தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையைக் குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - AFP

Updated On :21 மே 2026, 4:03 am IST

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையைக் குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும். (யுக்தி யுக்தம் வசோ க்ராஹ்யம்பாலதபி சுகாதபி என்பது வடமொழியில் உள்ள பழமொழியாகும்).

ஒரு குடும்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதுவே சண்டையாக உருமாறி கணவர் தனது கையை ஓங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அச்சமயம் வீட்டிலிருக்கும் அந்தத் தம்பதியின் குழந்தை பயத்தில் நடுநடுங்கி "அம்மாவை அடிக்காதீங்கப்பா!' என்று கூறுவது இயல்புதானே!

அந்தக் குழந்தையின் வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக்கொண்டு பெற்றோர் இருவரும் சமாதானப் பாதைக்குத் திரும்பினால் உடனடியாக அந்தக் குடும்பத்தில் அமைதி திரும்பும்.

அதற்கு மாறாக, குழந்தையின் வார்த்தையை அலட்சியம் செய்து அதன் பெற்றோர் சண்டையைத் தொடர்ந்தால், அந்தக் குடும்பத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு நாள்கள் பலவாகும்.

இதோ இன்னொரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பார்ப்போம். மலைவாசஸ்தலம் ஒன்றில் வசிப்பவரின் குடிசை வீட்டின் அருகில் பள்ளத்தாக்கு உள்ளது. அந்த மலைப் பாதையில் நடந்து வருபவர்கள் இதை அறியாமல் அந்தக் குடிசையைத் தாண்டிச் சென்றால் அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்துவிடக் கூடும். இதைத் தடுப்பதற்கு அந்த மலைவாசி ஓர் ஏற்பாட்டை செய்தார்.

தமது வீட்டு வாசலில் தொங்கும் கூடு ஒன்றில் வைத்து வளர்த்து வரும் கிளியிடம் "அந்தப்பக்கம் போகாதே!' என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். நாளடைவில் அந்தக் கிளியும் அவ்விதமே கூறப் பழகி விட்டது. அந்த வீட்டின் முன்னுள்ள பாதை வழியே யார் சென்றாலும், "அந்தப் பக்கம் போகாதே!, அந்தப் பக்கம் போகாதே!' என்று அந்தக் கிளி குரல் கொடுக்கத் தொடங்கியது.

அந்தக் குரலைக் கேட்டவுடன் வந்த வழியே திரும்பிச் சென்றவர்கள் உயிர் பிழைத்தனர். "அட, இந்தக் கிளி சொல்வதை நாம் கேட்பதா?' என்று நினைத்து மேலும் சில அடிதொலைவு நடந்து சென்றவர்கள் மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து மாண்டனர்.

மேற்கண்ட விளக்கங்களுக்கும் இன்றைய உலக நடப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. இவ்வுலக நாடுகளுள் வளர்ச்சி கண்டுள்ள வல்லரசு நாடுகளும் உள்ளன. மேலும், வல்லரசாக வளரத் துடிக்கும் நாடுகளும், பொருளாதார பலத்தை மட்டும் கொண்டுள்ள நாடுகளும், படைபலத்தை மட்டும் பெருக்கிவரும் நாடுகளும் உள்ளன. இயற்கைவளம், பொருளாதார பலம் இல்லாத நாடுகளும் உள்ளன. இவை அனைத்துக்கும் மத்தியில் நடுவே வல்லரசுப் பட்டத்துக்கு வெகு அருகில் வந்துவிட்ட நமது பாரத தேசமும் உள்ளது.

ராணுவ வலிமை, இயற்கைவளம், மனிதவளம், உள்கட்டமைப்பு, ராக்கெட் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் நமது நாடு ராணுவத் தளவாடங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளதுடன், அவற்றைப் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையிலும், நமது நாடு வேறு எந்த நாட்டுடனும் வலிய சண்டைக்குச் செல்லாததுடன், நாடுகளுக்கிடையிலான பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்பதைத் தனது நிரந்தரக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது.

உக்ரைன்- ரஷியா, ஈரான்-இஸ்ரேல், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, சீனா-தைவான், வடகொரியா-தென்கொரியா ஆகிய எந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளுக்கும் போர் தீர்வாகாது என்பதுடன், அந்த நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்னைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த, ஈரானோ இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்கப் படைகளுக்கு இடமளித்த வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் உச்ச தலைவர் மட்டுமின்றி, அந்நாட்டின் முக்கியஸ்தர்கள் பலருடன் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ள அதே நேரம், ஈரானின் தாக்குதலால் வளைகுடா நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றில் உள்ள உள்கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும், இந்த நாடுகளில் உள்ள பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தி, சுத்திகரிப்பு, சேமிப்பு ஆகிய கட்டமைப்புகளும் பெரும் சேதமடைந்துள்ளன. ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல வேண்டிய வணிகக் கப்பல்களும் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவை போன்றவற்றின் விநியோகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரான் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள், இஸ்ரேல் ஆகியவையும் பெரும் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்திருக்கின்றன. மேலும், அந்த நாடுகளின் குடிமக்கள் மட்டுமின்றி, அவற்றில் பணிபுரிந்துவந்த இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் போருக்கு முதல்காரணமாக விளங்குகிற அமெரிக்காவும் தனது வீரர்கள் சிலரையும், போர் விமானங்கள், படைக்கலன்கள் உள்ளிட்டவற்றையும் இழந்துள்ளது. வருங்காலத்தில் அந்த நாடும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மேற்கண்ட நாடுகள் அனைத்தும் நமது பாரத தேசத்தின் வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு பரஸ்பரம் போர் தொடுப்பதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வுலகம் எதிர்கொண்ட பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அழிவை மட்டுமே அளிக்கிற போரைப் புரிவதற்கு அவசரப்படுவதைவிடவும், அமைதியையும், ஆக்கத்தையும் பரிசாக அளிக்கிற சமாதானத்துக்காகப் பொறுமையுடன் காத்திருப்பது மேலானதல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.