திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

புகழும் இகழும் கடந்து போகும்!

கற்களை எறிபவர்களுக்கு அது வெறும் விளையாட்டு; ஆனால், அடிபடும் பறவைக்கு அது உயிருடன் போராடும் கணம். அதைப் போலத்தான் சில நேரங்களில் இணையவழி விமர்சனங்கள் மாறி விடுகின்றன.

கோப்புப் படம்

Updated On :

சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிதி சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்த இளைஞர் ஹரிஷின் திடீர் மறைவு, சமூகத்தில் ஆழமான துயரத்தையும், அதே வேளையில் பல சிந்தனைகளையும் விதைத்துச் சென்றுள்ளது.

எண்மத் திரையில் பலருக்கு நிதிச் சுதந்திரம் குறித்த ஆலோசனைகளை வழங்கி பலரையும் ஈர்த்தவர் ஹரீஷ். ஆனால், இணைய உலகம் தரும் புகழும் பாராட்டும் எந்த அளவுக்கு அதிவேகமாக வருகிறதோ, அதே அளவுக்கு விமர்சனங்களும், வெறுப்புகளும் இணையத்தின் வழியே மிக எளிதாக வாயில்படி வரையிலும் வந்து விடுகின்றன.

விமர்சனம் என்பது ஒருவரைச் செழுமைப்படுத்த மட்டுமே பயன்பட வேண்டும். ஆனால், இன்றைய இணையச் சூழலில், விமர்சனம் என்ற பெயரில் நடத்தப்படும் இணைய கேலிகளும் இணையவழித் தாக்குதல்களும் தனி நபரின் மனஅமைதியை வேரோடு அறுத்து விடுகின்றன. கற்களை எறிபவர்களுக்கு அது வெறும் விளையாட்டு; ஆனால், அடிபடும் பறவைக்கு அது உயிருடன் போராடும் கணம். அதைப் போலத்தான் சில நேரங்களில் இணையவழி விமர்சனங்கள் மாறி விடுகின்றன.

பொதுவெளியில் வாழும் ஒவ்வொருவரும் சட்டபூர்வமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்; திருத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான வழிமுறைகள் அறம் சார்ந்ததாகவும், சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரை மனதளவில் உடைத்து, வாழும் ஆசையையே துறக்கச் செய்யும் அளவுக்கு நஞ்சாக மாறக்கூடாது.

ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவரை உந்தித் தள்ளிய காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்தால், அது தனிநபர் உணர்வுகள் முதல் சமூக அமைப்பின் அழுத்தங்கள் வரை பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

இன்றைய இணைய யுகத்தில், சமூக வலைதளங்களில் இணையவாசிகள் உருவாக்கும் பிம்பம் பல நேரங்களில் நிஜ வாழ்க்கையைவிடப் பெரிதாகிவிடுகிறது. இதனால், எப்போதும் வெற்றி பெற்றவராகவே தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு பெரும் மன அழுத்தத்தைத் தருகிறது.

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகளும் கூடுகின்றன. சிறு தவறுகூடப் பெரும் தோல்வியாகச் சித்தரிக்கப்படும் என்ற பயம் மனிதர்களை முடக்கி விடுகிறது.

நிதித் துறை என்பது மிகவும் நுட்பமானது; உலகப் பொருளாதாரம், சந்தை மாற்றங்கள் எனப் பல காரணிகளால் இயங்குவது. இந்நிலையில், துடிப்பான வயதில் கிடைக்கும் வேகமும் ஆர்வமும், அனுபவம் சார்ந்த விவேகத்தைவிட முந்திச் செல்லும்போது தவறுகள் நிகழ வாய்ப்புண்டு.

நிதி ஆலோசனைகளில் அல்லது சொந்த முதலீடுகளில் ஏற்படும் எதிர்பாராத சரிவு, மற்றவர்களுக்குப் பாடம் சொன்ன ஒருவரைத் தன் சொந்த வாழ்க்கையில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும். அந்நிலையில் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நம்மால் இதைச் சமாளிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை ஆட்கொள்ளும். அது ஒருவரின் உயிரை மாய்க்கும் அளவுக்கும் செல்லக் கூடும்.

இன்றைய இணையச் சூழலில் பெரும்பாலான விமர்சனங்கள் சீர்திருத்தும் நோக்கில் இல்லாமல், ஒருவரைக் காயப்படுத்தும் நோக்கில் மாறுவது கவலைக்குரியது.

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஆரோக்கியமானது. ஆனால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாகவும், வன்மம் நிறைந்த சொற்களாலும் எதிர்கொள்ளச் செய்யும்போது, அது அந்த நபரின் மன உறுதியைக் குலைத்து விடுகிறது.

ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தாலும், ஒரு நெருக்கடி நேரத்தில் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற தனிமை உணர்வே ஒரு மனிதனை தவறான முடிவுக்குத் தள்ளுகிறது.

நம் சமூகத்தில் நிதி மேலாண்மையைப் பற்றிப் பேசுவதுபோல, மன மேலாண்மை பற்றிப் பேசுவது இன்னும் வழக்கத்துக்கு வரவில்லை. பொருளாதார ரீதியிலோ மனதளவிலோ பாதிப்பு ஏற்படும்போது, பிறரிடம் உதவி கேட்கத் தயங்குவது அல்லது அதை அவமானமாகக் கருதுவது மிகப் பெரிய பலவீனமாக நம் சமூகத்தில் நீடிக்கிறது.

பிம்பங்கள் உண்டாக்கும் எதிர்பார்ப்புகள், நிதிச் சந்தையில் ஏற்படும் கணிக்க முடியாத நிகழ்வுகள், முன்வைக்கும் கருத்துகளில் நேரிடும் பிழைகள், இணையவெளி சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் உடனடியான கடும் விமர்சனங்கள் எல்லாம் ஒன்றுசேரும்போது ஒருவரின் மனச்சமநிலை குலைவது எதிர்பாராமல் நிகழக் கூடியதே. சமூக ஊடகங்கள் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு இந்த எதிர்பாராத காரணங்களில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்; வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்.

தோல்விகளோ, தவறுகளோ மனிதனின் வாழ்வைவிடப் பெரியவை அல்ல. பண இழப்பை மீண்டும் சம்பாதித்து விடலாம்; போன புகழைக்கூட மீண்டும் ஈட்டிவிடலாம். ஆனால், இழந்துவிட்ட உயிரை மீட்கவே முடியாது. புகழும் இகழும் கடந்து போகும்; ஆனால், உயிர் என்பது மீண்டும் வராத அரிய கொடை.

இணைய உலகின் கைதட்டல்களுக்காக வாழாமல், அகத்தின் அமைதிக்காகவும், நிஜமான மனித உறவுகளுக்காகவும் வாழக் கற்றுக்கொள்வதே நாம் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் உண்மையான நன்மையாகும்.

அதே வேளையில், சமூக ஊடக விமர்சகர்களும் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் ஒருவர் பகிரும் விமர்சனங்களில் மனிதநேயம் இருக்க வேண்டும். அதேபோல, இளைஞர்கள் தங்களின் பிம்பத்தைவிடத் தங்களின் மன நலனுக்கும், உண்மையான வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவமும், சவால்களின்போது உதவி கேட்கும் தயக்கமின்மையுமே ஒருவரை உண்மையான வெற்றியாளராக மாற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.