தீவிரமாக, எல்லா வகையிலும் சிறப்பாக வேலை செய்திருக்கிறோம். 4 ஆம் தேதி வெற்றிச் செய்தி வரும். அதன் பிறகு அழைத்துப் பேசுகிறேன்” என்று பொடியோ, வெடியோ வைத்திருக்கிறார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பேட்டிகளில், கருத்துகளில் இடம் பெற்றுள்ள சொற்களில் கொஞ்சம் முன்பின்னாக இருக்கலாம்; ஆனால், தொனி ஏறத்தாழ ஒரேமாதிரிதான். திமுகவிலிருந்து இன்னும் எதிர்வினையைக் காணோம். தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்க நினைத்திருக்கலாம்.  

இப்படிச் சொல்லிவைத்தாற்போல, எல்லாரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்களே, என்ன அதிசயம் அல்லது ஆச்சரியம் நிகழ்ந்தது? வாக்குப் பதிவு நாளில் முன்னெப்போதுமில்லாத அளவில் நிறைய இளைஞர்களும் பெண்களும் வந்து வாக்களித்தார்கள்; நிறைய பேர் த.வெ.க. பெயரைச் சொன்னார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது  மட்டும்தானா? மாற்றத்தை நோக்கியா? இவ்வளவு காலம் கூட்டாக – ஒண்ணுமண்ணாக – இருந்தவர்கள், இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரையிலாவது காத்திருக்க மாட்டார்களா, கருத்துச் சொல்ல? இந்தக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள்தான் பாவம், முடிவு தெரிவதற்கு முன்னரே முடியைப் பிய்த்துக் கொண்டிருப்பார்களாயிருக்கும்! ஏதோ தொடங்கிவிட்டது; என்னவாக இருக்கும்?

சார், ஒரு ஸ்மால் டவுட்டு. அண்ணா சாலையிலிருந்து பனையூருக்கு எந்த வழியாகச் செல்ல வேண்டும்?

பக்கம்தான், நேராகவும் செல்லலாம். டிராபிக்காக இருந்தால் பட்டினப்பாக்கம், நீலாங்கரை வழியாகவும் செல்லலாம்!

Summary

Regarding the comments being made by DMK alliance leaders at the last minute before the election results are announced...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.