தேர்தல் 1967 : அரியணையேறிய திமுக, அண்ணா முதல்வர்!
1967 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...
மாற்றம்... ஆளுநர் உஜ்ஜல்சிங் பிரமாணம் செய்துவைக்க முதல்வராக பதவியேற்கிறார் அண்ணா
தினமணி கருவூலத்திலிருந்து
மாற்றம்... ஆளுநர் உஜ்ஜல்சிங் பிரமாணம் செய்துவைக்க முதல்வராக பதவியேற்கிறார் அண்ணா
தினமணி கருவூலத்திலிருந்து
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை - 1967 சட்டப்பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில்தான் நீண்ட கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது – தொடர்ந்து இன்று வரையிலும் திராவிட கட்சிகளே அதிகாரத்தில் இருக்கின்றன!
மாநில உரிமைகளைப் பேசிய திமுக, இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற, தனிப் பெரும்பான்மையுடன் முதல்வராகப் பதவியேற்றார் சி.என். அண்ணாதுரை.
ஹிந்தி எதிர்ப்புக் கிளரச்சிகள், விலைவாசி உயர்வு, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களிடையே நிலவிய அரசுக்கு எதிரான மனநிலை காரணமாகத் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் எம். பக்தவத்சலம், பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாரும் தோற்கடிக்கப்பட்டனர்.
தவிர, இந்தத் தேர்தலில் முதல்முறையாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியொன்று உருவாக்கப்பட்டது. 1962 தேர்தலில் திமுகவுக்கு நெருக்கமாக இருந்த சுதந்திர கட்சித் தலைவர் ராஜாஜி, இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
தேர்தலில் அதிகளவாக 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது (தமிழரசுக் கழகம், நாம் தமிழர் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன). இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராஜாஜியின் சுதந்திர கட்சி 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களில் மோதி 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. பார்வர்ட் பிளாக் – 1, பிரஜா சோசலிஸ்ட் – 4, சங்கத சோசலிஸ்ட் கட்சி – 2.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்றது. 24 இடங்களில் போட்டியிட்ட ஜனசங்கம் எங்கேயும் வெல்லவில்லை. 6 சுயேச்சைகள் வென்றனர்.
ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸோ, 232 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே வெற்றியைப் பெற முடிந்தது. காமராஜர் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளராக பெ. சீனிவாசன் என்ற இளைஞர் போட்டியிட்டு ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவில் சென்னையில் மட்டுமே சுமார் 200 கூட்டங்கள் நடைபெற்றன.
லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சுதந்திர கட்சித் தலைவர் ராஜாஜி, “நாடு முன்னேறிச் செல்ல வகை செய்வதே திமுக தலைமையில் உள்ள எதிர்ப்பு அணியின் நோக்கம். தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அல்ல” என்றார்.
“திமுகவிடம் ஒற்றுமையும் பிரச்சினைகளைக் கையாண்டு ஆட்சியை நடத்தும் துணிவும் திறமையும் இருக்கின்றன. என் மீது கொண்டிருக்கும் அன்பை மக்கள் திமுகவுக்கு வோட்டுச் செய்வதன் மூலம் காட்ட வேண்டும்.
“எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காங்கிரஸின் தவறுகளை ஒரே நாளில் சீராக்குவது சாத்தியமல்ல. நிலவரம் மேற்கொண்டு மோசமடையாமல் பார்த்துக் கொள்ளலாம். நிலைமையைச் சீர்படுத்துவதற்கு சிறிது அவகாசம் பிடிக்கும்” என்றார் ராஜாஜி.
இதே மேடையில் பேசிய அண்ணாதுரை, “திமுக தலைமையில் உள்ள கூட்டணி அதிகாரத்துக்கு வந்தால் விலைவாசிகள் உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பத்தில் ரூபாய்க்கு ஒரு படி என அரிசி விற்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், “ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு உணவு அளிக்க இயலுமாறு செய்யப்படும். சகல துறைகளிலும் உண்மையான முன்னேற்றம் ஏற்படும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருந்தவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின்வழி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர்., தனிப்பட்ட காரணங்களுக்காக அவருடைய இல்லத்திலேயே நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டார். பெரும் பதற்றமும் அனுதாபமும் நேரிட, கழுத்தில் கட்டுப் போடப்பட்ட எம்ஜிஆரின் புகைப்படம் பிரசார சாதனமாகத் தமிழ்நாடு முழுவதும் பரப்பப்பட்டதும் கூட்டணிக்கு வாக்குகளைத் திரட்டித் தந்ததும் தனிப் பெருங்கதை.
