நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!எந்தக் குழந்தைகளை வைத்து வாக்கு சேகரித்தீர்களோ, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! - இபிஎஸ்கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசை
/

50% வாக்குகள்கூட பெறாமல் ஆளும் கட்சிகள்! இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் தேவை!

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறைகள் மற்றும் அதில் மாற்றங்களை வலியுறுத்துவது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :28 மே 2026, 5:06 pm IST

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை மாற்றுவதற்கான அவசியம் வெகுகாலம் முன்பே நம்முன் வந்து நிற்கிறது.

நாடு 1951-52 முதல் 2026 வரையான 75 ஆண்டு காலத்திற்குள் 19 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களை (கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை மாநிலங்களின் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களையும்) சந்தித்தாகிவிட்டது. விடுதலை பெற்ற இந்தியாவில், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் ‘மக்களிடம் பெரும்பான்மையாக வாக்குகள் பெற்ற கட்சி -  அதாவது குறைந்தது 50 சதவீதத்திற்கு மேல் மக்களது வாக்குகளைப் பெற்ற எந்தக் கட்சியும் - ஆட்சிக்கு வந்ததே இல்லை. உண்மையான மக்களாட்சியில் அனைவரும் சமம்; அனைவரது வாக்குகளும் சமம். பெரும்பான்மை மக்களது (50% அல்லது கூடுதலாக) வாக்குப் பெறுபவர்களே ஆள்வதற்கான அருகதையைப் பெறவேண்டும். ஆனால், இந்தக் கோட்பாடும் நடைமுறையும் தற்போதைய நமது தேர்தல் முறையில் ஒருபோதும் எதிரொலிக்கவேயில்லை. 

‘மக்களின் வாக்கு’ என்பது முதல் தேர்தலில் இருந்தே ‘மதிப்பிழப்பு’ அடைந்துவிட்டது. மாறாக, சட்டமன்ற / நாடாளுமன்றத் தேர்தல்களில், ஒவ்வொரு தொகுதியிலும் மக்களது வாக்குகள் மூலம் உண்மையான பெரும்பான்மை (அதாவது 50 சதவீதம் அல்லது அதற்கு மேல்) பெறாமலே - அந்தந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் சுமார் 30 முதல் 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் வேட்பாளர்கூட - தேர்வு பெற்று விடுகிறார் என்பது கசக்கும் உண்மையன்றோ? திரைமறைவுக் காய்நகர்த்தல்கள் மூலம் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றி; ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பதெல்லாம் நடக்கும் தற்போதைய தேர்தல் முறையில் உருவாவதா உண்மையான மக்களாட்சி?  இதுவா, உண்மையான மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி? இல்லையே!

நமது தற்போதைய தேர்தல் நடைமுறை, அரதப் பழசான ஆங்கிலோ - அமெரிக்க எஃப்பிடிபி (FPTP- First-past-the-post electoral system) தேர்தல் முறையாகும். எஃப்பிடிபி என்பது, பந்தயத்தில் எந்தக் குதிரை முதலில் எல்லைக் கம்பத்தைத் தாண்டுகிறதோ அந்தக் குதிரை - அடுத்து வரும் குதிரை ஒரு மெல்லிய "நூலளவு இடைவெளி” யில் (Just a ‘hair breadth’) இருந்தாலும்கூட - வெற்றி பெறுகிறது என்ற அடிப்படையில் அமைந்திருப்பதாகும்.

இதனால் ஒரு கட்சி, நாடு முழுவதும் (அல்லது மாநிலம் முழுவதும்) பெரும்பான்மை மக்கள் வாக்குகளை வெல்லாமலேயே சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ அதிக அல்லது பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியமைத்துவிட முடியும்   (தற்போதைய (2026) தமிழக ஆட்சி இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு).

கடந்த 75 ஆண்டுகளில் - 1951-52 முதலே அனைத்துத் தேர்தல்களிலும் பெரும்பான்மை மக்களது வாக்குகள் பெறாத கட்சிகளே ஆண்டு வந்துள்ள அனுபவங்களைப் பெற்ற பின்னரும், பெற்ற அனுபவங்களிலிருந்து எந்தப் பாடங்களும் கற்கவில்லை. 1951-52 முதல் தேர்தல் நடைமுறைகளில்  குறிப்பிட உரிய எந்தச் சீர்திருத்தமோ, மாற்றமோ செய்யாமல் ‘தேய்புரிப் பழங்கயிறா’கிவிட்ட எஃப்பிடிபி தேர்தல் நடைமுறையையே இன்னும் நாம் கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவலம். 

