இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

விவாதிக்க வேண்டிய நேரம்

சட்டம் கடுமையானால் மட்டும் போதாது. வாக்கின் மதிப்பை உணரும் அரசியல் பண்பாடு உருவாக வேண்டும்.

கோப்புப் படம்

Published On :

-பொ. ஜெயச்சந்திரன்

ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வாக்குப்பதிவு. அது மக்களுக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை ஒப்பந்தம். அது அதிகாரத்தின் இருக்கை மட்டுமல்ல; நம்பிக்கையின் அரியணை. அதிலிருந்து ஒருவர் தாமாக எழுந்து சென்றுவிட்டால், மீண்டும் அதே வாசலில் வந்து நிற்கும்போது, அவரை வரவேற்பது யார்?

ஒருவர் கொள்கை காரணமாக கட்சி மாறினால், அந்தக் காரணத்தை மக்களிடம் விளக்க முடியும். மக்கள் நலன் கருதி அரசியல் பாதையை மாற்றினால், அந்த மாற்றத்தின் பின்னணியையும், வெளிப்படையாகச் சொல்ல முடியும். ஆனால், பதவிக்காக கட்சி மாறுகிறார் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகிவிட்டால், அதிலிருந்து மீள்வது எளிதல்ல.

அரசியலில் எதிரியைச் சமாளிப்பது எளிது; வாக்காளரின் சந்தேகத்தை சமாளிப்பது கடினம். நான் வெற்றி பெற்றேன்; என்ன வேண்டுமானாலும், செய்வேன் என்ற அரசியல் சிந்தனைக்குப் பதிலாக, மக்கள் என்னை நம்பி வெற்றி பெறச் செய்தார்கள். அதை நான் எப்படிக் காப்பாற்றுவது? என்ற சிந்தனை அரசியலில் வளர வேண்டும்.

தேர்தல் நாளில், வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளர் அவர் சார்ந்திருக்கும் கொள்கைக்கும், கட்சிக்கும், தேர்தல் அறிக்கைக்கும், அரசியல் நிலைப்பாட்டுக்கும் வாக்களிக்கிறார். அந்த வாக்கின் பலத்தில்தான் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராகிறார். ஆனால், தேர்தல் முடிந்த சில காலங்களிலேயே அரசியல் சூழ்நிலைகள் மாறுகின்றன. பதவி அல்லது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு கட்சிக்குத் தாவுகிறார்கள்.

இங்கே எழும் கேள்வி ஒன்றுதான்} வெற்றி பெற்றது வேட்பாளரா, கட்சியா, அந்தச் சின்னத்துக்கு வாக்களித்த மக்களா? ஒரு தொகுதியில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக களம் காண்கிறார். பிரசாரம் செய்கிறார்; கடைக்கோடி தொண்டர் முதல் மாவட்ட நிர்வாகி வரை இரவு} பகலாக உழைக்கிறார்கள். அந்த வெற்றிக்குப் பிறகு அவர் திடீரென தனது கட்சியை விட்டு விலகி, எதிரணியில் இணைந்தால் என்ன செய்வது?

சட்டப்பேரவை உறுப்பினர் ராஜிநாமா செய்யும்போது, ஆவணத்தில் கையொப்பமிடுகிறார்; அது சட்ட நடைமுறை. ஆனால், மக்களின் மனதில் அந்தக் கையொப்பம் வேறு பொருளைப் பெறலாம். அதனால் ஒரு பிரதிநிதி தனது பதவியை விட்டு விலகும் முன்பாக, சட்டத்தை மட்டும் பார்க்காமல், மக்களின் நம்பிக்கையையும் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துடன் நுழைந்த தேர்தல் அலுவலகம், இன்று மீண்டும் அதே இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. சூழல் மாறியிருக்கிறது, கையில் இருந்த கொடி மாறியிருக்கிறது, தோளில் இருந்த துண்டு மாறியிருக்கிறது, மேடையில் இருந்த தலைவர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், மாறாமல் இருப்பது வாக்காளரின் பார்வை. அதை எதிர்கொள்வதுதான் மிகப் பெரிய சவால். இதுவே தேர்தல் அரசியலின் நுட்பமான உளவியல்.

சங்க இலக்கியத்தில் மன்னனுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவு வெறும் ஆட்சியாளன்- குடிமகன் உறவாக இல்லை. மன்னன் மக்களைப் பாதுகாக்க வேண்டியவன். மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டியவன். புறநானூற்றுப் பாடல்களில் அரசனின் பெருமை அவனது அரண்மனையின் உயரத்தில் அளக்கப்படவில்லை; அவனது கொடை, நீதி, மக்கள் நலன் ஆகியவற்றில் அளக்கப்பட்டது. அதேபோல் நவீன ஜனநாயகத்திலும், சட்டப்பேரவை உறுப்பினரின்

உயரம் அவரது பதவியின் உயரத்தில் இல்லை. மக்கள் வைத்திருக்கும், நம்பிக்கையின் உயரத்தில்தான் இருக்கிறது.

வாக்காளர் கடந்த காலத்தை நினைவில் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறார். அதனால், தேர்தல் பிரசாரம் என்பது "எனக்கு வாக்களியுங்கள்' என்ற வேண்டுகோள் அல்ல. அது, நான் செய்ததை மறுபரிசீலனை செய்து, மீண்டும் என்னை நம்புங்கள் என்ற வேண்டுகோளாக மாறுகிறது. ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவது வாய்ப்பு. வெற்றி பெறுவது மக்களின் அருள். சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகிப்பது பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடமை. அந்தக் கடமையை பாதியில் விட்டுவிட்டு மீண்டும், அதே மக்களிடம் வந்து நிற்கும்போது, விளக்கம் அளிக்க வேண்டியது இயல்பானது.

ஏனெனில், மக்கள் ஒரு வேட்பாளரிடம் வெற்றியை மட்டும் கேட்பதில்லை. நம்பிக்கையையும் கேட்கிறார்கள். அதை ஒருமுறை பெற்றுவிட்டால், தொடர்ந்து பாதுகாப்பது அரசியல்வாதியின் மிகப் பெரிய பொறுப்பு. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால், அதை மீண்டும் சம்பாதிப்பது மிகவும் கடினம்.

எதிர்காலத்தில் ஒருவர் தன்னுடைய விருப்பத்தால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, அதன் காரணமாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானால், அந்தச் சூழலைக் கட்டுப்படுத்தும் வகையில் தகுதி நீக்கம், குறிப்பிட்ட காலத் தடை, கூடுதல் தேர்தல் செலவினப் பொறுப்பு உள்ளிட்ட சட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை நாடு தீவிரமாக விவாதிக்க வேண்டிய நேரம் இது.

ஒருவரின் அரசியல் பயணத்துக்காக தொகுதி மக்களின் உழைப்பு வீணாகக் கூடாது. பதவி ஆசைக்காக மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது. அரசியல் மாற்றத்துக்காக ஜனநாயகத்தின் நம்பிக்கை சிதையக் கூடாது. வாக்காளர்கள் விழித்தால் அரசியல் மாறும். அரசியல்வாதிகள்

பொறுப்புணர்ந்தால் ஜனநாயகம் வலுப்பெறும். சட்டம் கடுமையானால் மட்டும் போதாது. வாக்கின் மதிப்பை உணரும் அரசியல் பண்பாடு உருவாக வேண்டும். அப்போதுதான் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான கருவியாக இல்லாமல், மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் புனிதமான ஜனநாயகப் பொறுப்பாக மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.