கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!

1957 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

News image
முதல்வராகப் பதவியேற்கிறார் காமராஜர்; தொடர்ந்து மற்ற அமைச்சர்கள்!- தினமணி கருவூலத்திலிருந்து...
Updated On :17 மார்ச் 2026, 4:27 am

எம். பாண்டியராஜன்

நாடு விடுதலை பெற்ற பிறகு 1957 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு  நடந்த இரண்டாவது தேர்தலில் 205 இடங்களில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது; முதல்வராக இரண்டாவது முறையாகத் தொடர்ந்து காமராஜர் பொறுப்பேற்றார்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், முதல்வர் ராஜாஜி தலைமையில் அரசு அமைத்தது. சில ஆண்டுகளில், 1954-ல்  ராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

வரலாற்றில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது. 1956 மே மாதத்தில் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தித் தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

திமுகவுக்கான கட்சி அங்கீகாரம் பெறப்படாத நிலையில் அப்போது திமுக வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சைகளாக வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். 15 இடங்களில் வெற்றி பெற்றனர்.

1952 சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்று வலுவாக  இருந்த (பிளவுபடாத) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தத் தேர்தலில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் காமராஜரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பிரசாரம் செய்தார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானபோதிலும் ஏப்ரல் 14 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. 29 ஆம் தேதிதான் சட்டப்பேரவை  கூடியது.

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கென்றொர் அறை இருந்தது. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அங்கிருந்துதான் பவனியாக அமைச்சரவைக் கூடத்துக்கு (என்றிருந்திருக்கிறது) வந்தார் ஆளுநர் ஏ.ஜே. ஜான்; முதல்வராக காமராஜருக்கும் ஆறு அமைச்சர்களுக்கும் – எம். பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், எம்.ஏ. மாணிக்கவேலு, பி. கக்கன், வி. ராமையா, திருமதி லூர்தம்மாள் சைமன் – பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 15 நிமிஷங்களில் பதவியேற்பு முடிந்தது. ஆர். வெங்கடராமன் பின்னொரு நாளில் உதகையில் ஆளுநர் முன் பதவியேற்றுக் கொண்டார்.

காமராஜரும் 4 பேரும் ‘கடவுள் பெயரால் உறுதி கூறுகிறேன்’ எனப் பிரமாணமேற்க, அந்தக் காலத்திலேயே, எம். பக்தவத்சலம், எம்.ஏ. மாணிக்கவேலு ஆகிய இருவரும் ‘நான் தூய மனதுடன் உறுதி கூறுகிறேன்’ என்று பதவிப் பிரமாணமேற்றிருக்கின்றனர்.

மெரீனா கடற்கரையில் அப்போது அரசியல் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எல்லாமும் நடைபெறும். திலகர் திடல், சீரணி அரங்கம் என்றெல்லாம் இடத்தின் பெயர்கள் மாறி வந்தன. நீண்ட காலமாகக் கூட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

1957-ல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பிலும் திமுக சார்பிலும் மெரீனா கடற்கரையில்தான் நன்றியறிவிப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த கூட்டத்துக்கு பி. கக்கன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் காமராஜர் பேசும்போது, ‘மொத்தமுள்ள 205 தொகுதிகளில் 200 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வென்றிருக்கலாம் என முன்னால் பேசியவர் குறிப்பிட்டார். அப்படி வருவது அபாயம். வரக் கூடாது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பது அவசியமல்லவா? எதிர்க்கட்சிகள் இருப்பது நல்லதே’ என்று குறிப்பிட்டார்.

“இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்த படிப்பினையை மனதில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் மீது மக்கள் அன்பும் பற்றும் அதிகம் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன் காங்கிரஸுக்கு நிச்சயம் 150 இடங்கள் கிடைக்குமென்று நான் சொன்னேன். ஆனால், பலருக்கு சந்தேகம். என்ன, கோட்டையில் உட்கார்ந்துகொண்டு இவன் சொல்கிறானே, அப்படி வருமா? என சந்தேகப்பட்டார்கள்.

“மாடி, மச்சு வீடுகளில் உள்ளவர்கள் மனநிலை எனக்கு அதிகமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சாலைகளில் செல்லும் ஏழைகள், குடிசைகளில் வாழ்வோரின் கண்ணோட்டம், மனப்போக்கை ஓரளவு நான் அறிவேன். ஆகவேதான் நான் அப்படிச் சொன்னேன்.

“மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வளர்த்து அதற்குப் பாத்திரமானவர்களாகவே இருக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறோம். நல்ல காரியங்களைச் செய்யவே நாம் முற்பட வேண்டும். அதுவே நமது லட்சியம்.