தேர்தலில் மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தனர். பிப். 15 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் 75, இரண்டாவது கட்டத்தில் 70, மூன்றாவதில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.
பிப். 22 வாக்கு எண்ணிக்கை!
அமைச்சர்கள் கக்கன், ஜோதி வெங்கடாசலம், ராமையா, என்.எஸ். மன்றாடியார், மஜீத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் தலைவர் செல்லபாண்டியன் எல்லாரும் தோற்றனர்.
மாநிலத்தின் முதல் வெற்றியை சென்னை பார்க் டவுன் (பூங்கா நகர்) தொகுதியில் சுதந்திர கட்சி வேட்பாளர் எச்.வி. ஹண்டே பெற்றார். திமுகவில் பெரம்பூரில் சத்தியவாணி முத்து, எழும்பூரில் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, மயிலாப்பூரில் அரங்கண்ணல் வெற்றி பெற்றனர். தியாகராய நகர் தொகுதியில் தமிழரசுக் கழகத்தின் ம.பொ. சிவஞானக் கிராமணி வெற்றி பெற்றார்.
முதல் நாளில் வெளிவந்த 112 தொகுதிகளின் முடிவுகளிலேயே காங்கிரஸ் ஆட்சியின் முடிவும் தெரிந்துவிட்டது. திமுக – 63, காங்கிரஸ் – 27, சுதந்திரா – 8.
வெற்றிச் செய்திகளை அண்ணாவிடம் செய்தியாளர்கள் தெரிவித்தபோது, தங்கள் வேண்டுகோளுக்குப் பொது மக்கள் செவி சாய்த்திருப்பதற்காக நன்றி தெரிவித்ததுடன், தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் ஐக்கிய முன்னணியின் ஒற்றுமையே. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளில் சில தங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இரண்டாம் நாள் முடிவுகளில் ‘திமுகவுக்குப் பூரண மெஜாரிட்டி’ உறுதி செய்யப்பட்டது. சைதாப்பேட்டையில் மு. கருணாநிதி, பரங்கிமலையில் எம்.ஜி.ஆர்., திருவல்லிக்கேணியில் வி.ஆர். நெடுஞ்செழியன் போன்றோர் வெற்றி பெற்றனர். ஆனால், அன்பில் தருமலிங்கம், ப.உ. சண்முகம் போன்ற சில தலைவர்கள் தோல்வியுற்றனர்.
தேர்தலில் காமராஜர் தோல்வி அடைந்தது பற்றி நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைகிறேன் என்று கருத்துத் தெரிவித்தார் அண்ணா.
சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் - 1962 தேர்தல் தோல்விக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த - அண்ணா, தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் (வடசென்னையில் நாஞ்சில் கி. மனோகரன்!). கட்சி விரும்பினால் சட்டப்பேரவையில் கட்சிக்குத் தலைமை வகிக்க (முதல்வர் பொறுப்பேற்க) தமிழ்நாட்டுக்குத் திரும்பக் கூடும் என அறிவித்த அண்ணா, தொடர்ந்து பின்னர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஸி.என். அண்ணாதுரை தலைமையிலான முதல் திமுக அமைச்சரவை - வி.ஆர். நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன், ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, எஸ். மாதவன், எஸ்.ஜே. ஸாதிக் பாட்சா, எம். முத்துசாமி - பதவியேற்றது.
பதவியேற்றவுடன் அண்ணா உள்பட அனைவரும் மேடையிலிருந்து இறங்கிவந்து. முன் வரிசையில் அமர்ந்திருந்த ராஜாஜிக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
முதல்வராகப் பதவியேற்ற அண்ணாவுக்குத் தொலைபேசியில் வாழ்த்துக் கூறியதுடன், தேவையான ஒத்துழைப்பு அளிப்பதாகவும் பிரதமர் இந்திரா காந்தி உறுதி கூறினார்.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களின் மேஜைகளில் அண்ணாவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அண்ணாவின் மேஜையிலோ திருவள்ளுவரின் சிறிய உருவப் படம் அலங்கரித்தது (தனக்கு இந்தப் படத்தை அன்பில் தருமலிங்கம் – தற்போதைய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் தாத்தா - அன்பளிப்பாகத் தந்ததாக அண்ணாதுரை தெரிவித்தார்).