நாடாளுமன்றத் தேர்தல்கள்

காகித வாக்குச்சீட்டு (Ballot Paper) பயன்படுத்தப்பட்ட, 44.9 சதவீதம் வாக்காளப் பெருமக்களே வாக்களித்த, நமது நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் (1951-52) ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் 489 இடங்களில் 364 இடங்களை வென்றது. ஆனால் வெற்றி பெற்ற காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 45% மட்டுமே. பெரும்பான்மை நாடாளுமன்ற இடங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்கு (50%+) கிடைக்கவில்லை

அடுத்து நடைபெற்ற 1957 பொதுத் தேர்தலிலும் நேரு தலைமையிலான காங்கிரஸ், நாடாளுமன்ற இடங்கள் 494-இல் 371-ஐக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் 47.8% வாக்குகளையே (50% க்குக் குறைவுதான்!) பெற்றது. வாக்குப்பதிவு சதவீதமும் 45.4 தான். 

மூன்றாவதாக 1962 பொதுத் தேர்தலிலும் நேரு தலைமையிலான காங்கிரஸ் நாடாளுமன்ற இடங்கள் 494 இல் 361-ஐப் பெற்று ஆட்சியிலமர்ந்தது. ஆனாலும், பெற்ற வாக்குகள் சதவீதம் (50%க்கும் குறைவான) 44.7% மட்டுமே. வாக்குப்பதிவு விகிதம்: 55.4%.

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், நான்காவதாக 1967 பொதுத் தேர்தலில் 520 நாடாளுமன்றத் தொகுதிகளில் 283-ஐ வென்றது. ஆயினும், பெற்ற வாக்குகள் சதவீதம் 40.8. (50%க் கீழ்தான்) வாக்களிப்பு விகிதம்: 61%. தொடர்ந்து 1971 பொதுத் தேர்தலிலும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 518 தொகுதிகளில் 352-ல் வெற்றி. பெற்றபோதும் கிடைத்த வாக்குகள் சதவீதம் என்னவோ (50%க்கீழ்): 43.7%. வாக்குப்பதிவு விகிதம்: 60.5% 

1975 அவசரநிலைக்குப் பின் காட்சி மாறிய ஆறாவது 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து, ஜனதா கட்சி, தேசிய தேர்தலில் முதல்முறையாக 542 இடங்களில் 295இல் வெற்றிபெற்றது. அப்போதும் வெற்றியாளரின் வாக்கு சதவீதம்: 50%க் கீழ் 41.3% தான்.  இரண்டாவது பெரிய கட்சியாக, காங்கிரஸ் 34.5% வாக்குகளுடன் 154 இடங்களைப் பெற்றது. வாக்குப்பதிவு விகிதம் 60.5%.

அடுத்த மூன்றாண்டுகளிலேயே நடைபெற்ற ஏழாவது 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், 529 தொகுதிகளில் 353ஐக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் பெற்ற வாக்கு சதவீதம் 50%க்கீழ் 42.7% தான். வாக்குப்பதிவு விகிதம் 56.9%. 

இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற எட்டாவது 1984 பொதுத் தேர்தலில், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 514 தொகுதிகளில் 404 இடங்களில் வெற்றி பெற்றது. சுதந்திர இந்தியாவில் எந்தவொரு அரசாங்கமும் பெற்ற மிகப் பெரிய அளவு இடங்களைப் பெற்றிருந்த இந்த ஒருதேர்தலில்தான், வெற்றி பெற்ற காங்கிரஸ்  49.1% வாக்குகளைப் பெற்றது (ஆனாலும், அதுவும் 50%க்குச் சற்று குறைவாகவே இருந்தது) வாக்குப்பதிவு விகிதம் 63.6%. 

ஒன்பதாவது 1989 பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ், பெரிய கட்சியாக (529 இடங்களில் 197; வாக்கு சதவீதம்: 39.5) வந்தபோதும் ஜனதா தளம் (143) மற்றும் பாஜக (85) தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியை இழுத்துச் சேர்த்து ஆட்சிக்கு வந்தன. வாக்குப்பதிவு விகிதம்: 61.9%. 

