தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

News image

முதல்வராகப் பதவியேற்கும் மு.க. அருகே ஆளுநர் சென்னாரெட்டி... - தினமணி கருவூலத்திலிருந்து...

Updated On :24 ஏப்ரல் 2026, 4:57 am

அதிமுகவைத் தொடங்கி, போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலிருந்து தொடர்ந்து வெற்றிகண்டு முதல்வராகவே இருந்து மறைந்த எம்.ஜி.ஆரின் வாரிசு  என அரசியலுக்கு வந்து, 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியும் பெற்று முதல்வரான ஜெயலலிதா, ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின் முடிவில் நடந்த  1996 பேரவைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தார் – 234 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது! கருணாநிதி மீண்டும் முதல்வரானார்!

வருவாய்க்கு அதிகமான (சுமார் ரூ. 66.65 கோடி!) சொத்துக் குவிப்பு வழக்கு, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவும் சசிகலாவும் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிய வழக்கு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊழல் என லஞ்ச - ஊழல் வழக்குகள், சட்டப் பிரச்சினைகள்...

வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்த வி.என். சுதாகரனின் படாடோபமான திருமண கோலாகலம், தோழி சசிகலாவுடன் நகைகள் பூண்டு ஜெயலலிதா திருமண ஊர்வலத்தில் நடந்துவந்த கோலம், சுமார் 1.50 லட்சம் விருந்தினர்கள் (அந்தக் காலத்தில் திருமணச் செலவு மட்டுமே ரூ. 3 கோடி என்பார்கள்!)...

ஐஏஎஸ் அலுவலர் வி.எஸ். சந்திரலேகா, வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் போன்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஜெயலலிதா பயணங்களின்போதான தீவிரமான கெடுபிடிகள்... என எல்லாமும் ஜெயலலிதாவுக்கு எதிராக வந்து நின்றன.

அதிகார குவிப்பு, கன்னி மரியாள் போன்றெல்லாம் ஜெயலலிதாவுக்கு பிரமாண்டமான கட்அவுட்கள் வைத்த கலாசாரம், அரசு அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகள், சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள், சொத்துக் குவிப்புகள்... சுருக்கமாகச் சொல்லப் போனால் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியும் ‘தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே’ இருந்துவிட்டார் ஜெயலலிதா.

1991-ல் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே அதிமுகவுக்கும் காங்கிரஸுக்குமான உறவு மோசமடையத் தொடங்கி, பரஸ்பர குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, தாம் ஒன்றும் ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை என்றெல்லாமும் ஜெயலலிதா பேசத் தொடங்கிவிட்டார். உறவு கசந்தது.

ஆனால், அதே அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்து,  தேர்தல் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதென – பெரும்பான்மையான தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர்களின் விருப்பத்துக்கு மாறாக - பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான பி.வி. நரசிம்ம ராவ் முடிவு செய்தபோது, அதிருப்தியாளர்கள் அனைவரும் கடைசி நேரத்தில் மாநிலத் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் தலைமையில் காங்கிரஸிலிருந்து வெளியேறி, மார்ச் 29 ஆம் தேதி, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். மே 2 தேர்தல், ஒரே மாதம். திமுகவுடன் த.மா.க. கூட்டணி அமைத்தது. அரசுக்கு எதிரான அதிருப்தியின் பலனை அப்படியே முழுமையாக அறுவடை செய்தது.

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டைக் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது’ என்று திமுக – த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவாகக் கொடுத்த வாய்ஸும் இந்தத் தேர்தலில் பெரும் பங்காற்றியது.

அவர் தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டியொன்றை அளித்தார்:

“ஜெயலலிதா மிகப் பெரிய அளவுக்குப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தார். தவறு செய்தார். அதனால், அதேபோல, அவரை முழுமையாகக் கீழ இறக்கிவிட்டோம் என்ற மனநிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும். பதவிக்கு வருபவர்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்ற நிலை வர வேண்டும்… கடவுள் மக்கள் ரூபத்தில் உள்ளார். தயவுசெய்து நீங்கள் எடுக்கிற முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும். வாழ்க தமிழ்நாட்டு மக்கள்...” என்று நேர்காணலை முடித்தார்.