தலையங்கத்தில் தினமணி பின்வருமாறு குறிப்பிட்டது:
“… பதவிக்கு வந்துள்ள கட்சியினர் தாம் எப்படிப் பதவிக்கு வர முடிந்தது என்பதில் கவனம் செலுத்துவதைவிட இதுவரையில் பதவியில் இருந்த கட்சி ஏன் தோற்றது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்; அதே குறைபாடு தம்மிடம் இல்லாதவாறு (தோன்றாதவாறு) ஜாக்கிரதையுடன் நடந்துகொள்ள வேண்டும்…
… நெடுங்காலம் ‘கிளர்ச்சியில்’ ஈடுபட்டிருந்த ஒரு கட்சியானது கிளர்ச்சி நிலையிலிருந்து பதவியேற்பு நிலைக்கு வரும்போது, தம் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து கிளம்பும் பல்வேறு விதமான நிர்பந்தங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆகையால் சில தர்மசங்கடமான நிலைமைகள் இருப்பது இயல்பு. விவேகம், துணிவு இரண்டுக்கும் அது பெரும் சோதனையாக இருப்பது இயல்பு…
… “புது நோக்குத் தேவை; புதிய கட்சி பதவிக்கு வருவதுதான் புது நோக்கு ஏற்படுவதற்கு வழி” என்பது வோட்டர்களின் கருத்தாக இருக்கலாம். ஆனால், அதற்காக எதையெல்லாம் மாற்ற முடியுமோ அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் காரியம் செய்ய வேண்டியதில்லை. இதை புதிய கட்சியின் தலைவர் நிச்சயமாக உணர்ந்து இருக்கிறார் என்பதற்குப் பல அறிகுறிகள் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்…
… ஆளும் கட்சியும், அதன் ஆதரவாளரும், எதிர் கட்சியும், எல்லாவிதமான வரட்டு தத்துவங்களையும் மறந்து, - முடிவுற்ற தேர்தல், எப்போதோ வரப் போகும் தேர்தல் இரண்டையும் மறந்து, - நிதான புத்தியுடன் நாட்டுக்கு நல்லது எது என்று யோசனை செய்து, நடக்க வேண்டிய காரியங்களில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்புடன் செயல்படும் சூழ்நிலைக்கு, மற்றெந்த மாநிலத்தையும்விட இந்த மாநிலத்தில் நல்ல வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் நல்லாட்சி நிலவட்டும்.”
ஏறத்தாழ அறுபதாண்டுகளானபோதிலும் இன்றைக்கும் பொருந்திப் போகின்றன இந்தத் தலையங்கத்தின் நிறைவிலுள்ள வரிகள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் – பிப். 24, 1967 - முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன் – செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாவிடம் தனித் திராவிட நாடு பற்றிய நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று நிருபர்கள் கேட்டபோது, ‘திராவிட நாடு கோரிக்கையை நான் உயிர்ப்பிக்கவில்லை. இதைத் தெளிவாக்க விரும்புகிறேன். இந்திய யூனியனிலிருந்து திராவிட நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இப்போது திமுக கேட்கவில்லை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
வடநாட்டாருக்கு எதிரானது திமுக என்று சிலர் நினைப்பது பற்றிக் கேட்டபோது, ‘நாங்கள் யாருக்கும் எதற்கும் விரோதிகளாக இருக்க மாட்டோம். சென்னையிலும் தென்னாட்டிலும் குடியேறியுள்ள வடநாட்டு நண்பர்களுக்கு எவ்வித அச்சமும் வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டார்.
நீண்டதான இந்த நேர்காணலில் மத்திய – மாநில உறவுகள், மொழிப் பிரச்சினை உள்பட சிக்கலான பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவித்துள்ளார் அண்ணா. அத்தனையும் தொலைநோக்குடைய வரிகள்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள்ளேயே அகாலமாக மறைந்தார் அண்ணா. தொடர்ந்து, முதல்வராக மு. கருணாநிதி பொறுப்பேற்றார். ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்னதாகவே வந்தது அடுத்த தேர்தல், 1971-ல்!
[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...