அடுத்த இரண்டாண்டுகளிலேயே 1991இல் நடைபெற்ற பத்தாவது பொதுத் தேர்தலில்  மிகப் பெரிய கட்சியாக பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் 521 தொகுதிகளில் 232ஐப் பெற்றது. பெற்ற வாக்கு சதவீதம்: 36.3 மட்டுமே. வாக்குப்பதிவு விகிதம்: 56.7%.

பதினொன்றாவது 1996 பொதுத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. பெரிய கட்சியாக அடல் பிஹாரி வாஜபேயி தலைமையிலான பாஜக 543 இடங்களில் 161 இடங்களையேப் பெற்றிருந்தது. பெற்ற வாக்கு சதவீதம் 20.3. இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் 140 இடங்களுடன் இருந்தது. வாக்குப்பதிவு விகிதம்: 57.9%. 

இரண்டாண்டுகளில் 1998இல் நடைபெற்ற பன்னிரண்டாவது பொதுத் தேர்தலிலும்  எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் 1998 மே மாதம் வாக்குப்பதிவு முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய கட்சியான வாஜபேயி தலைமையிலான பாஜக (543 இல் 182 இடங்கள்; பெற்ற வாக்கு சதவீதம்: 25.6 மட்டுமே) தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ.) உருவாக்கியது. இரண்டாவது பெரிய கட்சியாகக் காங்கிரஸ் 141 இடங்கள் பெற்றிருந்தது. இதுவரை முழுவதும் காகித வாக்குச்சீட்டு பயன்படுத்திவந்த நிலையில் சற்று மாறி, சோதனை அடிப்படையில், 16 இடங்களுக்கு மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், மீதமுள்ளவற்றுக்கு காகித வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு விகிதம்: 62%.

அடுத்த, பதின்மூன்றாவது 1999 பொதுத் தேர்தலில் வாஜபேயி தலைமையிலான பாஜக, 543 இடங்களில் 182 இடங்களை, 23.8  சதவீத வாக்குகள் பெற்றது. இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ், 114 இடங்கள் பெற்றிருந்தது. இத்தேர்தலில், 46 இடங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மீதமுள்ளவற்றுக்கு காகித வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு விகிதம் 60% ஆக இருந்தது.

பதினான்காவது பொதுத் தேர்தலில் (2004)  மிகப்பெரிய கட்சியாக (பெற்ற இடங்கள்: 543 இல் 145; வாக்கு சதவீதம்: 26.5) சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் வந்தது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) உருவாக்கப்பட்டது. இரண்டாவது பெரிய கட்சி, பாஜக 138 இடங்கள் பெற்றிருந்தது. முதன்முதலாக அனைத்து இடங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இந்தத் தேர்தலில்  வாக்குப்பதிவு விகிதம்: 58.1%.  

பதினைந்தாவது பொதுத் தேர்தலில் (2009)  மிகப்பெரிய கட்சியாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் 543 தொகுதிகளில் 206இல் வெற்றி பெற்றது. பெற்ற வாக்கு சதவீதம் 28.6% மட்டுமே. அனைத்து இடங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இத்தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம்: 58.2%.

2014இல் நடைபெற்ற பதினாறாவது பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 543 தொகுதிகளில் 282இல் வெற்றி பெற்றது. ஆனாலும், பெற்ற வாக்கு சதவீதம் என்னவோ 31.3% மட்டுமே. அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இத்தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் 66.4%. பதினேழாவது 2019 பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 543 இடங்களில் 303 இல் வெற்றி பெற்றது. அப்போதும் பெற்ற வாக்கு சதவீதம் 50%க்குக் குறைவு; 38.0% தான், 67% வாக்குப்பதிவு.

பதினெட்டாவது 2024 பொதுத் தேர்தலில், பாஜக 2019 இல் பெற்றிருந்த  303 இடங்களில் இருந்து சரிந்து 240 இடங்களையே வென்றது, அதன் கூட்டணி (என்.டி.ஏ.) பலத்தோடுதான் ஆட்சியமைக்க முடிந்தது. ஆளுங்கட்சி (பா.ஜ.க.) பெற்ற வாக்கு சதவீதமோ 36.56%தான்.

