ஆசானுக்கு சாமரம் வீசிய அரசன்!
இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள் என்கிறபோது, அவர்களை நல்ல குடிமக்களாக உயர்த்துவது ஆசிரியர்கள் அல்லவா?

கோப்புப் படம்
"தேசத்தின் எதிர்காலம் அதன் வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுகிறது' என்றார் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆனால், சாக்ளா குறிப்பிட்டது மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும்தான். வகுப்பறை என்பது மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் அங்கேதானே இருக்கிறார்கள்.
இன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும்போது நாம் மேற்சொன்ன அமர வாசகத்தின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள் என்கிறபோது, அவர்களை நல்ல குடிமக்களாக உயர்த்துவது ஆசிரியர்கள் அல்லவா? 80 வயதைத் தாண்டிய என் நண்பர் அண்மைக்காலம் வரை வாழ்ந்து வந்த தன் ஆசிரியர்களையும், குருபத்தினிகளையும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து வந்திருக்கிறார். மூன்று பேராசிரியர்களின் சாம்பல் சமுத்திரத்தில் கரைக்கப்படும்வரை கலந்து கொண்டிருக்கிறார். அதுதான் குருபக்தி, குரு சிஷ்ய பந்தம் என்பது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவந்த பிறகு ஆசிரியர்களை மறந்து விடுகிறார்கள் என்பதே உண்மை.
கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் படித்து பெரிய பட்டங்களைப் பெற்று உயர் அதிகாரிகளாக இருந்து வருபவர்களும் முன்னாள் மாணவர் சங்கத்தில் பேசும்போது தங்கள் பள்ளி ஆசிரியர்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். நானும் என் தலைமை ஆசிரியப் பெருந்தகை அண்ணா சுப்ரமண்ய ஐயரை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். பள்ளியை விட்டு வெளிவந்த பிறகும் அவரைச் சந்தித்து ஆசி பெற்று வந்திருக்கிறேன்.
ஆங்கிலத்தில் "புரோட்டோகால்' என்று ஒரு சொல் உண்டு. அதாவது இன்னாருக்கு அடுத்தபடி இன்னார் என்ற மரியாதை வரிசைப் பட்டியல் அது. அந்த வரிசையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது இந்திய மரபு; கவனிக்கவும், குருவுக்கு அடுத்த இடத்தில்தான் தெய்வம்.
24 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மிகப் பெரிய கலையரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் தலைமை வகிக்க, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி ஒரு தொழிலதிபர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட வரலாற்று நூலை வெளியிட, நான் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டேன். அந்த விழாவில் வரவேற்புரையை அடுத்து நூலாசிரியர் புத்தகங்களை அறிமுகப்படுத்திப் பேச அழைக்கப்பட்டார்.
"ஸ்ரீ குருப்யோ நமஹ' என்று தன் உரையைத் தொடங்கிய அவர், எல்லோரும் வியக்கும் படியாக விழாவுக்குத் தலைமை வகித்த குடியரசு முன்னாள் தலைவரின் பெயரை முதலில் குறிப்பிடவில்லை, தலைமை நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை. மாறாக, இங்கு வந்துள்ள என் இரண்டு ஆங்கிலப் பேராசிரியர்களான ஆர். ராஜரத்தினத்துக்கும், டி. சிவசங்கரனுக்கும் என் நமஸ்காரத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகே மாண்பமை முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்களே, தலைமை நீதிபதி அவர்களே என்று பேசத் தொடங்கினார்.
எல்லோருக்கும் அது வியப்பாக இருந்தது. கூட்டம் முடிந்த பிறகு அவரிடம் சில நண்பர்கள் இது "புரோட்டோகால் இல்லையே' என்று கேட்டார்கள். அவர் மாதா, பிதா, குரு என்ற வரிசைப்படி இதுதான் நம் "புரோட்டோகால்' என்று சொல்லிவிட்டார். நூலாசிரியர் ஒரு பழைய சம்பவத்தைச் சொன்னார். பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு ஆடம் ஸ்மித் குறித்து நன்றாகத் தெரிந்திருக்கும். மேல்நாடுகளில் அவர்தான் "பொருளாதாரத் தந்தை' என்று போற்றப்படுகிறார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அது.
ஆடம் ஸ்மித் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நீதியியல் பேராசிரியராக இருந்தவர். அப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்தே நேரடியாக ஊதியம் பெறுவது வழக்கம். ஒருமுறை அரச குடும்பத்தின் இளம் உறுப்பினர் ஒருவரை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு ஆடம் ஸ்மித் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அரச குடும்பத்துப் பணி. எனவே, ஆடம் ஸ்மித் அதை தட்டிக் கழிக்க விரும்பவில்லை.
அந்தப் பணியை ஏற்றுக்கொண்டபோது ஏற்கெனவே மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கல்விக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்தார். எந்த மாணவரும் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற விரும்பவில்லை. எல்லோரும் "ஐயா, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ கற்பித்திருக்கிறீர்கள். மேலும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். இந்தப் பணம் தங்களுக்கே சொந்தமானது. அதற்குத் தகுதியும் உரிமையும் உடையவர் தாங்கள்' என்று சொல்லிவிட்டார்கள்.
ஆடம் ஸ்மித்தின் முதுமைக் காலத்தில் அவரை பிரதமர் ஜூனியர் பிட் விருந்துக்கு அழைத்திருந்தார். அவரைக் கெளரவிப்பதற்காக பல அறிஞர்களையும் பிரபுக்களையும் அழைத்திருந்தார்.
