இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

சொல்லப்படாத சொற்கள் இங்கே ஏராளம்!

ராம்... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராதத் தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.

Published On :

ராம்... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராதத் தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி. காலத்தைப் புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைக்கும் கலைஞன். 'கற்றது தமிழ்' தொடங்கி, 'பேரன்பு', 'தரமணி', ' பறந்து போ' வரை அத்தனை படங்களிலும் நிரம்பியிருந்தது வாழ்வின் எதார்த்த துளிகள். இந்த முறை ராமின் அடுத்தப் படைப்பு ' ஏழு கடல் ஏழு மலை'.

'மூடிக் கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்; திறந்து கிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின் விடியலும் எப்போதும் இருக்கும்...' என்று தன் அழுத்தமான குரலில் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ராம்.

அவருடன் ஒரு சந்திப்பு:

'கற்றது தமிழ்' தொடங்கி வரிசையாக வந்த உங்களது அனைத்துப் படங்களுமே இங்கே பேசுப் பொருளாகி இருக்கிறது? இந்தப் படம் எப்படியிருக்கும்?

அது உங்கள் பார்வையைப் பொறுத்ததே. சதா இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம், ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே.

இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சராசரி மனிதன். இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்தச் சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள்.

நான் கதைக்காக வேற்றுக் கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும்போதும் கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. அது என் கதை வழியாக உங்களின் பார்வைக்கே வரலாம். அது இல்லாமல், ஒரு படம் அந்த மொழி சார்ந்த சமூகத்தில் விவாதத்தை முன்வைக்கிறது என்றால், அது வெற்றியே. அந்த விதமாக அது எனக்கு மகிழ்ச்சி.

ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் நான் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தைப் பார்க்கிறேன். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. இதுதான் இந்தப் படம்.

கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்?

அன்பும், மனிதமும்தான் எல்லா விநாடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா? என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும்.

எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. கைப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.

அன்பு, நேசம், பாசம் எல்லாமே ஒரு குறுஞ்செய்தியில் முடிந்து விடுகிறது. ஒரு கேக் வெட்டி எல்லாவற்றையும் முடித்துக் கொள்கிறோம். அந்த விதத்தில் இந்தத் தலைமுறைக்கு முக்கியமான கதை. இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள்.... ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதே இங்கில்லை.

போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்...

நிவின் பாலி, அஞ்சலி, சூரி என நடிகர்களின் தேர்வு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறதே?

இந்த மூன்று பேரையும் என்னைவிட சொந்தம் கொண்டாடுபவன் இருக்க முடியாது. அவர்களின் படங்களும், நடிப்பும்தான் இந்தப் படத்துக்குள் அவர்களைக் கொண்டு வந்தது.

அஞ்சலிக்கு நான் அறிமுகம் கொடுத்தவன், இந்த 20 வருடங்களாக அவர் ஒரு ஹீரோயினாக உயர்ந்து நிற்கிறார். அவரின் நடிப்பு இதில் தனித்துவமாக இருக்கும். இந்தக் கதைக்கு பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தபோதுதான், நிவின் பாலி இதன் உள்ளே வந்தார்.

சூரி வந்ததும் இன்னும் படம் அழகானது. அவர்கள் வந்ததும் எனக்கான வேலை வாங்கும் சிரமம் குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவர்களாகவே பார்த்துக் கொண்டார்கள். மூன்று பேரும் அற்புதம். சூரி இதில் காமெடியன் என்ற பிம்பத்தை உடைத்து, துளியும் காமெடி இல்லாமல் முழுக்க முழுக்க கதையைத் தாங்கி நிற்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படி எல்லோருமே பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். அன்பை விதைத்து இருக்கக் கூடிய சொற்கள்... பிரிவை தடுத்திருக்கக் கூடிய சில சொற்கள்... ஈகோவை உடைத்திருக்கக் கூடிய சில சொற்கள்... உண்மையை உணர்த்தியிருக்கக்கூடிய சில சொற்கள்... இப்படிப் பல இருக்கின்றன... அது இங்கே சாத்தியமாகி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.