ஆக, இதுவரையிலும் (1951-2024) நடைபெற்றுள்ள நாடாளுமன்றத்திற்கான 18 பொதுத் தேர்தல்களிலும் 50 சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு பெற்ற கட்சிகளே ஆட்சி புரிந்து வந்துள்ளன; ஆட்சி புரிந்து வருகின்றன. (மாநிலங்களிலும் இதே நிலைதான். விரிப்பின் கட்டுரை நீளும்).

நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள தேர்தல் முறையில்-  எஃப்பிடிபி (First-past-the-post’ electoral system) நம் நாட்டில் "பெரும்பான்மை அரசாங்கம்" என்ற சொல் சட்டமன்ற /நாடாளுமன்ற பலத்தையே குறிக்கிறது; மக்கள் வாக்கு பலத்தை அல்ல. மக்கள் வாக்கு பலத்தை மதிப்பிற்கொள்ளாத  இம்முறையை முதலிரண்டு பொதுத் தேர்தல்களில் பெற்ற பாடங்களிலிருந்தே திருந்திச் சரியான மக்களாட்சி முறைக்கு நாடு மாறியிருக்க வேண்டும். 

எந்தவொரு வேட்பாளரும் அல்லது கட்சியும் முழுமையான பெரும்பான்மை மக்கள் வாக்குகளைப் பெறாவிட்டால் பதவியேற்க முடியாது என்பதை உறுதி செய்து அரசாங்கம் அமைவதற்கு 50% அல்லது அதற்கதிகமான மக்கள் வாக்குகள் தேவைப்படும் நாடுகள் (பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, போலந்து, ருமேனியா மற்றும் லத்தீன்- அமெரிக்க பிரேசில், ஆர்ஜென்டினா, சிலி அரசுகள்) உள்ளன. அத்தகைய நாடுகள் பெரும்பாலும் அதிபர் முதன்மையாகக் கொண்ட (Presidential Form of Government) அரசுகளாகும். 

அடிப்படையில், மக்கள் வாக்குப் பெரும்பான்மை என்பதன் மூலம் அரசுகளின் சட்டப்பூர்வத்தன்மை (Legitimacy) பெரும்பான்மை வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் (Representative of the Majority) என்ற இரு முக்கியக் கோட்பாடுகள்   உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் தொடர்ந்து ‘மிகப் பெரிய சிறுபான்மை வாக்கு’ப் பெற்றவர்களுக்கே மகுடம் அளித்து வருகிறோம். 

ஆஸ்திரேலியாவின் தேர்தல் முறை எடுத்துக்காட்டு தனித்துவமானது; ஆகவே, கவனத்திற்குரியதாகிறது. அந்நாட்டில் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல், ‘முன்னுரிமை வாக்களிப்பு’ (Preferential Vote) அல்லது மாற்று வாக்கு அடிப்படையில்  நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியும் ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கிறது; வெற்றி பெறுபவர் 50% அல்லது அதற்கு மேல் மக்கள் வாக்குகளைப் பெற்றாக வேண்டும். வாக்குச்சீட்டில் வெளிப்படுத்தப்படும் மக்கள் விருப்பங்களை (Preferences) மறுபகிர்வு செய்யும் முறை (transferring the preferences of the voters, expressed in the ballot) நடைமுறையிலுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் முன்னுரிமை வாக்களிப்பு முறை ஒவ்வொரு எம்.பி.யும் தமது தொகுதியில் பெரும்பான்மை மக்கள் (வாக்கு) ஆதரவைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. வாக்களிப்பதும் கட்டாயம்தான். வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களையும் தன் விருப்ப அடிப்படையில் வாக்குச்சீட்டில் வரிசைப்படுத்த வேண்டும். எந்தவொரு வேட்பாளரும் முதல் விருப்ப வாக்குகளில் 50%க்கு மேல் பெறவில்லை என்றால், மிகக் குறைந்த வாக்குகளைக் கொண்ட வேட்பாளர் அடுத்த சுற்றில் நீக்கப்படுகிறார், நீக்கப்படும் வேட்பாளரது வாக்குகள் இரண்டாவது மற்றும் தொடர் விருப்பங்களுக்கு ஏற்ப, உரிய பிற வேட்பாளர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையைப் (50% அல்லது அதற்குமேல்) பெறும் வரை இது தொடர்கிறது. 