பிரதமர் தன் வீட்டு வாசலில் காத்திருந்து ஆடம் ஸ்மித்தை வரவேற்றார். ஆடம் ஸ்மித் அறையில் நுழைந்ததும் பெரிய மனிதர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள். "எல்லோரும் அமருங்கள்' என்றார் ஆடம் ஸ்மித். யாரும் அமரவில்லை. அப்போது பிரதமர் சொன்னார், "எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களே, நாங்கள் எல்லோரும் உங்கள் மாணவர்கள். நீங்கள் அமர்ந்த பிறகே நாங்கள் அமர்வோம்' என்றார்கள். அதன்படி, ஆடம் ஸ்மித் உட்கார்ந்த பிறகே எல்லோரும் உட்கார்ந்தார்கள்; ஆட்சிப் பீடம் அறிவாளிக்குச் செய்த மரியாதை அது!
அன்று ஆடம் ஸ்மித்துக்கு அரச குடும்பம் கொடுத்த மரியாதையையே இன்று நான் என் பேராசிரியர்களுக்குக் கொடுத்தேன். இதைக் கேட்ட நூலாசிரியரின் நண்பர்கள் மரபு மீறல் பற்றி எதுவும் பேசவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போன்ற ஒரு நிகழ்வு நம் தமிழ்நாட்டிலும் நடைபெற்றது. "மோசிகீரனார்' என்று ஒரு புலவர் வெயில் வேளையில் அலுத்துக் களைத்துப் போய் சேர மன்னனைப் பார்க்க வந்தார். மன்னன் அரசவையிலிருந்து உள்பகுதிக்கு வரக்கூடிய நேரம். அங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த மோசிகீரனார், உடல் அசதி காரணமாக அருகில் இருந்த ஒரு கட்டிலில் உட்கார்ந்தார்; தூக்கம் வந்தது, அப்படியே கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டார்.
அது சாதாரணக் கட்டில் அல்ல. முரசு வைக்கப்படும் கட்டில். செங்கோல் போல், சிம்மாசனம் போல் முரசுக் கட்டிலுக்கும் ராஜ மரியாதை உண்டு. முரசறையும் சமயங்களில், முரசு வெளியே இருக்கும். அப்போது கட்டில் காலியாக இருக்கும். இந்த மரபு புலவருக்குத் தெரியும். ஆனால், அப்போது இருந்த சோர்வில் அது முரசுக் கட்டில் என்பதை அவர் கவனிக்கவில்லை, அதிலேயே தூங்கிவிட்டார்.
மந்திரி பெருமக்கள், சேவகர்கள் புடை சூழ மன்னன் உள் அறைக்கு வந்தபோது, முரசுக் கட்டிலில் 3 பேர் தூங்குவதா என்று நினைத்த சேவகர்கள் ஈட்டியுடன் அந்த நபர் மீது பாயப் போனார்கள்! அது புலவர் மோசிகீரனார் என்று அடையாளம் கண்டு கொண்ட சேர மன்னன் சேவகர்களைத் தடுத்து நிறுத்தினான். மன்னன் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. புலவருக்கு வியர்க்காமல் இருக்க விழித்து எழும்வரை அவருக்குத் தானே சாமரம் வீசிக் கொண்டிருந்தான்.
எழுந்த புலவர் அரண்டு போய் மன்னன் தனக்கு சாமரம் வீசுகிறானே என்று அதிர்ந்தார். இப்படிப் புலவருக்கு சாமரம் வீசி அறிவுக்கு மரியாதை செய்த மன்னர்கள், நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆடம் ஸ்மித் பெற்றதைவிட அதிகமான கெளரவத்தைப் பெற்றவர் நம் புலவர் மோசிகீரனார்.
இதேபோல் தன் குருநாதரான பரசுராமருக்குத் தூக்கம் வந்தபோது அவரைத் தன் மடிமீது கிடத்தித் தூங்கச் செய்தான் மாவீரன் கர்ணன். அப்போது ஒரு காட்டு வண்டு கர்ணனின் தொடையைக் கடித்துக் குடைந்தது; ரத்தம் பெருகியது; வலியைப் பொறுத்துக்கொண்ட கர்ணன் அசையவில்லை; முனகவில்லை; அசைந்தால் தன் குருநாதரின் தூக்கம் கலைந்துவிடும் என்று நினைத்தான். குருபக்திக்கு உதாரணங்களாக எடுத்துச் சொல்ல இது போன்ற பல நிகழ்ச்சிகள் உண்டு.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தன் கல்லூரியில் இளநிலை ஆசிரியராகப் பணியேற்ற ஓர் இளைஞரிடம் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் ஏ.விஸ்வேஸ்வரன் சொன்ன அறிவுரை: "நாம் மனிதர்களாக இருப்பதால் சில காரியங்களைச் செய்யக் கூடாது. ஆசிரியர்களாக இருப்பதால் அதற்கு மேலும் சில காரியங்களைச் செய்யக் கூடாது. அதுதான் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கட்டுப்பாடு'.
சர்வதேச புகழ்பெற்ற நம் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நினைவில் கொள்ளும் இந்த ஆசிரியர் தின நாளில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை என்றும் மதிக்க வேண்டும், ஆசிரியர்களும் மதிப்புக்குரியவராக நடந்துகொள்ள வேண்டும் என்பதே நம் சமூகத்தின் எதிர்பார்ப்பு.
இன்று (செப். 5)
தேசிய ஆசிரியர் தினம்.
கட்டுரையாளர்:
கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




