தலைமுறை கடந்தும் மறக்கக்கூடாத பாடங்கள்
தொழில்நுட்பம் வளராத காலமாக இருந்தாலும், மனிதநேயம் வளர்ந்திருந்த காலம் அது.

கோப்புப் படம்
-முனைவர் இளங்கோ கட்டிமுத்து
ஒரு தலைமுறை நம்மை விட்டு மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், அந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலர் நம்மிடையே இருக்க மாட்டார்கள். அவர்களுடன் ஒரு காலமும், ஒரு வாழ்க்கை முறையும், பல அரிய வாழ்க்கைப் பாடங்களும் மறைந்து போகக்கூடும்.
அவர்கள் வாழ்ந்த உலகம் இன்றைய உலகத்தைப் போன்றதல்ல. வசதிகள் குறைவாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைவு இருந்தது. பொருள்கள் குறைவாக இருந்தாலும், மனிதர்களுக்கிடையே அன்பும் அக்கறையும் அதிகமாக இருந்தது. தொழில்நுட்பம் வளராத காலமாக இருந்தாலும், மனிதநேயம் வளர்ந்திருந்த காலம் அது.
1960-களில் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு அந்த வாழ்க்கை இன்றும் நினைவில் இருக்கும். அதிகாலையில் எழுவது, வீட்டைச் சுற்றியுள்ள செடி- கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, இறைவழிபாட்டுக்காக தங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்தே பூக்களைப் பறிப்பது, கோயிலுக்குச் செல்வது போன்றவை அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாக இருந்தன.
அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செல்வார்கள். வழியில் சந்திக்கும் மனிதர்களிடம் நலம் விசாரிப்பார்கள். ஒருவருடைய மகிழ்ச்சியையும் துயரத்தையும் மற்றொருவர் தன்னுடையதாகக் கருதுவார்கள். இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் பண்பாடு இயல்பாக இருந்தது. முன்னோர் வழக்கங்கள், பண்பாடு மற்றும் இயற்கையை மதித்து வாழ்ந்தார்கள்.
இன்று பலரும் "நேரம் இல்லை' என்று கூறுகிறோம். ஆனால், அன்று நேரத்தை உருவாக்கிக் கொண்டார்கள். உறவுகளுக்கும் அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கினார்கள். மனித உறவுகள் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமான செல்வமாக இருந்தன.
அந்த தலைமுறையின் வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகம் இல்லை. பழைய காலணியாக இருந்தாலும் அதைத் தூக்கி எறியாமல் பயன்படுத்துவார்கள். எளிய உடை, எளிய உணவு, எளிய வாழ்க்கை-அதுவே அவர்களின் பெருமை. நம் முன்னோர் இயற்கையுடன் இணைந்து, உழைப்பையும் பாரம்பரிய உணவையும் மதித்து, குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
இன்று தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால், தேவைகள் அதிகரித்தால் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்பதில்லை. அந்த தலைமுறை நமக்குக் கற்றுக் கொடுத்த மிகப் பெரிய பாடங்களில் ஒன்று குறைவிலும் நிறைவாக வாழ்வது.
வீட்டில் தயாரித்த உணவுக்கு தனி மதிப்பு இருந்தது. கோடை காலத்தில் ஊறுகாய், வடாம் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்வார்கள். உரலில் இடித்த மசாலாவின் மணமும், வீட்டில் சமைத்த உணவின் சுவையும் அந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
நாட்டு தக்காளி, கத்தரிக்காய், கீரைகள் போன்றவற்றைத் தேடித் தேடி வாங்குவார்கள். உணவு என்பது வெறும் வயிற்றை நிரப்புவதற்கான பொருள் அல்ல; அது உடல் நலன், குடும்ப அன்பு, பாரம்பரியம் ஆகியவற்றுடன் இணைந்த ஒன்றாக இருந்தது.
தொலைபேசி இருந்தது - ஆனால், தொலைவு இல்லை! அவர்களுடைய காலத்தில் வீட்டுக்கு ஒரு தரைவழி தொலைபேசி இருந்தாலே அது பெரிய வசதி. தொலைபேசி எண்களை ஒரு சிறிய டைரியில் எழுதிப் பாதுகாத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் தவறான எண்ணுக்குக்கூட தொலைபேசி சென்றுவிட்டால், "ராங் நம்பர்' என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிடாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்!
இன்று நம் கையில் உலகத்தையே இணைக்கும் அறிதிறன்பேசி இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் அருகில் இருப்பவர்களுக்கே பேச நேரமில்லாமல் போய்விடுகிறது. அன்று தொலைபேசி குறைவாக இருந்தது; ஆனால், மனிதத் தொடர்பு அதிகமாக இருந்தது.
தினமும் செய்தித்தாளைப் படிப்பது அவர்களின் வழக்கம். உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஏகாதசி, அமாவாசை, பெüர்ணமி போன்ற நாள்களையும் நினைவில் வைத்திருந்தார்கள். காலத்தின் இயற்கைச் சுழற்சியையும், ஆன்மிக வாழ்க்கையையும் மதித்தார்கள். மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, நம் முன்னோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.
