திடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?
திடீரென தங்கம் விலை குறைவதும், இது எத்தனை நாள்கள் வரை நீடிக்கும் என்பது பற்றி...

தங்கம் விலை நிலவரம் - ANI
ஒரு லட்சத்தை எட்டியது, ஒன்றரை லட்சத்தை எட்டும் என நாள்தோறும் அதிர்ச்சி கொடுத்துவந்த தங்கம் விலை திடீரென இறங்கு முகத்தில் சென்று மேலும் அதிர்ச்சியைக் கூட்டி வருகிறது.
இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,980க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ரூ.1.30 லட்சத்துக்கு மேல் ஒரு சவரன் தங்கம் விற்பனையாகி வந்த நிலையில், அந்த விலையுடன் ஒப்பிட்டால் தற்போது கிட்டத்தட்ட 35 ஆயிரம் ரூபாய் வரை தங்கம் விலை குறைந்திருக்கிறது.
திடீரென தங்கம் விலை குறைந்திருப்பது பற்றி பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் எழுந்துள்ளது. ஏன் திடீரென குறைந்து வருகிறது?
தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் பொருளாதாரமே. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, விலைவாசியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்கும். கடந்த காலங்களில் வட்டி விகிதத்தை குறைத்து வந்த நிலை மாறி, தற்போது வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வட்டி விகிதம் அதிகரிக்கும்போதெல்லாம் டாலர் மதிப்பு பலம்பெறும்.
மீண்டும் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த அச்சம் அமெரிக்கர்களிடையே அதிகரித்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு 100 சதவிகிதம் உறுதி, அதே வேளையில் வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்த 94 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே, வட்டி விகிதம் 4 சதவிகிதத்திலிருந்து 4.25 சதவிகிதமாக உயரலாம்.
அதேவேளையில் வட்டியை 0.50 சதவிகிதம் உயர்த்தும் வாய்ப்பு 5.3 சதவிகிதம் உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் 4.50 சதவிகிதமாக வட்டி உயரும்.
பணவீக்கம் குறித்து மிக மிக கவலையாக உள்ளது என்று அமெரிக்க ஃபெடரல் வங்கி ஆளுநர் கிறிஸ்டோபர் வாலெர் கூறியதோடு, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டியிருக்கலாம் என்றும், பணவீக்கத்தைக் குறைக்க முயற்சி எடுக்கப்படுகிறது, வட்டி விகித உயர்வுகளில் இன்னும் சற்று தீவிரமாகச் செயல்பட வேண்டியிருக்கலாம் என்றும் டிசம்பர் மாத வட்டி உயர்வு குறித்து சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். டிசம்பரில் ஃபெடரல் வங்கி அரை சதவிகிதம் அளவுக்கு வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்காது என்றுதான் கருதுவதாகவும் வாலெர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால், டிசம்பர் மாதம் ஒரு சிறிய உயர்வும், ஜனவரியில் மற்றொரு உயர்வும் இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதனால் டாலர் மதிப்பு உயரும். டாலர் மதிப்பு உயரும்போதெல்லாம் தங்கம் விலை குறையும்.
எனவே, இந்த வட்டி விகித உயர்வு காரணமாக, டாலரைப் பலப்படுத்தும் முயற்சி நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை நீடிக்கலாம் என்பதால் தங்கம் விலையும் இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த நிலையிலேயே நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். அதாவது ஒரு சவரன் தங்கம் 90 ஆயிரம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. (ஆனால் அது நடக்குமா? என்பது சீனாவின் கையில்தான் உள்ளது)
எனவே அடுத்த மூன்று மாதங்கள் வரை அல்லது மூன்று மாதத்தில் அதாவது ஜனவரியில் மீண்டும் தங்கம் விலை குறையலாம். ஆனால், அடுத்த ஆறு மாதத்தில் திரும்ப உயரும். தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் இது சரியான நேரம்தான் என்கிறார்கள் இந்திய பொருளாதார நிபுணர்கள்.
மற்றொரு தரப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையே அமெரிக்காவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே அதுவரை தங்கம் விலை குறைவதற்கு வய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இவற்றை உறுதியாக சொல்ல முடியாததற்குக் காரணமே சீனாதான். சீனா தன்னுடைய மத்திய வங்கிக்கு, இந்த நிலையைப் பயன்படுத்தி மீண்டும் அதிகளவில் தங்கத்தை வாங்கத் தொடங்கினால் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும். சீனா, தங்கம் விலை குறைவதை ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, தற்போது வரை ரூ.90 ஆயிரம் வரை தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளது என்பதே பொதுவான தகவல்.
அமெரிக்காவின் சாக்ஸோ வங்கி அதிகாரி ஓலே எஸ். ஹேன்சன் இது பற்றி பேசுகையில், “டாலரை வலுவாக்குவதற்கான அழுத்தம் அதிகரித்து இருப்பதால் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, மேலும் கடினமான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீட்டைக் குறைத்து அதன் விலைகள் குறையக் காரணமாகியிருக்கின்றன என்றார்.
எனவே, அமெரிக்க பொருளாதாரம், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் வரை இந்தியாவில் தங்கம் விலை இறங்குமுகமாகவே நீடிக்கலாம், சீனாவின் தலையீடு இல்லாமல் இருந்தால் என்பதே பொதுவான கருத்து.
Summary
Why is the price of gold dropping suddenly? How long will this continue?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