“பொதுவான பிரச்சினைகளை அணுகி அவற்றைத் தீர்க்க முற்படும்போது, கட்சி வேற்றுமைகள் வேண்டியதில்லை. நாட்டின் நலன் வளர்ந்து முன்னேற்றம் ஏற்பட வேண்டும். வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் கட்சிப் பிரச்சினைகள் அல்ல, நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும். இவற்றைப் போக்க எல்லாருடைய உதவியும் வேண்டும். இதைத்தான் மக்களிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது” என்றார் காமராஜர்.

தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட திமுகவின் சார்பில் காஞ்சிபுரத்தில் ஸி.என். அண்ணாதுரையும் குளித்தலையில் மு. கருணாநிதியும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஏ.வி.பி. ஆசைத்தம்பியும் எழும்பூர் தொகுதியில் க. அன்பழகனும் பெரம்பூரில் சத்தியவாணி முத்து, வேலூரில் மா.பா. சாரதி, விருத்தாசலத்தில் எம். செல்வராஜ் மற்றும் ஏ. கோவிந்தசாமி நாயக்கர், எஸ்.எம். அண்ணாமலை, ப.உ. சண்முகம், எஸ். சந்தானம் போன்றோரும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (திருச்சி ஜில்லா குளித்தலையில் திமுக அபேட்சகரும் சினிமா கதை வசனகர்த்தாவுமான ஸ்ரீ மு. கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார் - ‘தினமணி’)

மக்களவைக்கு நாமக்கல் இரட்டை உறுப்பினர் தொகுதியிலிருந்து ஈ.வி.கே. சம்பத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ராயபுரத்தில் கட்சியின் மத்திய கமிட்டி காரியாலயத்தில் மார்ச் 31-ல் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஸி.என். அண்ணாதுரையும் உதவித் தலைவராக கே. அன்பழகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைமை கொறடாவாக மு. கருணாநிதியும் செயலர்களாக எம்.பி. சுப்ரமண்யமும் ஏ. கோவிந்தசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணா, ‘திமுகவிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீது திருப்தி தெரிவித்ததுடன், கழகத் தொண்டர்கள் தீவிரமாக உழைத்து, மக்களின் நம்பிக்கைக்குத் தொடர்ந்து பாத்திரமாக இருக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தில் மிகவும் அவசியமான எதிர்க்கட்சியை நல்ல முறையில் உருவாக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார்.

திருவல்லிக்கேணி (மெரீனா) கடற்கரையில் அதேநாள் மாலையில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு நெடுஞ்செழியன் தலைமையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது; என்.வி. நடராசன் வாழ்த்திப் பேசினார்.

நெடுஞ்செழியன் பேசும்போது...

“தேர்தலில் கழகம் கலந்துகொள்வது இதுதான் முதல் முறை. இதில் சில நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டது. தேர்தல் முடிவு பற்றிக் கழகத்தினர் பூரிப்பும் பெருமையும் அடைகின்றனர். கழக வேட்பாளர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் குணம் உண்டு.

“திமுக மொத்தம் 112 தொகுதிகளில் போட்டியிட்டது. 15 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். காங்கிரசுக்கு மொத்தம் 50 லட்சம் வாக்குகள் கிடைத்தன. திமுகவுக்கு 16 லட்சம் வாக்குகள் கிடைத்தன. கழகத்தைவிட 3 பங்கு அதிக வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைத்தன. ஆனால், 10 மடங்கு அதிக இடங்கள் கிடைத்தன. தோல்வியுற்ற திமுக வேட்பாளர்களில் 47 பேர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றனர்.

“சென்னை நகரத்தில் காங்கிரஸ் 4 இடங்களுக்கு 1.17 லட்சம் வாக்குகளும் திமுக 3 இடங்களுக்கு 1.15 லட்சமும் வாக்குகள் பெற்றன. இந்தத் தேர்தலில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அடுத்த தேர்தலில் இன்னமும் நல்ல முன்னற்றம் அடையலாம் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் நெடுஞ்செழியன். நிறைவில் அண்ணா நன்றி தெரிவித்துச் சிறப்புரையாற்றினார்.

1957-ல் பதவியேற்ற முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு 1962 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்தது. இடைப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் நிறைய அரசியல் மாற்றங்கள். அணி மாற்றங்கள். 1962-ல் நடைபெற்ற தமிழ்நாடு  சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்தது என்ன?

[தினமணி கருவூலத்திலிருந்து]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.