அந்த தலைமுறையின் வாழ்க்கையில் இறை நம்பிக்கைக்கு முக்கிய இடம் இருந்தது. வழிபாடு என்பது வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் வழியாகவும் இருந்தது. திருவிழாக்கள், விருந்தோம்பல், யாத்திரைகள், குடும்ப நிகழ்வுகள் என இவை அனைத்தும் மனிதர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்புகளாக இருந்தன.
ஆனால், அந்த வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சடங்குகளை மட்டும் அல்ல; அதன் பின்னால் இருந்த அன்பு, ஒழுக்கம், பொறுப்பு, பணிவு, பிறரை மதிக்கும் பண்பு ஆகிய நன்னெறிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அன்று வீட்டுக்கு விருந்தினர் வந்தால், "எதற்காக வந்தீர்கள்?' என்பதற்கு முன்பாக "சாப்பிட்டீர்களா?' என்பதே கேள்வியாக இருந்தது. அண்டை வீட்டில் ஏதாவது துயரம் என்றால் அனைவரும் சென்று
நிற்பார்கள். திருமணம் என்றால் அனைவரும் சேர்ந்து மகிழ்வார்கள். ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அவருடைய குடும்பத்துக்கு உதவுவது இயல்பான கடமையாகக் கருதப்பட்டது.
இன்று தொழில்நுட்பம் நம்மை உலகம் முழுவதும் இணைத்திருக்கிறது. ஆனால், மனிதர்களை உள்ளத்தால் இணைக்கும் அந்த அன்பை நாம் காப்பாற்ற வேண்டும். திருவள்ளுவர் கூறுகிறார்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இருந்தால் மனிதர்களுக்கிடையே சுவர் இருக்காது. அந்த தலைமுறை இதை வாழ்வில் செய்து காட்டியது.
நம் வீட்டில் இன்னும் அந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் இருந்தால், அவர்களை அன்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள். அவர்களுடைய வாழ்க்கைக் கதைகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தித்த
சிரமங்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு குறைவான வசதிகளில் வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் பழைய அனுபவங்கள் மட்டுமல்ல; வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப் பக்குவமும் இருக்கிறது.
ஒரு பழைய புகைப்படத்தைப் பார்த்து நாம் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், அந்த வரலாற்றை வாழ்ந்த ஒருவரிடம் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்வது இன்னும் பெரிய வாய்ப்பு.
இன்றைய தலைமுறை அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு எனப் பல துறைகளில் அபாரமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. நாளைய தலைமுறை இன்னும் உயரங்களைத் தொடும். அது அவசியமான முன்னேற்றம்.
ஆனால், முன்னேற்றம் என்பது வசதிகள் அதிகரிப்பது மட்டுமல்ல; மனிதனின் உள்ளமும் உயர வேண்டும். முன்னேற்றங்கள் மாறட்டும்; ஆனால் மனிதநேயம் மாறக்கூடாது. அந்த தலைமுறையிடமிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பழக்கத்தையும் அப்படியே பின்பற்றுவது அல்ல.
காலம் மாறுகிறது; வாழ்க்கை முறையும் மாற வேண்டும். ஆனால், காலம் மாறினாலும் சில அடிப்படை மனிதப் பண்புகள் மாறக்கூடாது.
நம் முன்னோர்கள் நமது முகவரி; அவர்கள் நமது பெருமை; அவர்கள் மெதுவாக நம்மை விட்டு மறைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு தலைமுறை மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை அனுபவமும் மறைந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் இருக்கும் அறிவை, அனுபவத்தை, பண்பாட்டை, மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பு.
அவர்களுக்கு பணம் கொடுப்பதைவிட சில நேரங்களில் நேரம் கொடுப்பது முக்கியம். பரிசு கொடுப்பதைவிட அன்பு கொடுப்பது முக்கியம்.
அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்வதைவிட, சில நேரம் அவர்களுடன் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்பது இன்னும் முக்கியம். ஏனெனில் ஒரு நாள் அவர்கள் இருக்க மாட்டார்கள். அப்போது அவர்களுடைய குரல் நினைவாக மட்டுமே இருக்கும்.
எனவே, நம் வீட்டில் அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இருந்தால், அவர்களைப் பாதுகாப்போம். அவர்களை மதிப்போம். அவர்களிடம் கற்றுக்கொள்வோம். அவர்களுடைய நல்ல வாழ்க்கைப் பாடங்களை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வோம்.
ஒரு தலைமுறை மறையலாம்; ஆனால், அவர்கள் கற்றுத் தந்த நல்ல வாழ்க்கைப் பாடங்கள் மறையக் கூடாது. நம் முன்னோர் நமது அடையாளம்; அவர்களின் நல்ல பண்புகள் நமது எதிர்காலத்தின் அடித்தளம்.
கட்டுரையாளர்:
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