வாக்குப் பதிவுக்கு சில நாள்கள் முன் கோபாலபுரம் இல்லம் சென்று மு. கருணாநிதியைச் சந்தித்து அவர் கால்களைத் தொட்டு ஆசி பெற்றதுடன், ‘முதலிலேயே வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன். இப்போதும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அடுத்து கோட்டையில் பார்க்கப் போகிறேன் என்று சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை’ என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

ஆனால், “ஜனநாயக தீய சக்திகளுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்து நிரந்தர சூடு போட வேண்டும்... இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் பாரதப் போர். கருணாநிதி எந்தக் கொள்கையுமின்றி அதர்மத்தின் பக்கம் நிற்கிறார். அவருக்கா உங்கள் ஓட்டு? ஒரு பெண்மணி பொது சேவையில் ஈடுபடக் கூடாதா? ... ஆயிரம் வியூகம் அமைத்தாலும் உஙகள் உள்ளத்தில் இருக்கும் என்னை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” என்றெல்லாம் பிரசாரங்களில் அனல் பரப்பினார் முதல்வர் ஜெயலலிதா.

“தமிழ்நாட்டில் பெண் ஆட்சி நடைபெறவில்லை, பேய் ஆட்சிதான் நடைபெறுகிறது. அந்தப் பேயை விரட்ட உடுக்கடிக்கும் பூசாரியாக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே, பேயை விரட்டுவதற்கான முயற்சியை வாக்காளர்களாகிய நீங்கள்தான் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் த.மா.கா. தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசியபோது, “தமிழகத்தில் குக்கிராமங்கள்  தொடங்கிக் கோட்டை வரையில் ஊழல் பரவியுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கும் அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களுக்குச் சரியான முறையில் சென்றடைவதற்கும் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்; திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மூப்பனாரைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஜெயலலிதா அவதூறாகப் பேசும் பேச்சுகள் (எல்லாம்), தேர்தல் தோல்வி பயம் காரணமாக அவருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி, ஆத்திரத்தின் எதிரொலியே” என்று குறிப்பிட்டார் கருணாநிதி.  

மேலும், பேரவைத் தேர்தலில் திமுக 130 முதல் 140 தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 30 முதல் 35 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் 7 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கருணாநிதி தெரிவித்தார். ஆனால், அவர் நினைத்தைவிட, எதிர்பார்த்ததைவிட, கணித்ததைவிட கூடுதலான  தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக – தமாகா கூட்டணி.

தேர்தலில் நான்கு அணிகளாக அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. பாரதிய ஜனதா கட்சி தனியே போட்டியிட்டது.

1996, மே 2 – வாக்குப் பதிவு – தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து, அதிகளவிலான வாக்குகள் 67.16 சதவிகிதம் பதிவாகின (1984-ல் 72.98%). மே 8 – வாக்கு எண்ணிக்கை.

அதிமுக – காங்கிரஸ் கூட்டணி: ஐந்தாண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டாலும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வென்றது. ராசிபுரம் பி.ஆர். சுந்தரம், அறந்தாங்கி சு. திருநாவுக்கரசு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர். தாமரைக்கனி, சங்கரன்கோவில் சி. கருப்பசாமி ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றவர்கள். முந்தைய தேர்தலில் காங்கேயம், பர்கூர் என இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர்  ஜெயலலிதா, இந்த முறை பர்கூரிலேயே தோற்றுவிட்டார். கூடவே, 64 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் அத்தனையிலும் தோற்றது.

1989-ல் அதிமுகவே இரண்டாக உடைந்து, சேவல் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 27 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவால் ஒன்றிணைந்த அதிமுகவும் இரட்டை இலைச் சின்னமும் இணைந்திருந்தபோதிலும் 4 இடங்களைத்தான் பெற முடிந்தது.

திமுக – தமாகா கூட்டணி: திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டு 173 தொகுதிகளில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் (ஒசூர் தொகுதியில் மட்டும் ஜனதா தளத்தின் பி. வெங்கடசாமியிடம் தமாகாவின் டி. வெங்கடரெட்டி தோற்றார்)  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11-ல் போட்டியிட்டு 8 தொகுதிகளிலும் அ.இ.பா.பி. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பாட்டாளி மக்கள் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி, பென்னாகரம் ஜி.கே. மணி, ஆண்டிமடம் தீரன், தாரமங்கலம் பி. கோவிந்தன், எடப்பாடி கணேசன் ஆகியோர் வென்றவர்கள். இவர்களுடன் கூட்டணி சேர்ந்திருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்தி, ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரின் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) 46-ல் போட்டியிட்டு எங்கேயும் வெற்றி பெறவில்லை.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ என்ற வை. கோபால்சாமி புதிதாகத்  தொடங்கியிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் ஜனதா தளமும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. 177 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட மதிமுக வெற்றி பெறவில்லை. அதிக அளவாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனதா தளமும் முறையே 40, 15 தொகுதிகளில் போட்டியிட்டுத் தலா ஒவ்வோரிடத்தில் வெற்றி பெற்றன (விளவங்கோடு டி. மணி, ஒசூர் பி. வெங்கடசாமி).

பாரதிய ஜனதா கட்சி ஏறத்தாழ 143 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் (முதல்முறையாக) கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் சி. வேலாயுதன் வெற்றி பெற்றார்.

