/

தேர்தல் 1989: 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் கருணாநிதி!

1989 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

News image

முதல்வர் மு. கருணாநிதிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் பி.சி. அலெக்சாந்தர் - தினமணி கருவூலத்திலிருந்து...

Updated On :10 ஏப்ரல் 2026, 11:30 am

பக்கவாதம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபடியே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்.,  மூன்றரை ஆண்டுகளில், 1987 டிச. 24 அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திடீரென தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இடைக்கால முதல்வராக இரா. நெடுஞ்செழியன் பதவியேற்றார் (அண்ணா மறைந்தபோதும் இவரே இடைக்கால முதல்வர்).

எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி தலைமையிலும் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்த ஜெயலலிதா தலைமையிலுமாக அதிமுக இரண்டாக உடைந்தது. ஏற்கெனவே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இவ்விருவருக்கும், இவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே பகை நிலவியது (எம்ஜிஆருக்கு உடல்நலம் சரியில்லாததால் தம்மை அங்கீகரிக்கும்படி ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாகவும் எம்ஜிஆருக்குத் தெரியவந்து முறியடித்ததாகவும் கூறுவார்கள் – எம்ஜிஆர் இறுதி ஊர்வல கவச வாகனத்திலிருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டதெல்லாமும் நடந்தது).

அடுத்து யார் முதல்வர்? என்ற விவாதத்தில் கட்சித் தலைவர்கள் இறங்கினர். எம்ஜிஆரின் மனைவியான வி.என். ஜானகி பதவியேற்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆலோசனைகள் எல்லாமும் நடைபெற்றன. ஜெயலலிதாவின் வீட்டிலும் ஆலோசனைகள் நடைபெற்றன. ஜானகியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம், திருநாவுக்கரசு ஆகியோர் செல்லவில்லை. முதல்வர் பதவிக்குத் தாமும் போட்டியிடப் போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தார். நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆதரவாளர்கள் செயல்பட்டனர். இதனிடையே, அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கட்சியின் தலைமை நிலையச் செயலர் செ. அரங்கநாயகம் அறிவித்தார்.

1988, ஜன. 2 ஆம் தேதி ஒருபுறம் வீரப்பன் குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக (முதல்வராக) வி.என். ஜானகி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னொரிடத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. இதே கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக (முதல்வராக) நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு தரப்பும் ஆளுநரிடம் கடிதங்களை அளித்தன. பரிசீலனைக்குப் பின், முதல்வர் பதவியேற்க ஜானகிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் குரானா.

முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் அமைச்சரவை, ஆளுநர் குரானாவுடன்...

முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் அமைச்சரவை, ஆளுநர் குரானாவுடன்... - தினமணி கருவூலத்திலிருந்து...

எம்ஜிஆர் மறைந்த ஒரு வாரத்தில், 1988, ஜன. 7 ஆம் தேதி, முதல்வராக வி.என். ஜானகி பதவியேற்றார். ஆர்.எம். வீரப்பன், ப.உ. சண்முகம், ராமசாமி, முத்துசாமி, வி.வி. சுவாமிநாதன், பொன்னையன், அருணாசலம் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இன்னொரு பக்கம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்களைச் சந்திப்பதற்காக ஜெயலலிதா சுற்றுப்பயணம் தொடங்கினார்.

ஜானகி முதல்வராகப் பதவியேற்ற பின், ஜன. 25 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் குரானா உரையாற்றினார். ஆனால், ஜெயலலிதா ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.

ஜன. 28 – நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் கலவரத்தில் முடிந்தது. சட்டப்பேரவையிலேயே அமளி, போலீஸ் தடியடி, 50 எம்.எல்.ஏ.க்கள் வரை காயமுற்றனர். மூன்று அமர்வுகளாக ஒத்திவைக்கப்பட்டுக் கூட்டம் நடந்தது. 110 பேர் மட்டுமே வந்தனர். ஜானகி அரசுக்கு நம்பிக்கை தெரிவித்து 99 வாக்குகளே கிடைத்தன. முதல் பக்கத்திலேயே, ‘தமிழகம் தலைகுனிந்தது’ எனத் தலையங்கம் எழுதியிருந்தது தினமணி.

ஜன. 30 - முதல்வர் ஜானகி தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. விரைவில் தேர்தல் நடத்த விரும்புவதாகப் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருந்தது ஜானகியின் அரசு – 24 நாள்கள்.

ஏறத்தாழ ஓராண்டு தொடர்ந்த குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு 1989, ஜனவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே, அதிமுகவில் நிலவிய கோஷ்டித் தகராறு காரணமாக 1988 இறுதியில், எம்ஜிஆர் காலம் முழுவதும் வெற்றியைத் தந்த, இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது.

ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று அதிமுக உடைந்துவிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் நான்கு அணிகளாக அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

198 தொகுதிகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் இந்திய கம்யூ. 13 தொகுதிகளிலும் ஜனதா கட்சி (பொன். விஜயராகவன்) 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இரட்டைப் புறா சின்னத்தில் 177 தொகுதிகளில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அதிமுக கூட்டணியில் - காங்கிரஸிலிருந்து விலகி நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி 49 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தனித்து ஜி. கருப்பையா மூப்பனார் தலைமையில் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (சமது) 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

அகில இந்திய அளவில் தேசிய முன்னணியில் இடம் பெற்றிருந்த திமுக, 202 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிய கம்யூ. 21 தொகுதிகளிலும் ஜனதா தளம் 10 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தேர்தலில் முதன்முதலாக ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியிலும் ஜானகி ராமச்சந்திரன் ஆண்டிபட்டி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், பாபனாசம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில்தான் தேர்தல் என்றாலும், அதிமுக உடைந்து வலுவிழந்துவிட்ட நிலையில், இ. காங்கிரஸுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்பட்டது.

தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்ய 11 முறை (14 முறை என்றார் கருணாநிதி) தமிழ்நாட்டுக்கு வந்தார் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி. திமுகவுக்கு ஆதரவாக தேசிய முன்னணித் தலைவர்கள் வி.பி. சிங், அஜீத் சிங், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் ஜேத் மலானி, கேரள முதல்வர் இ.கே. நாயனார், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ஹரியாணா முதல்வர் தேவிலால், கர்நாடக முதல்வர் பொம்மை ஆகியோர் பிரசாரம் செய்ய வந்தனர். இ. காங்கிரஸுக்கு ஆதரவாக காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பிரசாரம் செய்தார்.

நாமக்கல்லில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இ. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி; இதர கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன என்று குறிப்பிட்ட ராஜீவ் காந்தி, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதை நன்றாக ஆலோசித்து முடிவு செய்யுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து பணம் பறிக்க அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தினர். காமராஜர், ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோரின் ஆட்சியின்போது ஏற்பட்ட நன்மைகளை திமுக ஆட்சி பயனற்றுப் போகச் செய்தது என்றும் குறிப்பிட்டார் ராஜீவ்.

நாமக்கல் கவிஞரின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் நாமக்கல்லில் இருப்பதற்காக மகிழ்ச்சி தெரிவித்த ராஜீவ் காந்தி, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற கவிஞரின் வரிகளையும் நினைவுகூர்ந்தார்.

மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், ஆலந்தூர் தொகுதி இ. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தபோது, கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை, கடந்த ஓராண்டு காலத்தில் ஆளுநர் ஆட்சியின்போது ஓரளவு மாற்றப்பட்டு வந்துள்ளது என்றும் இதே நிலை தொடர்ந்து நீடித்து தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைய தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டால்தான் முடியும் என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டார்.

ஜெயலலிதா தாம் போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தபோது, தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வாக்குப் பதிவைச் சீர்குலைக்க இ. காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் தாங்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்கச் செய்வதற்காக மத்திய போலீசாரையும் ராணுவத்தினரையும் இ. காங்கிரஸ் கொண்டுவந்து குவிப்பதாகவும் இந்தத் தேர்தலில் தாங்கள் தோல்வியடைவது நிச்சயம் என்று இ. காங்கிரசுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, தேர்தல் பணிகளில் தமிழக போலீசுடன் மத்திய போலீசையும் ராணுவத்திநரையும் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார் ஜெயலலிதா.

திமுக தலைவர் கருணாநிதியைத் தீய சக்தி என வர்ணித்த அவர், கருணாநிதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மக்கள் அனுமதித்துவிடக் கூடாது என்றும் பேசினார்.

வில்லிவாக்கத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக (ஜானகி) அணித் தலைவர் ஜானகி ராமச்சந்திரன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை அப்படியே நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

திமுகவுக்கு ஆதரவாக ஸ்ரீரங்கத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த ஜனதா தளத் தலைவர் வி.பி. சிங், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்; இந்தத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டார். இதே கூட்டத்தில் பேசிய அஜீத் சிங், ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தபோது ‘திருவாளர் பரிசுத்தம்’ என்று குறிப்பிடப்பட்டார், ஆனால், இப்போது ‘திருவாளர் அசுத்தம்’ ஆகிவிட்டார் என்றார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பளிக்குமாறு வாக்காளர்களைத் திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

தான் போட்டியிட்ட துறைமுகம் தொகுதியில் ஆதியப்பன் தெரு – தங்கசாலைத் தெரு சந்திப்பில் நடந்த கூட்டத்தில் பிரசாரத்தை நிறைவுசெய்து பேசினார் அவர்.

“ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் கட்சி அலுவலகமே நடந்துகொண்டிருக்கிறது. மத்திய மந்திரிசபையே சென்னையில் முகாமிட்டிருக்கிறது. பணபலத்தைப் பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆளுநர் மாளிகை இவ்வாறு கட்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

“கடந்த 4 நாள்களாக பிரதமர் ராஜீவ் காந்தி நான் சென்ற ஊர்களுக்கெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்து பிரசாரம் செய்தார். என்னை அவர் பின்பற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். மக்கள் எனக்களிக்கும் ஆதரவு பிரதமரையே அச்சுறுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களாகத் தமிழ்நாட்டின் மீதே பிரதமரின் கவனம் திரும்பியுள்ளது...

“... தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள் என்ற குறிக்கோளை திமுக கைவிடாது. வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தில்லி எஜமானர்கள் சொல்கிறபடிதான் ஆடுவார்கள். திமுக மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் பூகம்பம் வந்துவிடாது. தமிழர்களது வாழ்வு உயரும் என்று கருணாநிதி பேசினார்.

இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஜன. 21, வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 65 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதிகளவாக கோவை, திருச்சி மாவட்டங்களில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ஜன. 22 வாக்குகள் எண்ணப்பட்டன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி!

தேர்தல் நடைபெற்ற 232 தொகுதிகளில் திமுக கூட்டணி 170 தொகுதிகளில் – மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கும் அதிகமாக - வெற்றி பெற்றது. திமுகவுக்கு மட்டும் 147 இடங்கள். மார்க்சிய கம்யூ. – 15, ஜனதா தளம், முஸ்லிம் லீக் (லத்தீப்) – தலா 4.

அதிமுக ஜானகி அணி சார்பில் 177 பேர் போட்டியிட்டனர். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரான பி.எச். பாண்டியன் உள்பட இருவர் மட்டுமே வென்றனர். கட்சித் தலைவரான ஜானகி ராமச்சந்திரன், அவருடைய கணவர் எம்ஜிஆர் வென்ற ஆண்டிபட்டி தொகுதியிலேயே மூன்றாவது இடத்தில்தான் வந்தார்.

அதிமுக (ஜெயலலிதா) 26 தொகுதிகளிலும் அணியிலிருந்த இந்திய கம்யூ. 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

போடியில் வென்ற ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இரண்டு முறை தற்காலிக முதல்வராக இருந்த நெடுஞ்செழியன் மயிலாப்பூரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 596 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி அத்தனையிலும் தோற்றது. திருவையாற்றில் சிவாஜி கணேசனும் தோற்றார்.

காங்கிரஸ் 26 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்திரா காங்கிரஸின் தமிழ் மாநிலத் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார், தனது சொந்தத் தொகுதியான பாபனாசத்தில் 1,092 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றிக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி, பிரதமர் ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளுக்கும் திராவிட இயக்க உணர்வை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அவர் தமிழகத்தில் பேசிய பேச்சுகளுக்கும் எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி, அகில இந்திய அளவில் தேசிய முன்னணியின் வெற்றியாக மலரும் என்று குறிப்பிட்டார்.

1976 ஜன. 31 ஆம் தேதி கலைக்கப்பட்ட திமுக அரசு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு,  மீண்டும் ஆட்சி அமைத்தது. 1989 ஜன. 27 ஆம் தேதி மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றார் மு. கருணாநிதி.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் முதல்வராக கருணாநிதிக்கும் 16 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பி.சி. அலெக்சாந்தர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அன்பழகன், சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், கண்ணப்பன், கே.பி. கந்தசாமி, கோ.சி. மணி, ஆர்க்காடு வீராசாமி, பொன். முத்துராமலிங்கம், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், சுப்புலட்சுமி ஜகதீசன், டாக்டர் ராமகிருஷ்ணன், பொன்முடி எனப்படும் தெய்வசிகாமணி, கே.என். நேரு, டாக்டர் சந்திரசேகரன், தங்கவேல் – அமைச்சர்கள்.

ஆனால், ஐந்தாண்டுகள் தொடரவில்லை திமுகவின் இந்த ஆட்சி. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளில், 1991-ல் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல். ஏன்? இடைப்பட்ட காலத்தில் என்னவெல்லாம் நடந்தன?

[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]

Summary

Memories of the 1989 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.