தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!

1962 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

News image
மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கும் காமராஜர்...- தினமணி கருவூலத்திலிருந்து
Updated On :19 மார்ச் 2026, 4:24 am

எம். பாண்டியராஜன்

1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே, நான்கு கட்டங்களாக, பிப். 17, 19, 21, 24 தேதிகளில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராகத் தனியொரு கட்சியாக நின்று போட்டியைத் தரக் கூடிய நிலையில் எந்தக் கட்சியும் இல்லை. திமுக மட்டும்தான் அதிகளவாக 143 தொகுதிகளில் போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி அனைத்து 206 தொகுதிகளிலும் போட்டியிட்டு, 139 இடங்களில் வெற்றி பெற்றது.

1957-ல் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் 143 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, 50 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியாகத் தடம் பதித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 68 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதே நிலைமைதான் சுதந்திர கட்சிக்கும்.

கொள்கை - கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி, 1959-ல்  சுதந்திர கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. இந்தத் தேர்தலில் 94 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

திமுகவிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற ஈ.வெ.கி. சம்பத், தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கி, 9 தொகுதிகளில் போட்டியிட்டுத் தோற்றார்.

தேர்தலின் முடிவாக, தமிழ்நாட்டின் முதல்வராக மூன்றாவது முறையாக காமராஜர் பதவியேற்றார்.

தமிழ்நாட்டில் சொந்த செல்வாக்கில் காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்த கடைசித் தேர்தலும் இதுதான். 1967 தேர்தலில் கூட்டணிகள் உருவாகத் தொடங்கிவிட்டன; இன்று வரை அவ்வாறே தொடருகின்றன. இன்றைக்குக் கூட்டணியின்றி சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது, போட்டியிடப் போவதாக நடிகர் விஜய்யின் த.வெ.க. அறிவித்துள்ளது.

1962 தேர்தலில் திராவிடம், மாநில உரிமைகளைப் பற்றி விரிவாக திமுக தலைவர்கள் பிரசாரம் செய்தனர். முதன்முதலாகப் பெரிய அளவில் திரைத் துறையினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

‘திராவிடஸ்தான் லட்சியம் காரிய சாத்தியமற்றது’

தேர்தல் பிரசாரங்களில், ஒருசில இடங்களைக் கைப்பற்றுவதற்காக சில தொகுதிகளில் சுதந்திர கட்சியும் திமுகவும் தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொள்வதைக் கண்டித்த முதல்வர் காமராஜர், லஞ்ச ஊழல் என்பது காங்கிரஸ் ஆட்சியின்போது மட்டும்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி தீமைகள் மகாபாரத காலத்தில்கூட இருந்தன. எல்லா மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம்தான் லஞ்ச ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.

“மக்களை ஏமாற்றவே திமுகவும் சுதந்திர கட்சியும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள நேசம் தேர்தலுக்குப் பின் நீடிக்காது.

“திமுக (மொத்தமுள்ள) 206 தொகுதிகளையும் கைப்பற்றினாலும் திராவிடஸ்தான் லட்சியத்தை எய்த முடியாது. சென்னை அசெம்பிளியில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் அதைப் பெற்றுவிட முடியாது. கேரளா, ஆந்திரா, மைசூர் அசெம்பிளிகள் திராவிடஸ்தானை எதிர்த்து நிறைவேற்றினால் திமுக என்ன செய்யும்?” என்றும் கேள்வி எழுப்பினார் காமராஜர்.

என் கட்சித் தலைமையை ஏற்கவில்லையே!

திமுக – சுதந்திர கட்சிகளுக்கு இடையே தேர்தலில் பரஸ்பரம் உதவிக்கொள்வது தொடர்பான உடன்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், கடைசி நேரத்தில் முறிந்துவிட்டது. என்றாலும் இரு தரப்பிலும் இணக்கம் இருந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணாவை ஆதரித்து ராஜாஜி வந்து பேசினார்.

இந்தக் கூட்டத்தில், அண்ணாதுரையும் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமியும் வெற்றி பெறுவது மிக மிக அவசியம் என்று சுதந்திர கட்சித் தலைவர் ராஜாஜி வேண்டுகோள் விடுத்தார்.

“சர் ராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் பேசினார். அதை அண்ணாதுரை தமிழில் மொழிபெயர்த்தார். இதில் எதைப் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. இத்தகைய திறமையுள்ளவர் என் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லையே என்பதுதான் என் வருத்தம்.