ஆஸ்திரேலியாவின் விருப்ப வாக்கு ((Preferential Vote) முறையில் சில குறைபாடுகள் உணரப்பட்டுள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொரு வேட்பாளரையும் ‘விருப்ப வரிசை’ப்படுத்த வேண்டும். தவறுகளோ, தவிர்க்கப்பட்ட எண்களோ இருந்தால்  வாக்குச்சீட்டுகள் செல்லாததாகும். வாக்குச்சீட்டுகள் வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நீண்டதாகிவிடும். விருப்ப வரிசையில் ஆதரிக்க விரும்பாத வேட்பாளர்களையும் ஏதோ ஓரிடத்தில் வாக்காளர் குறிப்பிட வேண்டியுள்ளது. இம்முறையில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும். ஜனநாயகம் எளிதாக இருக்க வேண்டுமா, அல்லது  நியாயமாக இருக்க வேண்டுமா? எனும் கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பலகாலமாக ‘மக்களிடமிருந்து பெரும்பான்மை’  என்பது புறக்கணிக்கப்பட்டு சட்டமன்றத்தில் / நாடாளுமன்றத்தில் எத்தனை இடம் என்பதே முதன்மையாகியுள்ளது. வெற்றி பெற, போட்டியிலுள்ள வேறு வேட்பாளர்களைவிட அதிக வாக்கு மட்டுமே தேவைப்படுகிறது; மக்கள் வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை அல்ல.  உண்மையான மக்களாட்சி என்பது மிகக் குறைந்தது 50 சதவீத மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் ஆதரிக்கப்படும் கட்சியின் ஆட்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பெறும் இடங்களின் அடிப்படையில் நமது ஜனநாயகம் செயல்படுவதால் உண்மையான ஜனநாயகம் நடைமெலிந்து நிற்கிறது. மக்களாட்சியைக் கொச்சைப்படுத்திக் கேவலமாக்கும் கட்சித் தாவல்களும், அடிக்கடி நிகழும் அணிபிறழல்களும்,  ‘குதிரை வேகத்தில் குதிரை பேரங்களும்’ அரசியலில் சர்வ சகஜமாகிவிட்டது. 

தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களின் உண்மையான விருப்பத்தை எதிரொலிக்கிறார்கள் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் ஜனநாயகம் அமர்ந்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் குறைந்தது 50% வாக்குகளைப் பெற வேண்டும் என்ற தேவை வெறுமனே ஒரு நடைமுறை சீர்திருத்தம் அல்ல - அது ஒரு ஜனநாயகக் கட்டாயமாகும். மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், சட்டமன்றங்கள்/ நாடாளுமன்றங்களின் சட்டப்பூர்வமான தன்மையும் வலுப்படுகிறது. 

மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் அமைவதற்கு தேர்தல் முறையில் உடனடியாக மாற்றங்கள், சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் மிகக் குறைந்தது 50 சதவீதத்திற்கு மேல் மக்களிடமிருந்து வாக்கு பெறுபவர்களே வெற்றி பெறுபவர்கள் என்று உறுதி செய்யும் முறை நடைமுறையாக வேண்டும். 

ஆஸ்திரேலியாவில்  1918 முதல் தொடர்ந்து நடைமுறையிலிருந்து வரும் பிரதிநிதிகள் சபை தேர்தல்  ஒரு திடமான முன்னுதாரணத்தை வழங்குகிறது (அயர்லாந்து மற்றும் மால்டா நாடுகளும்கூட விகிதாசார மாற்று முறைகளைக் கொண்டுள்ளன).

ஆஸ்திரேலிய வகைத் தேர்தல் முறையை – அதிலுணரப்படும் குறைகளைக் களைந்து நமது நாட்டிற்கேற்பச் சீராக்கி -   விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய முறையை நடைமுறைப்படுத்துமுன் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வும் தேர்தல் முறை அறிவும் தொடர் பயிற்சியாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் உணரப்படும் குறைகள், சிக்கல்கள் களைந்துவரப்பட வேண்டும்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Changes are needed in Indian electoral procedures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.