(மக்களவைக்கும் சேர்த்து நடந்த இந்தத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக – தமாகா கூட்டணியே வெற்றி பெற்றது. தமாகா – 20, திமுக – 17, இந்திய கம்யூ - 2).

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயிகளின் போராட்ட உத்தியாக 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், வாக்குச்சீட்டு அச்சிடுவதில் தொடங்கி ஏராளமான குழப்பங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தன் அரசியல் வாழ்வில் பேரிழப்புக்கு ஆளானவர், எளிதில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்க வேண்டிய திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்தான்.

அதிமுகவும் பாமகவும் தலா 4 தொகுதிகளை மட்டுமே வென்று பேரவையிலும் 4-வது இடத்தைப் பெற்றன. ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த (புதிய தமிழகம்) டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆலங்குடியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அ. வெங்கடாசலம் வென்றார்.

வெற்றிச் செய்திகள் வந்துகுவியத் தொடங்கிய நிலையில், மே 8 இரவு அறிவாலயத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியைத் தமாகா தலைவர் கருப்பையா மூப்பனார் வந்து சந்தித்தார். செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி, ‘இது ஒரு கட்சியின் வெற்றி அல்ல, ஓர் அணியின் வெற்றி அல்ல, மக்களின் வெற்றி. தமிழக மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி. மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் மக்கள் குரலே மகேசன் குரல் என்று அண்ணா அடிக்கடி சொல்வது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது... சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரைப் பல நாள் ஏமாற்றலாம். எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போதுதான், ‘பத்திரிகையாளர்களைப் பார்ப்பது என்பது நாள்தோறும் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதைப் போன்றது என்பதை நான் உணர்ந்தவன்’ என்று குறிப்பிட்டார் கருணாநிதி (கண்ணாடியில் பார்க்க விரும்பாதவர்கள் கவனத்துக்கு!).

“வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியால் நிலை தடுமாறிப் போவதும் தோல்வியைக் கண்டு துவண்டுபோவதும் அதிமுகவின் பழக்கம் அல்ல... மக்கள் தீர்ப்பை மனமுவந்து, தலைவணங்கி ஏற்கிறோம்... அஇஅதிமுக, என்றென்றைக்கும் மக்களின் தீர்ப்பையே மகேசன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற ஒரு மக்கள் நற்பணி இயக்கம்...” என்று ஃபேக்ஸ் மூலம் அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா (பின்னர், சில நாள்களிலேயே தேர்தல் ஆணையர் டி.என். சேஷனும் திமுக – தமாகா தலைவர்களும் சதி செய்து வெற்றி பெற்றுவிட்டனர் என்றும் கருத்துத் தெரிவித்தார்).

1996 மே 13 – ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. ஆளுநர் சென்னாரெட்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

க. அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, நாஞ்சில் மனோகரன், கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, தமிழ்க்குடிமகன், கே.என். நேரு, கே. சுந்தரம், ரகுமான்கான், ஆலடி அருணா, வி. தங்கப்பாண்டியன், என்.கே.கே. பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிசாமி, கு. பிச்சாண்டி, ஐ. பெரியசாமி, வி. முல்லைவேந்தன், புலவர் செங்குட்டுவன், எஸ்.பி. சற்குணபாண்டியன், சமயநல்லூர் செல்வராஜ், சுரேஷ்ராஜன், அந்தியூர் செல்வராஜ், ஜெனிபர் சந்திரன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

விழாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமாகா தலைவர் கருப்பையா மூப்பனார், ப. சிதம்பரம், ஆர்.எம். வீரப்பன், நடிகர்கள் நாகேஷ், ஜெய்சங்கர், சரத்குமார், விஜய்காந்த், நெப்போலியன், நிழல்கள் ரவி ஆகியோரும் வந்திருந்தனர்.

முதல்வர் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய மு. கருணாநிதி, ‘அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா விஷயத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இருக்காது. சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் அமையும்’ என்று தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் மாலையில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டத்தில், ‘நானோ, அமைச்சர்களோ, பேரவை உறுப்பினர்களோ, திமுகவினரோ தவறு செய்தால் தட்டிக் கேளுங்கள். தயவுசெய்து தட்டிக் கொடுக்காதீர்கள்’ என்றும்  கேட்டுக்கொண்டார் முதல்வர் மு. கருணாநிதி.

இந்த முறை பெற்ற வெற்றியின் மூலம், முதல் முறையாக, ஆட்சிக்காலமான ஐந்தாண்டுகள் முழுவதும் முதல்வராக இருந்தார் மு. கருணாநிதி. ஆனால், 2001-ல் நடந்த அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில்?

[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]

Summary

Memories of the 1996 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.