“சுதந்திரக் கட்சி என்னுடன் போய்விடக் கூடாது. யதேச்சாதிகார ஆட்சி என்பது பாம்பைப் போன்றது. ஒரு அடியில் அது செத்துவிடாது. ஆகையால், எனக்குப் பின்னால் இந்த இயக்கத்தை மற்றவர்கள் நடத்த வேண்டும். இந்த இயக்கத்தை நடத்த சர் ராமசாமி முதலியாருக்குத் திறமை உண்டு.

“…அண்ணாதுரையின் பேச்சில் நான் மோகித்துப் போனேன்...

“...யதேச்சாதிகாரமும் லஞ்சமும் ஒழிய வேண்டும். இந்தத் தேர்தலில் பணம் கொடுக்கும் ஏற்பாடு உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. ஒரு வியாதி உச்சகட்டத்தை அடைந்துவிட்டால் முடிவு காலம் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இந்தத் தடவை பணம் வாங்கியவர்கள் பணம் கொடுத்தவர்களுக்கு விரோதமாக வோட் போட வேண்டும். இந்தத் தேர்தலுடன் இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும். பணம் கொடுத்தாலும் காரியம் நடக்காது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்...” (அப்படியானால், அப்போது ஒரு வோட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள்? இப்போது நூறுகளில் இருந்து தாவி ஆயிரங்களுக்குப் போயிவிட்டது என்கிறார்களே!).

“... அடுத்த தேர்தலின்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். இருந்தாலும் அடுத்த தேர்தலில் என்ன நடக்குமென்று சொல்லுகிறேன். இப்போதுள்ள காங்கிரஸுக்கு இனி அதிர்ஷ்ட ஜாதகமில்லை” என்றார் ராஜாஜி (சொன்னபடியே நடந்தது, 1967 தேர்தலில் காங்கிரஸுக்கு அதிர்ஷ்டமில்லை! ராஜாஜியின் சுதந்திர கட்சி கூட்டணியுடன் திமுக போட்டியிட்டது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது).

இந்தக் கூட்டத்தில் அண்ணா பேசும்போது, “ராஜாஜி மிகவும் அறிவாளி. அவரிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சமீப காலமாகத்தான் நான் ராஜாஜியுடன் பழகுகிறேன்.

“அவருடைய வயதையும் அறிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எங்களுக்குள் நட்பு என்று சொல்வது முறையாக இருக்காது. அவர் தம்முடைய அறிவையும் அனுபவத்தையும் என்னிடம் சொல்லி, நான் கேட்டுக் கொள்ள வேண்டியவன் என்று சொல்வதுதான் பொருந்தும்”.

“15 வருஷங்களாக ஆட்சி நடத்திவிட்டதால் காங்கிரஸுக்குத் தலைக்கனம் ஏற்பட்டிருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். தங்களை விட்டால் நாட்டை ஆள வேறு யாருமில்லை என்ற மமதையினால் காங்கிரஸ்காரர்கள் ஓட்டையாக இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சி நடத்துவோம் என்கிறார்கள்” என்றார்.

[ பல்வேறு கருத்துடையவர்கள் ஒரே மேடையில் பேசும்போது, முரண்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் எப்படிப் பேச வேண்டுமென்பதற்கு இன்றைய கூட்டம் ஒரு உதாரணமாயிருந்தது – தினமணி ].

ஆனால், தேர்தல் முடிவில் காஞ்சிபுரத்தில் சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாதுரை தோற்றுவிட்டார்.

தஞ்சையில் மு. கருணாநிதி வெற்றி பெற்றார் (காங்கிரஸ் சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர் பரிசுத்த நாடார்). ஆயிரம்விளக்கில் கே.ஏ. மதியழகன், லால்குடியில் அன்பில் பி. தர்மலிங்கம், ஆடுதுறையில் கோ.சி. மணி, தேனியில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (இந்தியத் திரைத்துறையில் முதன்முதலில் எம்எல்ஏவான நடிகர்!), சைதாப்பேட்டையில் முனுஆதி, ராசிபுரத்தில் என்.பி. செங்கோட்டுவேல் போன்றோர் வெற்றி பெற்றனர்.

திமுகவில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பேரவைக்குப் புதியவர்கள். இயல்பே.

இந்தத் தேர்தலில் அண்ணா மட்டுமின்றி க. அன்பழகன், சத்தியவாணி முத்து போன்றோரும் தோற்றனர்.

எதிர்த்தரப்பில் காரைக்குடியில் சுதந்திர கட்சித் தலைவர் சா. கணேசன், திருச்சி – 2 தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம். கல்யாணசுந்தரம், முதுகுளத்தூரில் பார்வர்ட் பிளாக்கின் சசிவர்ணத் தேவர் போன்றோர் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம் லீக், தமிழ்த் தேசிய கட்சி, பிரஜா சோசலிஸ்ட், ஜனசங்கம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் தோல்வியுற்றனர்.

