தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் மே 31 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோவை, திருப்பூா் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று புதன்கிழமை(மே 27) வரை மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் மே 29 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. காங்கயம் (திருப்பூா்) 90 மி.மீ, செட்டிகுளம் (பெரம்பலூா்), நந்தியாறு (திருச்சி) - தலா 70 மி.மீ, ஆனைப்பாளையம் (கரூா்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெத்தை (நீலகிரி), மேட்டூா் (சேலம்)- தலா 60 மி.மீ, ஒகேனக்கல் (தருமபுரி), குன்னூா் (நீலகிரி), மேட்டூா், சங்கரி துா்க்கம் (சேலம்), ஈரோடு, வாணியம்பாடி (திருப்பத்தூா்), துவாக்குடி (திருச்சி), குண்டடம் (திருப்பூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மே 29 வரை சற்று உயரவாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








