FOLLOW US

ON GOOGLE DISCOVER

உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தேசத்தின் சிற்பிகளைப் போற்றுவோம்!

ஆசிரியர் தினம்' என்பது கடந்த கால ஆசிரியர்களை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல. நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் பொறுப்பை உணர்ந்து போற்றும் நாள்.

கோப்புப் படம்

Published On :34 வினாடிகள் முன்பு

-முனைவர் இளங்கோ கட்டிமுத்து

ண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவரும், கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர் சமூகத்துக்கு இந்தியா வழங்கும் உயர்ந்த மரியாதையாகும்.

ஆனால், ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும் மலர்களையும் பரிசுகளையும் வழங்கும் நாளாக மட்டும் அமைந்துவிடக் கூடாது.

"ஆசிரியர்' என்ற சொல்லுக்குள் மிகப் பெரிய பொறுப்பு அடங்கியுள்ளது. வெறும் ஏட்டுக் கல்வியைப் போதிப்பது மட்டும் ஆசிரியரின் பணி அல்ல; பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்றுக் கொடுத்து, தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறச் செய்வதுடன் ஆசிரியரின் கடமை முடிந்து விடாது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்பதையும் கற்றுத் தருவதே உண்மையான கல்வி.

ஒழுக்கம், நேர்மை, பொறுப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பிறரை மதிக்கும் பண்பு, தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவம், சமூக அக்கறை, மனிதநேயம் போன்ற வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகளையும் மாணவர்களிடம் வளர்ப்பது ஆசிரியரின் முக்கியப் பொறுப்பாகும். அதனால், ஆசிரியர் பணி ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஓர் அறப் பணி.

எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒரு மாணவரை மற்றொரு மாணவருடன் ஒப்பிடுவது கல்வியின் நோக்கம் அல்ல. இந்த மாணவருக்குள் இருக்கும் தனித் திறமை என்ன?, அதை எப்படி வெளிக்கொணர்வது? என்பதே ஆசிரியரின் சிந்தனையாக இருக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் கல்விச் சிந்தனையில், மனிதனுக்குள் ஏற்கெனவே இருக்கும் உயர்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கம் என்ற கருத்து முக்கியமானது. அவர் கூறிய "ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பிலேயே தெய்விகத் தன்மை கொண்டது' என்ற சிந்தனை, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள உயர்ந்த திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு நல்ல ஆசிரியர், "உன்னால் முடியாது' என்று மாணவரின் நம்பிக்கையை உடைப்பதில்லை. மாறாக, "முயற்சி செய்; உன்னால் முடியும்!' என்று அவனுக்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டுகிறார். அது மாணவரின் வாழ்க்கையையே மாற்றி விடும்.

இன்று நாம் வாழ்வது தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியின் காலம். இணையம், திறன்மிகு வகுப்பறை, எண்மக் கற்றல், இணையவழிக் கல்வி, செயற்கை நுண்ணறிவு போன்றவை கல்வியின் வாய்ப்புகளைப் பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. அதேநேரத்தில் தொழில்நுட்பம் ஒரு கருவி; அது ஆசிரியருக்கு மாற்று அல்ல. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தகவலை வழங்கலாம். ஆனால், அது சரியானதா என்பதை ஆராயும் சிந்தனையை வளர்ப்பது ஆசிரியரின் பணி.

இன்றைய உலகில் தனிப்பட்ட அறிவு மட்டும் போதாது. மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம், பிறருடைய கருத்துகளை மதிக்கும் பண்பு, குழுவாகச் செயல்படும் ஆற்றல் ஆகியவையும் அவசியம். வகுப்பறையில் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து செயல்திட்டங்களை மேற்கொள்ளச் செய்வது, ஒருவருக்கொருவர் உதவச் செய்வது, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற செயல்பாடுகள் அவர்களிடம் ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்பை வளர்க்கும். மாணவர்களின் வாழ்க்கையில் தோல்விக்கும் ஒரு முக்கியமான பங்கு உள்ளது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவது வாழ்க்கையின் முடிவு அல்ல. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுத் தர வேண்டும்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர் மட்டுமே திறமையானவர் அல்ல. தோல்வியை எதிர்கொள்பவர், முயற்சி செய்பவர், கேள்வி கேட்பவர், தவறிலிருந்து கற்றுக்கொள்பவர், மற்றவர்களுக்கு உதவுபவர், புதியதை முயற்சி செய்பவர் ஆகியோரும் சிறந்த மாணவர்களே. "நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகளை வகுப்பறைகளின் கடைசி இருக்கைகளில் காண முடியும்' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுவார்.

ஆசிரியர் பாடம் நடத்துவதுடன் மட்டுமல்லாமல், மாணவர்களின் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். மாணவரின் மதிப்பெண்களைப் பார்ப்பதற்கு முன்பு, அவரைப் பார்க்க வேண்டும். இதுவே ஆசிரியரின் மனிதநேய அணுகுமுறை.

மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகிய மூவரின் ஒத்துழைப்பு அவசியம். குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர். ஆசிரியர்கள் குழந்தையின் இரண்டாவது பெற்றோர். ஆசிரியர் குழந்தையின் திறமையை வளர்க்கும் வழிகாட்டி. மாணவர் தனது முயற்சியால் அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்றுபவர். இந்த மூவரும் இணைந்து செயல்பட்டால் கல்வியின் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.

ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளி வகுப்பறைகளில் உருவாகிறது. ஆசிரியர் மாணவரை உருவாக்குகிறார்; அந்த மாணவர் ஒரு குடும்பத்தை உயர்த்துகிறார்; பல குடும்பங்கள் ஒரு சமூகத்தை உயர்த்துகின்றன; நல்ல சமூகங்கள் ஒரு வலிமையான நாட்டை உருவாக்குகின்றன. இதனால்தான், ஆசிரியர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள். ஒரு நாட்டின் தரம், அதன் ஆசிரியர்களின் தரத்தைப் பொருத்தே அமைகிறது என்ற கருத்து, மிகுந்த பொருத்தம் பெறுகிறது.

"ஆசிரியர் தினம்' என்பது கடந்த கால ஆசிரியர்களை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல. நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் பொறுப்பை உணர்ந்து போற்றும் நாள். ஆசிரியரை மதிப்போம். கல்வியின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வோம். தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்துவோம். மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்போம். மனிதநேயத்துடன் கூடிய அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம். ஆசிரியர்கள் தேசத்தின் சிற்பிகள்- மாணவர்கள் தேசத்தின் எதிர்காலம். கல்வியே அந்த எதிர்காலத்தை இணைக்கும் பாலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.