காங்கிரஸில் முதல்வர் காமராஜர், அமைச்சர்கள் ராமையா, கக்கன், பக்தவத்சலம் போன்றோரெல்லாம் வெற்றி பெற, அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் தோற்றுப் போனார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பான தினமணி தலையங்கத்தின் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது:

“... காங்கிரஸ் கட்சிதான் மெஜாரிட்டி பெற்று பதவிக்கு வரும் என்று என்பது எல்லாரோலும் எதிர்பார்க்கப்பட்டதே. அதை முக்கியமாக எதிர்த்த திமுக, சுதந்திரக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் வெற்றியை எதிர்நோக்கி, சக்தி வாய்ந்த எதிர்க்கட்சிகளைத் தோற்றுவிப்பதுதான் ஒரே நோக்கம் என்று கூறிப் பிரசாரம் செய்தனர். தேர்தலின் விளைவாக கணிசமான சக்தியுள்ள எதிர்க்கட்சியாக திமுக வெளிப்போந்துள்ளது. சுதந்திரக் கட்சிக்கு ஆறு ஸ்தானங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதற்கு வாய்த்தது படுதோல்விதான் என்று ராஜாஜி ஒப்புக்கொண்டிருக்கிறார்...

“... காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி காணும் என்றாலும் அதன் மெஜாரிட்டி குறிப்பிடத் தக்கவாறு குறையும் என்பது ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டதே. இப்பொழுது 13 ஸ்தானங்கள் குறைவாகக் கிடைத்துள்ளன. வோட்டுப் பதிவு நிலவரத்தைக் கவனித்தால், பெரும்பாலான தொகுதிகளில், எதிர்க்கட்சிகளிடையே காணப் பெற்ற பயனற்ற போட்டாப்போட்டி, காங்கிரசின் வெற்றிக்கு உதவுபடியாக இருந்தது புலனாகும். காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை...”

மேலும், தேர்தலுக்கு முன் திமுகவுடன் சுதந்திர கட்சியும் தம்மிடையே கூடியவரை போட்டியைத் தவிர்ப்பதற்காக ஒரு உடன்பாடு செய்துகொண்டதும், கடைசி நிமிஷத்தில் முறிந்து போக நேரிட்டதும் பற்றிச் சுட்டிக்காட்டியதுடன், இந்த முறிவு ஆளுங்கட்சிக்கு அளிக்கப்படும் புது வருஷப் பரிசு என்று ராஜாஜி கூறியதையும் தினமணி தலையங்கம் நினைவுபடுத்தியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், மார்ச் 15 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் காமராஜர் தலைமையில் 9 பேர் கொண்ட – காமராஜர், எம். பக்தவத்சலம், ஆர். வெங்கடராமன், பி. கக்கன், வி. ராமையா, ஜோதி வெங்கடாசலம், நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார், ஜி. பூவராகன், எஸ்.எம். அப்துல் மஜீத் - தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

செய்தி, பத்திரப் பதிவு, அரசு அச்சுக்கூடம் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் ஜி. பூவராகனுக்கு அப்போது வயது 29 தான். இந்தியாவிலேயே மிக இளம் வயதில் அமைச்சர் பதவியேற்றவரும் இவர்தான். இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்தவர்.

ஒன்று நடந்தது; மற்றொன்று மறந்தது!

சென்னை மெரீனாவில் மார்ச் 4 ஆம் தேதி நீலநாராயணன் தலைமையில்  நடைபெற்ற திமுக நன்றியறிவிப்புக் கூட்டத்தில், ‘திராவிட நாட்டைப் பெறுவதே திமுக லட்சியம்; அதைத் தாம் மறைக்க விரும்பவில்லை’ என்று அறிவித்தார் திமுக ஸ்தாபகத் தலைவர் ஸி.என். அண்ணாதுரை.

“காஞ்சிபுரம் தேர்தல் முடிவு (அண்ணாவின் தோல்வி) எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பே இது தெரிந்த விஷயம்தான். ஆனால், என்னைத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் எங்கள் கட்சியின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது.

“திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விடுதலை இயக்கம். நான்கு தென்னக ராஜ்யங்களை உள்ளடக்கிய திராவிட நாடு அமைக்க வேண்டும் என்ற அதன் அடிப்படைக் கோரிக்கையை அது கைவிடாது (ஆனால், பின்னர் கைவிட்டது!); அடுத்த தேர்தலில் திமுக பெரும்பான்மை ஸ்தானங்களைக் கைப்பற்றும் என்று நம்புகிறேன்” என்றார் அண்ணா  - அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை; 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் அவ்வாறே நடந்தது!

[தினமணி கருவூலத்திலிருந்து]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.